Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
[04 - May - 2008] [Font Size - A - A - A]
த.மனோகரன்

உலகில் வழக்கிலுள்ள மொழிகளில் தமிழ் மொழி தொன்மையானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் அமைந்த செம்மொழியாகவும் நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றது. அதுமட்டுமல்ல அறமொழி, அருள்மொழி, ஞானமொழி, ஆன்மீக மொழி, வாழ்வியல் மொழி என்று செந்தமிழ் மொழியைப் போற்றக் கூடிய தகைமை கொண்டது நம் தாய் மொழி.

ஆம். உலகிலுள்ள சகல சமய அறக் கருத்துகளையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் ஒரே மொழி தமிழேயன்றி வேறில்லை. இந்து, பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று உலகிலுள்ள பெரும்பாலான சமயங்களின் தத்துவங்களை இலக்கியமாகக் கொண்டு உலகப் பொது மொழிக்குரிய இலக்கணமாக உலகின் சகல மக்களது நம்பிக்கையையும் அடக்கியதாக தமிழ் மொழி உள்ளமை பற்றி பெருமையுடன் நோக்க வேண்டும். தமிழ் மொழிக்கேயுரிய இச் சிறப்பை எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்துள்ளனர்?

இந்நிலையிலே, உலக அரங்கிலே தமிழ் மொழியின் நிலையென்ன?, தமிழர்கள் தொடர்பான கணிப்பீடு என்ன என்பதை மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும். அதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் உலக அரங்கிலுள்ள அங்கீகாரம் எந்த வகையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

உலகிலே வழக்கிலுள்ள மொழிகள் ஆயிரத்தையும் தாண்டியவை. அவற்றிலே பேச்சு வழக்கில் மட்டும் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளும் அடங்குகின்றன. மக்கள் தொகையின் அடிப்படையிலே அதாவது குறிப்பிட்ட மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாகிய தமிழர்கள் முதல் இருபது இடங்களுக்குள் அடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

ஆம். உலகில் மொழியடிப்படையிலேயான கணிப்பீட்டின் படி தமிழர்கள் பதினேழாவது இடத்திலுள்ளனர்.

உலகின் மொழிகள் தொடர்பான ஆராய்ச்சி செய்யும் முன்னணி நிறுவனமான அமெரிக்க மொழியியல் நிறுவனம் (AMARIKAN'S SUMMER LINGUISTCS INSTITIUTE) இக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன் 2005/2006 ஆம் ஆண்டின் வெளியீட்டிலேயே இது பதியப்பட்டுள்ளது. "எத்னோலொக்" (ETHNOLOGUE) என்ற அவ்வெளியீட்டில் உலக அரங்கில் தமிழரின் இருப்பின் அளவு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, அமெரிக்க மத்திய உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ.யும் இதனை உறுதிப்படுத்தியுள்ளமை நோக்கிற்குரியது. மேற்படி உளவு நிறுவனத்தின் உலக விபரத்திரட்டு நூலான (THE WORLD FACT BOOK) `த வேல்ட் பக்ட் புக்'கிலும்' இது கூறப்பட்டுள்ளது.

இதே மதிப்பீட்டை என்கார்டா (ENCARTA) என்ற கலைக்களஞ்சியத்திலும் காணக்கூடியதாகவுள்ளமை எண்ணிக்கை தரப்படுத்தலை மேலும் உறுதி செய்கின்றது.

மேற்படி கணிப்பீடுகளின் படி இந்தியாவின் தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், ரீயூனியன், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலுமுள்ள தமிழர்களே கணக்கிடப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அறுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதேபோல் மும்பாய், புதுடில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களிலும் கேரள மாநிலத்திலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர்.

அதாவது, இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு வெளியே சுமார் ஒன்றரைக் கோடி தமிழர்கள் வாழ்வதாகக் கூறப்படுகின்றது.

அதேபோல், தென்கிழக்காசிய நாடுகளிலே அதாவது மலேஷியா, சிங்கப்பூர் தவிர்ந்த நாடுகளிலும் பெருமளவு தமிழ்வம்சாவளிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். இவ்வாறு துல்லியமாகக் கணக்கீட்டை மேற்கொள்ளுமிடத்து தமிழர்கள் உலக சனத் தொகை எண்ணிக்கைத் தரப்படுத்தல் வரிசையில் முதல் பத்து இடங்களில் இடம் பெறுவது உறுதியாகும்.

நாடுகளில் சிறபான்மையாக வாழ்ந்தாலும் உலக அரங்கிலே நாம் சிறுபான்மையினரல்ல, கணிப்புக்குரிய மதிக்கப்படும் இடத்தினுள்ளோம் என்பதையிட்டு ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படலாம். `தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'என்ற கூற்றிற்கமைய தலைநிமிர்ந்து நிற்கும் தகுதி உலகத்தில் தமிழருக்கு உண்டு.

மேற் கூறப்பட்ட கணிப்பீடுகளில் குறிப்பிட்ட மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே உள்ளடங்கியுள்ளனர். மொழி தெரிந்தவர்கள் என்ற கணிப்பீடு செய்யப்படவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கையில் தமிழர்கள் என்று கணீப்பீடு செய்யப் பட்டபோது தமிழ் பேசுவோர் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக இனத் தொகுப்பு வருமாறு அமைகின்றது. முதல் இருபது இடங்களில் இடம்பிடித்த இனங்களின் தரப்படுத்தல் இவ்வாறுள்ளது.

மொழி எண்ணிக்கை (கோடியில்)

1. மண்டரின் (MADARIN) 87.3 (சீனாவில் உள்ளது)

2. ஸ்பானிய மொழி 32.2

3. ஆங்கிலம் 30.9

4. அரபு 20.6

5. ஹிந்தி 18.1

6. போர்த்துக்கேய மொழி 17.7

7. வங்காளி 17.1

8. ரஷ்ய மொழி 14.5

9. ஜப்பானிய மொழி 12.2

10. ஜேர்மன் 09.5

11. வூ(ஙிக்) சீன மொழிகளிலொன்று 07.7

12. ஜாவாமொழி 07.5

13. தெலுங்கு 07

14. மராட்டி 06.8

15. வியட்நாமிய மொழி 06.75

16. கொரியன் 06.7

17. தமிழ் 06.6

18. பிரெஞ்சு 06.5

19. இத்தாலியன் 06.2

20. பஞ்சாபி 06.1

இலங்கையில் மட்டுமுள்ள சிங்களமொழி 1.3 கோடி மக்களைக் கொண்டதாகத் தரப்படுத்தல் வரிசையில் அறுபத்து மூன்றாவது இடத்திலுள்ளது, சிங்களமொழி பற்றிக் குறிப்பிடும் போது இந்தோ யூரோபியன், இந்தோ ஈரானியன், இந்தோ ஆரியன் ஆகிய மொழிகளின் கலப்பு மொழியாகக் காட்டப்பட்டுள்ளது, திராவிட மொழிகள் குறிப்பாக தமிழ் மொழிக் கலப்பு சுட்டிக்காட்டப்படாதிருப்பது குறையாகவுள்ளது.

அழிந்து வரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று சிலர் கூறுகின்றனர். மெல்லத்தமிழ் இனிச் சாகும் என்று உலக அரங்கில் நமது மொழியின் சிறப்பைப் பற்றித் தெரியாதவர்கள் புலம்புகின்றனர்.

சரியாக மதிப்பீடு செய்வதானால் உலகின் ஐந்து கண்டங்களிலும் வியாபித்துள்ள மொழிகளில் ஆங்கிலத்திற்கடுத்த இரண்டாம் இடம் தமிழுக்கே உண்டு என்று துணிந்து கூறலாம். `தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் அவா இன்று நிதர்சனமாகிவிட்டது என்றால் அதுவே உண்மை.

உலக அரங்கிலே பழம் பெருமையுடன் துலங்கும் தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதை உணர்ந்து செயல்பட உலகத் தமிழர் மத்தியிலே விழிப்புணர்வு ஏற்பட ஏற்றவற்றை தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல் வாதிகள், சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அதுவே காலத்தின் தேவையாகும்.

யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை என்பது போல் தமிழர்களும் உலக அரங்கில் தமக்குரிய உயர்கணிப்பை அறியாதிருக்கின்றனர்.

உலக அரங்கில் கணிப்புக்குரிய மொழியின் உரித்தாளிகளான தமிழர்களையே தமிழ் மொழியையோ அவர்களது உணர்வுகளையே உலகத்தால் புறந்தள்ளி விட முடியாது என்பதற்கு தமிழர்களின் தரப்படுத்தல் வரிசையில் பெற்றுள்ள இடமே சான்று.

Email this page Your Opinion Print this page
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி
கிழக்கு தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்குமா?
இலங்கை விவகாரத்தில் டில்லியை பகைத்துக் கொள்ள விரும்பாத ஈரான்
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு
மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் குடும்ப நலனும்
மலையகத்திலும் போர் மேகங்கள்: கட்டளையிடும் அதிகாரி நியமனம்
கிழக்கு முஸ்லிம் - தமிழர்களிடையே இடைவெளியை உருவாக்க சதி!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்?
தமிழ் பேசும் சமூகங்களுக்கு அரசு செய்து வரும் பாதகச் செயலுக்கு பதிலளிக்கும் கடப்பாடு எமக்குண்டு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
உலக சமாதானத்துக்கு குரல் கொடுக்க மதத் தலைவர்களிடையேயான அமைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com