எம்.ஏ.எம்.நிலாம்
உலகில் அமைதி, சமாதானம் என்பது பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உலகெங்குமுள்ள மதத் தலைவர்களை ஒன்றிணைத்து உலக சமாதானத்துக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக சமாதானத்துக்கான மதத் தலைவர்களுக்கிடையேயான உலக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் 120 நாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பரந்த மனப்போக்குக் கொண்ட அமைப்பின் 121 ஆவது கிளை இலங்கையில் கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள மதத்தலைவர்களை ஒன்றிணைத்து கண்டியிலும் திருகோணமலையிலும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் பௌத்த, இந்து , இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் தலைவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.
கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையிலான இலங்கைத் தேசிய சமாதானப் பேரவையும் உலக சமாதான அமைப்பின் இலங்கைப் பணிப்பாளரான கிங்ஸ்லி ரொட்ரிகோ ஆகியோரின் அயராத முயற்சி காரணமாக மிகக் குறுகிய காலத்துக்குள் இலங்கையில் இந்த அமைப்பை தோற்றுவிக்க முடிந்துள்ளது.
இந்த உலக சமாதானத்துக்கான மதத்தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான் , நியூயோர்க் , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மதத் தலைவர்களும் சமாதான ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாரதத்தின் தேசபிதாவான அகிம்சாமூர்த்தி அண்ணல் மகாத்மா காந்தியின் பேத்தியான தென்னாபிரிக்க பாராளுமன்ற உறுப்பினரும் உலக சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வருபவருமான எலாகாந்தி அம்மையார் முதற்றடவையாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். கண்டியிலும் திருகோணமலையிலும் சமாதான மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு வந்த அவரிடம் உலக சமாதான நெருக்கடி, இலங்கை இன நெருக்கடிக்கான சமாதான முயற்சிகள் பற்றிக் கேட்டபோது இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு வெளிச்சக்திகளை மட்டும் நம்பி இருப்பதால் பயன் ஏற்படப் போவதில்லை எனவும் பிரச்சினையோடு தொடர்புபட்ட அனைத்துச் சக்திகளும் மனம் திறந்த நிலையில் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டுமே அமைதி, சமாதானம் சாத்தியப்பட முடியுமெனத் தெரிவித்தார்.
வெளிச்சக்திகளால் அவர்களுக்கு அழுத்தங்களை மட்டுமே கொடுக்க முடியும். எமது உலக சமாதானத்துக்கான மதத்தலைவர்களின் மாநாடு கூட அதையே செய்ய முனைகின்றது எனத் தெரிவித்தார்.
ஆயுதங்கள் மூலம் எந்த வெற்றியையும் எட்ட முடியாதெனவும் அன்பு, அகிம்சை, புரிந்துணர்வு , விட்டுக் கொடுப்பு போன்றவற்றினூடாக வெற்றி கொள்ள முடியாத எந்தச் சவாலும் இருக்க முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மக்கள் அனைவருமே கூடிய விரைவில் இந்த மண்ணில் அமைதியும் சமாதானமும் எட்டப்பட வேண்டுமென்பதில் அவாக் கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதனடிப்படையில் அனைத்துத் தரப்புகளுடனும் கலந்துரையாடவும் அழுத்தங்களைக் கொடுக்கவும் நாம் எண்ணுகின்றோம் எனவும் எலாகாந்தி குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் மட்டுமோ ஏனைய அரசியல் கட்சிகளுடன் மட்டுமோ பேசுவதால் ஒரு இணக்கப்பாட்டை எட்ட முடியுமென நாம் எதிர்பார்க்கவில்லை. விடுதலைப் புலிகளுடனும் நாம் பேசியாக வேண்டும். அதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.
எமது இந்த அமைப்பினூடாக எந்தளவுக்கு சமாதானத்துக்கான முயற்சிகளை முன்கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு தூரத்துக்கு தீவிரமாகச் செயற்படுவோம் . எவரிடமும் எதனையும் திணிக்கும் நோக்கமோ எண்ணமோ எம்மிடம் கிடையாது. ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் மட்டுமே எம்மால் வழங்க முடியும். சமாதானத் தீர்வை தேடிக்கொள்வது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.
இங்குள்ள மக்களோ, அதிகாரத்திலுள்ளவர்களோ தொடர்ந்தும் பிளவு பட்டுக்கொண்டிருந்தால் இந்த அழகான நாடு அழிந்து போகும் நிலை ஏற்படலாமெனவும் அவர் எச்சரித்தார். இன்று இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவருமே தொடரும் போர் காரணமாக களைப்புற்றிருக்கின்றனர். அவர்கள் அமைதி, சமாதானத்துக்காக ஏங்குவதையே எங்கு போனாலும் காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
சமாதானத் தீர்வை உடனடியாக எட்ட முடியாதிருப்பினும் இலங்கை மக்கள் தமக்கு விரைவாக சமாதானம் வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்களுக்கிடையில் இணக்கம் காணப்படுவதில் காலம் கடந்து கொண்டே போகின்றது. இன்று பேசி நாளை தீர்வு என்று எம்மால் உறுதியளிக்க முடியாது. ஆனால் எல்லாத் தரப்புக்களையும் இணக்கப்படுத்துவதில் நாம் கூடுதல் அக்கறை காட்டவேண்டியுள்ளது.
எமது அமைப்பு சமய வழியில் அமைதி தேடமுடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சிகளை முன்கொண்டு வருகின்றது.
அரசாங்கத்துடன் பேசவிருக்கின்றோம், அத்துடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட மேலும் பல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவிருக்கின்றோம். இவற்றுக்கப்பால் விடுதலைப் புலிகளுடனும் பேசியாக வேண்டும். நிச்சயமாக அவர்களுடனும் பேசுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இலங்கையின் பிரச்சினைக்கு வன்முறைகளற்ற தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அந்த நம்பிக்கையுடனேயே இந்த முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளோம் எனவும் எலா காந்தி தெரிவித்தார்.