Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் குடும்ப நலனும்
[04 - May - 2008] [Font Size - A - A - A]
தாரகா

சமீபத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் வாரிசான அனுர பண்டாரநாயக்கா காலமானார். அனுர காலமாகியதில் யார் யாரெல்லாம் கவலை அடைந்திருப்பார்கள் என்று எமக்கு தெரியாவிட்டாலும், ஒருவரும் அவரது குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கும் என்று நிச்சயமாகவே நாம் நம்பலாம்.

சிங்களத்தின் மேலாதிக்க அரசியல் போக்கை கூர்ந்து நோக்கினால் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் காணலாம். தமிழர் தேசத்திற்கு எதிரான ஒவ்வொரு சிங்கள நிகழ்ச்சி நிரலிலும் தெற்கின் குடும்ப மேலாதிக்கமும் கட்சி சார்ந்த அதிகார நலன்களும் ஒரு துணைப் பாத்திரத்தை ஆற்றிவருகின்றது என்பதுதான் அது. சிங்கள பெருந்தேசியவாத அரசியல் பற்றிய உரையாடல்களின் போதெல்லாம் தெற்கின் குடும்ப, கட்சி சார்ந்த அதிகாரப் போட்டிகள் தவிர்த்துச் செல்ல முடியாதவைகளாகவே இருக்கின்றன. நமது விடுதலை அரசியல் நோக்கில் இது பெருமளவிற்கு முக்கியமான ஒரு விடயம் அல்ல. நமது நோக்கில் சிங்கள பெருந்தேசியவாதம் என்னும் முழுமை முக்கியமானதே அன்றி அதன் உள்ளக அரசியல் கூறுகள் தேவையற்றவைதான் எனினும் தெற்கின் நிகழ்ச்சி நிரலை விளங்கிக் கொள்வதற்கு இவ்வாறான நுண் பகுப்பாய்வுகள் நமக்கு அவசியமானவை ஆகும்.

நான் மேலே குறிப்பிட்ட தெற்கின் அரசியல் போக்கை பண்டாரநாயக்க காலத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷ வரைக்கும் பார்க்கலாம். தமது நலன்களுக்கு தேவையெனில் சிங்களம் தமிழ்த் தலைமைகளுடன் சமரசம் செய்துகொள்வதும் தேவையில்லையெனில் அவற்றை தூக்கி எறிவதுமாக தனது அரசியலை நகர்த்தி வந்திருக்கிறது. சிங்களம் எப்போதுமே தனது கட்சி, குடும்பம் சார்ந்த அதிகார நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே தமிழ்த் தலைமைகளை கையாண்டு வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மையை நமது மெத்தப்படித்ததாக செருக்குக் கொண்டிருந்த தமிழ் பாராளுமன்ற தலைமைகள் எவையுமே அப்போது விளங்கிக் கொண்டிருக்கவில்லை.

பிரித்தானிய நேரடி காலணித்துவத்திற்கு பிந்தைய இலங்கையின் சனநாயக (பெயரளவிலான) அரசியல் வரலாறு என்பதே, சிங்களத்தால் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறுதான். திரு.பிரபாகரன் தமிழ் தேசிய அரசியலின் தலைமைப் பொறுப்பை எடுக்கும் வரை, சிங்களம் தனது ஏமாற்றும் சதுரங்கத்தில் மிகவும் மதிநுட்பத்துடன் காய்களை நகர்த்தி வந்த வரலாற்றை நான் இந்த இடத்தில் விளக்கிச் சொல்ல விரும்பவில்லை.

முன்னர் பாராளுமன்றவாத தமிழ்த் தலைமைகளை ஏமாற்றுவதை தனது குடும்ப, கட்சி அதிகார நலன்களுக்காக பயன்படுத்தி வந்த சிங்களத் தலைமைகள், பின்னர் தமிழர் அரசியல் ஆயுத விடுதலைப் போராட்டமாக பரிணமித்த பின்னர் அதனை அழித்தொழித்தல் என்ற சுலோக அரசியலிலும் தனது குடும்ப, கட்சி நலன்களை நுட்பமாகப் பேணிக்கொண்டது.

1975 களுக்கு பின்னர் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதை தமது பிரதான இலக்காகக் கொண்டிருந்த தெற்கின் சிங்கள தலைமைகள் அனைத்தும் 83 களுக்கு பின்னர் விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற ஒரேயொரு கொள்கைக்கு மாறின. 83 களுக்கு பின்னரான சிங்கள அரசியல் என்பதே புலிகளை அழித்தல் என்னும் சுலோகத்தில்தான் சுழன்றுகொண்டிருக்கிறது. இந்த வரலாற்று போக்கின் உச்சம்தான் மகிந்த ராஜபக்ஷ அரசின் நடவடிக்கைகள். இன்று மகிந்த தலைமையிலான சிங்களம் நடாத்தும் கிழக்கு தேர்தல் நாடகத்திற்கும் இவ்வாறானதொரு அரசியல் பின்புலம் உண்டு. மகிந்த அணியினர் முன்னெடுக்கும் கிழக்கு தேர்தல் விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தை சிதைப்பதற்கான ஒரு முயற்சி என்பது மிகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய உண்மையாகும். இதில் அரசு வகுக்கும் உபாயங்கள் பற்றி எனது முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

விடுதலைப் புலிகளை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களை நீண்டகால நோக்கில் அழித்தொழிக்கலாம் என்பது இந்தியா சிங்களத்திற்கு கற்பித்த பாடபோதனையாகும். வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அனுப்பப்பட்ட அந்த பாட போதனைகளை மீண்டும் மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் கையில் எடுத்திருக்கிறது. இந்தியா இந்த அணுகுமுறையில் எவ்வாறான தோல்வியைத் தழுவிக்கொண்டது என்பதை இந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்காது என்றே நினைக்கின்றேன்.

நான் இங்கு சுட்டிக்காட்ட வருவது, சமீபகால சிங்கள நிகழ்ச்சிநிரலில் மகிந்தவின் குடும்ப மற்றும் தனிப்பட்ட அதிகார நலன்கள் எவ்வாறு பிணைந்திருக்கின்றன என்பதாகும். கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றிருந்தாலும் தமிழர் தேசத்தினால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஒரு தேர்தலாகவே அது அமைந்திருந்தது. அன்று சந்திரிகாவின் ஆதரவினையும் பெருமளவு இழந்திருந்த மகிந்த தீவிர தமிழர் வெறுப்புவாத சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தார். சந்திரிகா காலத்தில் பல்வேறு அவமானங்களுக்கு மத்தியிலும் சுதந்திரக் கட்சியில் தனக்கான இடத்தை பேணிவந்த மகிந்த, இறுதியில் பல்வேறு தரப்பினரது ஆதரவுடனும் தனது இலக்கை அடைந்தார். தெற்கின் அரசியல் வரலாற்றில் ஒரு முறை ஜனாதிபதியாக வரும் ஒருவர் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக வருவதற்காக தனது ஆட்சிக்காலத்தில் தன்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வது வழமையாகும். மகிந்த ராஜபக்ஷவும் அதற்கான திட்டங்களை தற்போது மிகவும் நுட்பமாக வகுத்து வருகின்றார்.

இன்றைய தெற்கின் சிங்களவாத அரசியலை அவதானித்தால், மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது இரண்டு திட்டங்களை கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒன்று, அடுத்த ஜனாதிபதி ஆட்சிக் காலத்தையும் பூர்த்தி செய்வதற்கான பாராளுமன்ற ஆதரவை பெறுவது. இரண்டு, தனது குடும்ப அரசியலை தொடர்வதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது. ஆனால், இந்த இரண்டுமே தமிழர்களின் அரசியலை கையாள்வதில்தான் தங்கியிருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மகிந்த கிழக்கு தேர்தலின் மூலம் தனக்கான மக்கள் ஆதரவை நிரூபிக்க முயல்கின்றார். இங்கு கிழக்குத் தேர்தலின் அரசியலின் முதல் தெரிவு தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துதல் என்றால், இரண்டாவது தெரிவு மகிந்தவின் அதிகார நலன்களை பேணிக்கொள்ளுதல் ஆகும். அதாவது, முதலாவது சிங்களத்தின் முழு நலன் என்றால் இரண்டாவது மகிந்த குடும்பத்தின் தனி நலன். இதுதான் நான் குறிப்பிடும், சிங்கள பெருந்தேசியவாத நலன்களும் தெற்கின் குடும்ப அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் நுட்பம்.

இதில் கருத்தில் கொள்ளவேண்டிய பிறிதொரு விடயமும் இருக்கின்றது. எப்போதுமே, சிங்கள அரசை கைப்பற்றும் ஒவ்வொரு சிங்கள தலைமையும் தமக்கு முன்னர் இருந்தவர்களை விட அதிகளவில் தமிழர் வெறுப்புவாத அரசியலை வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். சந்திரிகா காலத்தின் அரசியலை அனுபவமாகக் கொண்டிருக்கும் மகிந்த, சந்திரிகாவின் காலத்தை மேலும் வளர்த்துச் செல்லும் ஒரு அரசியல் அணுகுமுறையையே தற்போது கைக் கொண்டு வருகின்றார். வேறு எவரைக் காட்டிலும் தனது காலத்திலேயே புலிகள் ஒடுக்கப்பட்டனர் என்பதை நிரூபிப்பதுதான் மகிந்தவின் அரசியல் இலக்காக இருக்கின்றது. இதன் மூலம் தனக்கு பின்னர் தனது குடும்ப அரசியலை நிலைநிறுத்துவதே மகிந்தவின் திட்டம்.

தமிழர் தேசத்திற்கு எதிரான சிங்களத்தின் அணுகுமுறைகளை பார்ப்போமாயின் அது எப்போதுமே ஏறுவரிசையில் செல்வதை பார்க்கலாம். சந்திரிகாவின் காலமானது பெருமளவிற்கு தமிழர் தேசத்திற்கு எதிரான அதுவரை கால அரசியலை ஒரு தீர்க்கமான கட்டத்திற்கு கொண்டுவந்தது. சந்திரிகாவின் அரசியல் பாத்திரமானது சிங்கள பெருந்தேசியவாத அரசியல் போக்கில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருந்தது. தனது தந்தையால் தொடங்கப்பட்டதை, தாயால் மேலும் செழுமைப்படுத்தப்பட்டதை அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்லும் வரலாற்றுப் பொறுப்பையே சந்திரிகா ஆற்றியிருந்தார். இது ஏதோ தற்செயலுக்குள் இயங்கும் ஒரு விதி போன்ற தோற்றத்தை தந்தாலும் உண்மையில் சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்தல் என்னும் விதியில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

சந்திரிகாவிற்குப் பின்னர் பண்டாரநாயக்கவின் பரம்பரை அரசியலை முன்னெடுப்பதற்கு சரியானதொரு தலைமையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கொண்டிருக்காத இடைவெளியையே மகிந்த பயன்படுத்திக் கொண்டார். தனக்கு பின்னர் தனது இடத்திற்கு தனது சகோதரனை கொண்டுவரும் திட்டமும் சந்திரிகாவிடம் இருந்தது. அதுவரை காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அனுர பண்டாரநாயக்க ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு திடீரென்று தாவியதன் பின்னணி அதுதான். ஆனால், தலைமைப் பொறுப்பிற்கான ஆளுமையும் போதிய உள் ஆதரவும் இல்லாத அனுரவினால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. அனுரவின் சமீபத்தைய மறைவானது தெற்கில் பண்டாரநாயக்க குடும்பம் அரசியலை தொடர்வதில் பெரிய தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டுக் கொண்ட மகிந்த இந்த தொய்வை நிரந்தரமாக்குவதன் மூலம் ராஜபக்‌ஷ பரம்பரை அரசியல் கலாசாரம் ஒன்றை தெற்கில் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ புலிகளாக இருப்பதுதான். இன்று மகிந்தவிடம் இரண்டு விருப்பங்கள் இருக்கின்றன. அவற்றை இரண்டு கற்பனைகள் என்றும் நாம் சொல்லலாம். ஒன்று, சிங்கள பெருந்தேசியவாதத்தின் ஏக காவலன் தான்தான் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் உறுதிப்படுத்துவது. இரண்டு, தெற்கில் ராஜபக்‌ஷ குடும்ப அரசியலை நிலைபெறச் செய்வது. மகிந்தவின் இந்த இரண்டு விருப்பங்களுமே புலிகளை யுத்தத்தில் தோற்கடித்து, தமிழர் விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழித்தல் என்னும் சிங்கள இலக்கை பூர்த்தி செய்வதில்தான் தங்கியிருக்கிறது.

இதற்காக மகிந்த மேற்கொண்டுவரும் இரு முனை நடவடிக்கைகள்தான் யுத்தமும் தேர்தலும். இங்கு யுத்தமும் கிழக்குத் தேர்தலும் வேறுவேறல்ல. இரண்டுமே புலிகளை அழிப்பதற்காக மகிந்த மேற்கொண்டுவரும் யுத்தம்தான். சந்திரிகாவின் காலம் சிங்கள பெரும்தேசியவாத அரசியலில் எவ்வாறு ஒரு தீர்க்கமான கட்டத்தை நிறைவு செய்ததோ, அவ்வாறே தமிழர் தேசமும் அதன் வரலாற்று ரீதியான இராணுவ, அரசியல் கட்டமைப்புசார் தேவைகளை நிறைவு செய்தது. மகிந்தவின் காலம் பெரும்பாலும் தமிழர் தேசத்தின் விடுதலை நோக்கிய வரலாற்று வழி நகர்வினை நிறைவு செய்யும் காலமாகவே அமையும். மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் தற்போது பரப்பிவரும் வரலாற்று விதியை மீறிவிடுவதான கற்பனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்போது, அது மறுபுறமாக தமிழர் தேசத்தின் வரலாற்று நியாயத்தையும் நிறைவு செய்யும்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி
கிழக்கு தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்குமா?
இலங்கை விவகாரத்தில் டில்லியை பகைத்துக் கொள்ள விரும்பாத ஈரான்
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு
மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் குடும்ப நலனும்
மலையகத்திலும் போர் மேகங்கள்: கட்டளையிடும் அதிகாரி நியமனம்
கிழக்கு முஸ்லிம் - தமிழர்களிடையே இடைவெளியை உருவாக்க சதி!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்?
தமிழ் பேசும் சமூகங்களுக்கு அரசு செய்து வரும் பாதகச் செயலுக்கு பதிலளிக்கும் கடப்பாடு எமக்குண்டு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
உலக சமாதானத்துக்கு குரல் கொடுக்க மதத் தலைவர்களிடையேயான அமைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com