கொல்கத்தா அணிக் கப்டன் சௌரவ் கங்குலியின் நடவடிக்கை குறித்து ராஜஸ்தான் அணிக் கப்டன் ஷேன் வோர்ன் கடும் சீற்றமடைந்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் அணியின் கப்டன் ஷேன் வோர்ன் ஆவேசமாகக் கூறியதாவது;
இந்த ஆட்டத்தின் தொடக்கம் எனக்கு மிகுந்த ஏமாற்றமளித்தது. கொல்கத்தா வீரர்களின் வருகைக்காக சுட்டெரிக்கும் வெயிலில் நாங்கள் 5 நிமிடங்கள் மைதானத்தில் காத்திருந்தோம். இது பற்றி நாங்கள் புகார் செய்யத்தான் இருக்கிறோம். துடுப்பாட்டம் செய்ய களமிறங்கிய கங்குலிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் நான் உண்மையிலேயே ஏமாற்றத்திற்குள்ளானேன்.
கங்குலி தனது சொந்தத் தேவைக்காக இந்த நேரத்தை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு அணியும் இனிங்ஸில் தலா ஒரு மணி 20 நிமிடங்கள் தான் ஆட வேண்டும். ஆனால் அவருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம். அந்தச் சமயத்தில் அவர் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியாது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இதற்காக அவர் கூடுதல் நேரம் கேட்டதாகவும் தெரிவித்தார்.
கங்குலி 49 ஓட்டங்களில் இருந்த போது யூசுப் பதான் தூக்கியடித்த பந்தை ` டீப் மிட்விக்கெட்'டில் நின்ற ஸ்மித், கீழே விழுந்து பிடித்தார். ராஜஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியை கொண்டாட, கங்குலி பந்து தரையில் பட்டு விட்டதாக நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து 3 ஆவது நடுவருக்கு சென்றது. இதில் சந்தேகத்தின் பலன் கங்குலிக்கு சாதமாக அளிக்கப்பட்டது.
இது பற்றி குறிப்பிட்ட வோர்ன், `ஸ்மித், இடது பக்க நடுவர் ருடி கொயர்ட்சன் ஆகியோர் அது சரியான `கட்ச்' என் சொன்ன போதும், கங்குலி 3 ஆவது நடுவருக்கு விட வேண்டுமென்று கேட்டார். ஆனால் கட்சில் சந்தேகம் இல்லாததால் அதற்கு நாங்கள் அனுமதிக்க வில்லை. கங்குலி சரியான உத்வேகத்துடன் விளையாடவில்லை. போட்டி உனக்காக நடத்தப்படவில்லை யென்று அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.