*கதிரைகளுக்காக அரசியல் செய்யவில்லை; ஹக்கீம் கூறுகிறார்
அக்கிரமக்காரர்களுக்கு நாங்கள் அடங்காப்பிடாரிகள் என்பதை எமது அரசியல் எதிரிகள் அறிந்து கொள்ளட்டும். எம்மை அடக்கி ஆள நினைக்கின்றவர்களுக்கு எமது உறுதியானதும் நேர்மையானதுமான அரசியல் மூலம் நாம் பதில் சொல்ல முடியும்.சக தமிழ் மக்கள் தங்களுடைய போராட்டம் நலிவுற்றிருக்கிறது என்று அஞ்ச வேண்டிய அவசியமில்லை. வடக்கில் போர் முனையில் நடக்கும் சாகசங்கள் எதுவாக இருந்தாலும் இன்று கிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் அநாதரவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பார்வை இருக்கிறது. எனவே, முஸ்லிம்களின் அரசியல் இயக்கம் தனது போராட்டத்தில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு அரணாக செயற்படுகின்ற கடமையைச் செய்ய வேண்டி இருக்கிறது. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திருகோணமலை மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இறக்கக் கண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.
குச்சவெளி ஜெய்க்கா வீடமைப்புத் திட்டப்பகுதியிலும் நிலாவெளி 8 ஆம் கட்டையிலும், ஜின்னா நகரிலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிரந்தரமான சகவாழ்வு , சௌஜன்யம், இயல்பு வாழ்க்கை என்பது சகலருக்குமே அவசியமானது. தமிழ் மக்கள் அவதிப்படுகின்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றபோதும் நாமும் அதனால் பாதிக்கப்படுகிறோம். யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கின்றபோது எம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு நிச்சயமாக இந்தப் பேரினவாத அரசாங்கம் பல தடைகளைப் போடத்தான் செய்யும் என்றும் அவர் இறக்க கண்டிப் பொதுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கூறியதாவது;
"நிரந்தரமான நிம்மதி நிறைந்த வாழ்க்கை நிச்சயமாக சமாதானத்தின் மூலம் தான் வரமுடியும். அது கௌரவமாக வர வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். வழமையாக தேர்தல் காலங்களில் கொண்டு வரப்படும் யானை- புலி ஒப்பந்தம் பற்றிய பிரசாரத்துடன் இன்னுமொன்று இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசுடன் இருக்கும் சகபாடிகளுக்கு தாங்கள் நினைத்தபடி இத்தேர்தலில் வெல்லமுடியாது என்று தெரிந்தவுடன் ஒருவித வெறியுடன் இதனை ஆரம்பித்திருக்கிறார்கள். யானை-புலியுடன் இப்போது ஒட்டகமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. யானை, புலி, ஒட்டகம் மூன்றும் சேர்ந்து கிழக்கில் அரசாங்கம் பெற்ற வெற்றியை குழியில் போடப்போவதாக கதை விடுகிறார்கள்.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் சவூதி அரேபியாவுக்குப் போக வேண்டும் என்று சொன்ன அதே மேதானந்த தேரர் ஒட்டகம் என்று இங்கு குறிப்பது முஸ்லிம்களையே. சிங்கள மக்கள் மத்தியில் இன உணர்வுகளை மூட்டியும் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறியும் உணர்வுகளிலேயே அரசியல் செய்யும் சகபாடிகள் தான் இன்று அரசில் இருக்கின்றனர்.
மு.காங்கிரஸ் தலைவரே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால் அரசாங்கமும் இப்படிப்பட்ட மாற்றுத்தரப்புகளும் இப்போது பீதியடைந்துள்ளன. எமது கட்சியின் அரசியல் அணுகுமுறை நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் ஏற்படுத்தவிருக்கிறது என்பதே இதற்குக் காரணமாகும்.
கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டுப் போனவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நிகழ்வுகள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்று கூறுமளவுக்கு எமது கட்சிக்குள் நயவஞ்சகங்கள் நடந்திருக்கின்ற நிலையில் மரச்சின்னத்தை விட்டு யானைச் சின்னத்தில் நாம் போட்டியிடுவது பற்றி எதிர்த்தரப்புக்குள்ள வருத்தம் இலேசுப்பட்டதல்ல. நாம் எடுத்த இம்முடிவு அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது. எனவே, கட்சி எடுத்த தீர்மானத்தில் நன்மை இருக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அதிகாரர்களை விஞ்சிய சதிகாரன் இறைவன். எனவே , சதிவலை விரித்தவர்களே அந்த வலையில் விழுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. திருகோணமலையில் அண்மையில் எமக்குத் துரோகம் இழைத்தவரை ஆரம்பத்திலேயே மூதூர் மக்கள் நிராகரித்து விட்டிருக்கும் நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு உரிய தண்டனையை காத்தான்குடி மக்கள் விரைவில் புகட்ட இருக்கிறார்கள்.
கட்சியின் சார்பில் போட்டியிட்டு கட்சியை கருவறுத்துப்போன ரிசாத் பதியுதீனும் எமது தலைவர் மறைந்த பிறகு சந்திரிகாவுடன் சங்கமமாகி கட்சிக்குத் துரோகம் இழைத்த பேரியல் அம்மையாரும் இக்கட்சி மூலமாகவே தனக்குரிய அரசியல் அடையாளத்தை எடுத்துக் கொண்ட அதாவுல்லாவும் ஏனையவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டிருக்க வேண்டும் என்று போலியான கவலையுடன் பேசுகின்றனர்.
இன்று கிழக்கிலுள்ள அச்சுறுத்தல், பாதுகாப்பற்ற சூழல் இல்லாதிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களத்தில் இருந்திருக்குமானால் மு.கா.வும் தயக்கமின்றி தனித்துப் போட்டியிட்டிருக்க முடியும். ஆனால், அப்பாவித் தமிழர்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்காக ஆயுதக் குழுவை வைத்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் அரசின் அக்கிரமத்துக்கு துணைபோகின்ற ஒரு கட்சியாக மு.கா.இருக்க முடியாது.
ஐ.தே.க- மு.கா. அணி வெற்றிபெறப்போவது குறித்து அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்திக் கூறியுள்ள நிலையில், தமிழ் மக்களும் இது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மு.கா.தலைவர் எடுத்த முடிவு சொந்த சுயலாபத்துக்கு எடுத்த முடிவல்ல என்று அடையாளம் கண்டிருப்பார்கள்.
மு.காங்கிரஸ் எடுத்த முடிவும் அதுகுறித்த பார்வையும் சாமான்யமானதல்ல. ஆட்சி அதிகாரமும் முதலமைச்சர் பதவிக் கதிரை பற்றிய அதீத ஆசையும் மிக ஆபத்தானவை. ஆனால், சமூகத்துக்காக இதனை அடையப் போகிறோம் என்ற ஆனந்தம் கண்களை மறைக்கலாம்.
ஆனால், அக்கதிரையில் உட்கார நினைக்கிற எந்த முஸ்லிமாக இருந்தாலும் அதிலுள்ள மிகப்பெரிய பொறுப்புணர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் வெறும் அரசியல் நோக்கத்துக்காக முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் என்று பேசுவது விபரீதமானது. ஏனெனில், இவ்விடயம் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் அணுக வேண்டிய விடயமாகும். இப்பதவி யாரிடமிருந்தும் தட்டிப்பறிக்கும் விடயமல்ல. மிக இலகுவாக இதனைத் தட்டிப் பறிக்கலாம் என்பதற்காக பிள்ளையானுடனும் வெற்றிலைக் கூட்டத்துடனும் கட்சிக்கு துரோகம் இழைத்த கூட்டத்துடனும் நாமும் போய் இணைந்து வக்கில்லாத போராட்டத்தினை செய்ய நாம் தயாராக இருக்கவில்லை. செய்ய முடியாது.
கிழக்கில் உள்ள எல்லா முஸ்லிம்களும் முழுமையாக ஒற்றுமைப்பட்டாலும் அக்கதிரையை அடைவது சற்று அசாத்தியமானது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் வகுத்த வியூகம் இக்கிழக்கின் ஆட்சியை அரசை அடையவிடாமல் தடுப்பதாகும். இந்த அராஜக அரசை அதன் முயற்சியில் இருந்து முறியடிக்க வேண்டும் என்பது முதலாவது விடயமாகும். அதற்குப் பிறகுதான் அதனை நாம் அடைவது என்ற விடயம் அமைகிறது.
கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் எமது நிலங்கள் அபகரிக்கப்படும்போது அமைச்சுப் பதவிகளிலேயே தஞ்சமடைந்து சிறிதேனும் பேசும் வக்கில்லாதவர்களாக இருந்தார்கள்.
ஆனால், நான் எதிர்த்துப் பேசும் போது அவர்களுக்கு ஜனாதிபதியை எதிர்த்துப் பேசும் தைரியம் அற்றவர்களாக இருந்தார்கள்.
`ரவூப் ஹக்கீம் பாராளுமன்றக் கதிரையையும் தூக்கி எறிந்து விட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார்' என்ற செய்தி ஜனாதிபதிக்கு பெரிய திடுக்கிடும் செய்தியாக வந்ததாம். அவர் அலரிமாளிகையில் அலறியிருக்கிறார். `அதாவுல்லாவுக்கும் பேரியலுக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தேனே. அந்த மனிதர் பாராளுமன்றத்தை விட்டுப் போய் விட்டாரே. ஏன் இவர்களுக்கு இதுபோல செய்ய முடியாது. நான் தான் நிறைய வாக்குறுதிகளை அவர்களுக்கு வழங்கியிருக்கிறேனே. நான் முழு ஒத்துழைப்பையும் அவர்களுக்கு வழங்கியிருப்பேனே' என்றெல்லாம் அவர் கோபத்தோடு பேசியிருக்கிறாராம்.
இந்த அமைச்சர்களாவது விலகுவதாவது! விலகுவதற்கு இவர்களுக்குத் தைரியம் வருமா? ஆனால் இப்போது நான் இங்கு போட்டியிடுவது பற்றி குறை கூறித் திரிகிறார்கள். இக்கட்சியில் இருந்து பதவி ஆசையில் பாய்ந்து சென்றவர்கள் எல்லோரும் நான் மரச்சின்னத்தை ரணிலுக்கு விற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இது என்ன கதை?
ஒவ்வொரு தேர்தலிலும் வித்தியாசமான வியூகங்களை வகுத்தவர்கள் நாம். தேவை ஏற்படும் போது மரச்சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறோம். ஐ.தே.கட்சிக்காரர்களையும் மரச்சின்னத்தின் சார்பில் போட்டியிட வைத்திருக்கிறோம். பொத்துவிலில் பத்து முஸ்லிம்களுக்கு எதிரான படுபாதக கொலைகள் நிகழ்ந்தபோதும் அதனைப் பற்றி பேசிய எனது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்ட போதும், இவர்களது வீராவேசம் எங்கு போனது?
இதற்குப் பின்னணியில் யார்? எந்த சக்தி என்பது எங்களுக்குத் தெரியும். இது சம்பந்தமான விசாரணைகள் மிக அண்மையில் வர இருக்கிறது. அங்கிருந்த சிங்கள மக்களே எங்களுக்கு சாட்சியாக இருக்கிறார்கள். அந்த சாட்சியம் நீதிவான் முன்னிலையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரித்து வருகிறது. ஆனால், இவ்விடயத்தை மாற்றிச் சொல்வதற்கு மறைமுகமாக வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக அறிகிறோம்.
இதேபோல திருகோணமலையில் பதைக்க பதைக்க மாணவர்களை கொன்று செய்த அக்கிரமம் எப்படிப்பட்டது என்பது விசாரணைகள் மூலம் இப்போது வெளியாகியிருக்கிறது. மூதூரில் அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களுக்கு நடந்த அநியாயம் குறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்விசாரணை விடயங்களை மூடி மறைக்கும் மூடு மந்திரங்களை இப்போது தயாரித்து வருகிறார்கள். ஆனால், மு.கா. நேர்மையையும், நீதியையும் இந்நாட்டில் நிலைநிறுத்துவதற்கு தைரியமான அரசியலையே செய்து வருகிறது.
எமது சமூகத்துக்கு அநியாயம் நடக்கும் போது மட்டுமன்றி, மாற்றுச் சமூகங்களுக்கு நடக்கும் அநியாயங்களையும் நாம் தட்டிக் கேட்டிருக்கிறோம். எமது மறைந்த தலைவர் அப்படித்தான் செயற்பட்டார். நாமும் அப்படித்தான் செயற்படுகிறோம்.
தமிழ் மக்களுக்காயினும் முஸ்லிம் மக்களுக்காயினும் இந்த அராஜக அரசு செய்யும் படுபாதக செயல்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எமது தோள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. வெறும் கதிரைகளுக்கு ஆசைப்படும் அரசியலை நாம் செய்யவில்லை. ஆனால், நாம் அதனை அடைவோம்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு இருக்கும் தலையாய கடமை, சவால்கள் வரும் போது கட்சிப் போராளிக்கு முன்பு தலைமையே முன்னிலையில் இருப்பதாகும். முடிவுகள் எடுக்கப்படும் போது தைரியமாக முடிவுகளை எடுக்க வேண்டும். சரியான கலந்தாலோசனை (மசூரா) செய்யப்பட்டு முடிவுகளை எடுத்து விட்டால் தலைமை அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று உலமாக்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், அதனை இறைவன் பார்த்துக் கொள்வான்.