Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்?
[04 - May - 2008] [Font Size - A - A - A]
பொ.ஐங்கரநேசன்

இலங்கைத் தீவில் வடக்கில் போர்முனைகளைத் திறந்து விட்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசு, கிழக்கில் யுத்த தீவிரத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடாத்துகிறது. சிங்களத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் தமது அணிகளுடன் குதித்திருக்கும் கிழக்கு தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது ஒதுங்கி நிற்கிறது. முழு இலங்கையின் கவனத்தையும் கிழக்கு நோக்கித் திருப்பியிருக்கும் இந்த மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து;

*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு நீங்கள் வந்தமைக்கான காரணங்களாக எவற்றைக் கூற விரும்புகிறீர்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தும் அடிப்படையிலேயே பாராளுமன்றம் சென்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு என்பது அவர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம். பிரிக்கப்பட முடியாத, ஒன்றுபட்ட ஒரு அரசியல் நிர்வாக அலகு. இவற்றை ஏற்றுக் கொண்டே இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987 இல் வடக்கு, கிழக்கு வாழ் மக்களை ஒரே அரசியல் நிர்வாக அலகின் கீழ் இணைத்தது. ஜே.ஆர். ஜெயவர்தனா, பிரேமதாசா, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களின் ஆட்சியில் இந்த இணைப்பு என்பது தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அது மாத்திரமல்லாமல் இவர்கள், இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாணங்களில் நடாத்தவேண்டிய சர்வசன வாக்கெடுப்பையும் பிற்போட்டு வந்தார்கள். சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த போதும் வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என்பது ராஜீவ்காந்தி - ஜெயவர்தனா இருவருக்கும் இடையே எழுதப்படாத ஒரு உடன்பாடாகவே இருந்தது. 1948க்குப் பின்பு பாரிய சிங்களக் குடியேற்றங்களின் மூலம் கிழக்கு மாகாணங்களின் குடிசன இனவிகிதாசாரம் மாற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி சர்வசன வாக்கெடுப்பை தமிழ்க் கட்சிகள் கடுமையாக நிராகரித்திருந்தன. இதனால், சிங்களக் கடும் போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மாத்திரமே சர்வசன வாக்கெடுப்பு என்ற விடயம் ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்டிருந்ததே தவிர, உண்மையில் நடைமுறையில் செயற்படுத்தப்படமாட்டாது என்ற உத்தரவாதம் எமக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைய இலங்கை அரசு சிங்கள பௌத்த பேரினவாத நிலையில் நின்று வடக்கு - கிழக்கைப் பிரித்து விட்டிருக்கிறது. அதுமாத்திரமல்லாமல், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் மாகாண சபைகளுக்கென வழங்கப்பட்டு, தமிழ் மக்களால் அப்போதே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்று உச்சஸ்தாயியில் சொல்லியும் வருகிறது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பற்றுவதென்பது அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான விரோதப் போக்கை உலக அரங்கில் நாங்களே நியாயப்படுத்தியது போல் ஆகிவிடும். இதனாலேயே கொள்கை அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கிறது.

* கிழக்கில் இப்போது அவசரமாக ஒரு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசுக்கு அப்படி என்ன அரசியல் தேவை இருக்கிறது?

கிழக்கு மாகாணத்தை சிங்களமயப்படுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை வேகமாக முன்னெடுக்கின்ற முயற்சிதான் இது. ஏற்கனவே மகிந்த அரசாங்கம் அம்பாறையில் பொத்துவில், தீகவாபி பிரதேசங்களிலும் திருகோணமலையில் பல பகுதிகளிலும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து வைத்துள்ளது. புனித பிரதேசங்கள் என்ற பெயரிலும் அபிவிருத்தி என்ற பெயரிலும் பறிக்கப்பட்ட அந்த நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற முழு அளவில் தயாராகி வருகிறது. மட்டக்களப்பை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துவிட்டோம் என்று சொல்லிக் கொள்ளும் அரசு அங்கு புத்த கோயில்களை அமைப்பதிலும், தெருக்களுக்கு இறந்துபோன சிங்களச் சிப்பாய்களின் பெயர்களைச் சூட்டுவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இப்படித் தாம் விரும்பியவாறு கிழக்கைச் சிங்கள மயப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அங்கு தலையாட்டும் ஒரு பொம்மை முதலமைச்சர் அவசரமாகத் தேவைப்படுகிறார். அதுமாத்திரமல்லாமல், மிகவும் மோசமான வங்குரோத்து நிலையிலுள்ள மகிந்த அரசாங்கம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு என்று சொல்லி உலக நாடுகளிடம் இருந்து பெருமளவுக்கு உதவிகளைப் பெறவும் தீர்மானித்துள்ளது.

* இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே பார்வையாளராக மாத்திரம் இருப்பதென்பது எந்த அளவுக்குப் பொருத்தமானது? கிழக்கு மக்களையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் என்ற வகையில் அவர்களை வழிப்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா?

நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான். இந்தத் தேர்தலில் ஒருபுறம் ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் பங்காளிகளான சில முஸ்லிம் கட்சிகளுடனும், ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவுடனும் இணைந்து போட்டியிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக பௌத்த பிக்குகளின் ஜாதிக ஹெல உறுமயவும், ஜே.வி.பி.யின் ஒரு பகுதியும் உள்ளன. மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த இரண்டு பெரிய கூட்டணிகளுடன் பல்வேறுபட்ட சிறிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக 1,100 க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்திலுள்ளனர்.

* ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஆளுகின்ற அரசு மகிந்த சிந்தனையை முன்னெடுத்து வருகிறது. ஜாதிக ஹெல உறுமயவினருடனும் ஜே.வி.பி.யினருடனும் மகிந்த செய்து கொண்ட ஒப்பந்தம்தான் மகிந்த சிந்தனை. இந்த ஒப்பந்தத்தின்படி சமாதானத்துக்கு மத்தியஸ்தம் வகித்தவர்கள் இலங்கையை விட்டு விரட்டப்படல் வேண்டும். யுத்தம் தொடர்ந்து நிகழ்ந்து வடக்கு, கிழக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட வேண்டும். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவித பிரத்தியேகமான பிரச்சினைகளும் கிடையாது. இவைபோன்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் மகிந்த கூட்டணிக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது?

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்கிறோம் என்ற பெயரில் மூதூரில் 23 கிராமங்களிலிருந்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். இவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. இவர்களது பாரம்பரிய வாழ்நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கை விடுதலை செய்கின்றோம் என்ற பெயரால் மூன்றரை இலட்சம் தமிழ்ப் பேசும் மக்கள் அகதிகளாக நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்". 300 க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்விட, வாழ்வாதாரங்களோ, உயிர் இழப்பீட்டுத் தொகையோ இதுவரையில் வழங்கப்படவில்லை. இன்றும்கூட, கிழக்கு மாகாண மக்கள் ஷ்ரீலங்கா இராணுவத்தின் கடுமையான பிடிக்குள் துன்புறுத்தலுக்கு ஆளாகியவாறுதான் உள்ளனர். கொலைகளும், கடத்தல்களும், பாலியல் வல்லுறவுகளும் அங்கு சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அரசுத்தரப்புக்கு தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்? நாட்டினுடைய குடிசனங்களில் ஒரு பகுதியினரை அழித்து நாட்டை முழுமையாகச் சிங்கள மயப்படுத்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வரும் இந்த அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ்ப் பேசும் மக்கள் தமது வாக்குப் பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.

* ஆளுகின்ற அரசு என்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அதனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரம் காட்ட இயலும். இந்நிலையில், தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

அரசாங்கம் கிழக்குத் தேர்தலை மிகவும் ஜனநாயக பூர்வமான தேர்தலாக நடாத்துவதாகவே வெளியுலகுக்குக் காட்ட முயற்சிக்கின்றது. ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிபூண்டுள்ள அரசாங்கம் அதற்காக தனது படை பலத்தையும் பிள்ளையான் குழுவையும் முழு அளவில் பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே கிராமம் கிராமமாக கோவில் தர்மகர்த்தாக்கள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவையாளர்கள் போன்ற ஊர்ப்பெரியவர்கள் வரவழைக்கப்பட்டு தங்களுக்கு வாக்குகளை அளிக்காவிடில் தேர்தலுக்குப் பின்னர் தகுந்த தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆளும் கட்சிக்கோ, பிள்ளையானுக்கோ வாக்களிக்காவிட்டால் தாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களிடையே தோன்றி இருக்கிறது. இதனை விட, தேர்தல் நாளன்று கிராமங்களில் வாக்குப் பெட்டிகளை பலாத்காரமாக நிரப்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அச்சுறுத்தல்களையும், அத்துமீறல்களையும் தாண்டித்தான் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் தமிழ் - முஸ்லிம் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், இது முடியாத ஒன்றல்ல.

* அண்மையில் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் ஷ்ரீலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்னகர்வு நடவடிக்கையும் கிழக்கு மாகாண தேர்தல் நிகழ்ச்சி நிரல் ஒன்றென எடுத்துக் கொள்ளலாமா?

அரசாங்கம் இராணுவ வெற்றிகளின் மூலமே தனது இருப்பைப் பாதுகாத்து வருகிறது. வாழ்க்கைக்குச் செலவு என்றுமில்லாத அளவுக்கு மிக மோசமாக அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையிலும் கூட சிங்கள மக்கள் மௌனமாக இருக்கிறார்களெனில் அதற்கு முக்கிய காரணம், ஷ்ரீலங்கா அரசு இராணுவ வெற்றி தொடர்பாக சிங்கள மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருக்கும் பிரமைதான். இராணுவ வெற்றியின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அவர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் 2007 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முகமாலை முன்னரங்கப் பகுதியில் இருந்து ஒரு பாரிய நகர்வை முன்னெடுப்பதற்கு அரசு திட்டமிட்டது. உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது எட்டும் வெற்றிச் செய்தியால் வரவு - செலவுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பினார். ஆனால், அந்தத் தாக்குதல் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதேபோன்றே இப்போது கிழக்கில் தனது அரசியல் இலக்கை எட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முகமாலை முன்னகர்வும் பலத்த இழப்புகளுடன் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அரசாங்கம் உண்மைத் தகவல்களை மூடிமறைத்தாலும் 175 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட படையினர் காயம் அடைந்துள்ளதாகவும் சுயாதீன தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி
கிழக்கு தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்குமா?
இலங்கை விவகாரத்தில் டில்லியை பகைத்துக் கொள்ள விரும்பாத ஈரான்
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு
மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் குடும்ப நலனும்
மலையகத்திலும் போர் மேகங்கள்: கட்டளையிடும் அதிகாரி நியமனம்
கிழக்கு முஸ்லிம் - தமிழர்களிடையே இடைவெளியை உருவாக்க சதி!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்?
தமிழ் பேசும் சமூகங்களுக்கு அரசு செய்து வரும் பாதகச் செயலுக்கு பதிலளிக்கும் கடப்பாடு எமக்குண்டு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
உலக சமாதானத்துக்கு குரல் கொடுக்க மதத் தலைவர்களிடையேயான அமைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com