Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு
[04 - May - 2008] [Font Size - A - A - A]
கனடாவில் இருந்து புலத்தவன்

கிழக்கினைப் பிடித்து கேக் துண்டுகளைப் பரிமாறி வெற்றிக் கழிப்பில் மிதந்த இலங்கை அரசு, இதோ வடக்கினைப் பிடித்து கிளிநொச்சியில் கொடியேற்றுகின்றோம் என்ற வீறாப்புடன் வன்னிமீதான தனது போரைத் தொடக்கி நொந்து போயுள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பின் தென்முனைக் களமான மணலாறு தொடக்கம் மன்னார் வரையான மிக நீண்ட களத்தினையுருவாக்கி அங்கே 59, 56, 57, 58 என நான்கு டிவிசன்களைப் படை நடவடிக்கைக்காக நிறுத்தி வைத்துள்ள அதேவேளை, வன்னிக்கு வடக்கே, அதாவது யாழ்ப்பாணத்தில் 51, 52, 53, 57 ஆகிய டிவிசன்களை நடவடிக்கைக்காகப் பயன்படுத்திக் கொண்டு வன்னியைப் பிடிக்கின்ற போரை நடாத்தி வருகின்றது.

இவ்வாறான வன்னிக்கான சமர் முனைகளில் மிகவும் மோசமான சமர் முனையாக அமைந்தது மன்னார் சமர் முனையே. மடுத் தேவாலயத்தை இலக்கு வைத்து இலங்கை இராணுவம் தனது 57, 58 ஆவது டிவிசன் படைகளை மிகவும் வலிமையோடு முன்நகர்த்தி இன்று ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் தனது இலக்கை அடைய முடியாத வேதனையில் மன்னார் சமர் முனை பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருகிறது.

இவ்வாறான அரச படைகளின் நடவடிக்கைக்கு எதிராக தமது மறிப்புச் சமரினை மேற்கொண்டுள்ள புலிகள் இவ் எதிர் நடவடிக்கைகளால் படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற தருணத்தில் புலிகளின் முதலாவது மரபுப் படையணியான `சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி' தனது பதினெட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் படைக்கெதிரான பல தாக்குதல்களில் பங்கெடுத்துக் கொண்ட இப்படையணி கடந்த 17 ஆண்டுகளில் யுத்த முனையில் சாதித்தது ஏராளம்.

1991 ஏப்ரல் திங்கள் பத்தாம் நாள் இம்மரபுவழிப்படையணியை உருவாக்கி போரரங்கில் நுழைத்ததன் மூலம் போரியல் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து வைத்தனர் புலிகள். இரண்டாம் கட்ட ஈழப் போரின் ஆரம்பம், ஒரு மரபு வழி இராணுவத்தின் தேவையை அன்று புலிகளுக்கு உணர்த்தியது. அன்றைய சூழலில் படையினர் தமது முகாம்களைப் பலப்படுத்தியதுடன் ஒரு கெரில்லா அமைப்பால் சாதாரணமாக தாக்கி அழிக்கப்பட முடியாதவாறு முகாம்களை அமைத்திருந்தனர். ஏற்கனவே மரபுவழிப் படைக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த தன் படைகளைப் பயன்படுத்தி நவீன ஆயுதங்களையும் புதிய போர் நுணுக்கங்களையும் பெருமளவிலான ஆளணிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பலம் வாய்ந்த இராணுவமாக தன் படைகளை இலங்கை இராணுவம் ஒழுங்கமைத்திருந்தது.

இப்புதிய ஒழுங்கமைப்பின் மூலம்தான் ஏற்கனவே தமிழர் பிரதேசத்தில் அமைந்திருந்த முகாம்களை புலிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதுடன், எமது பாரம்பரிய பிரதேசங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு, புலிகளின் தளப் பிரதேசத்தைக் கைப்பற்றவும் என ஒர் நீண்ட திட்டத்தை அரச படைகள் தயாரித்தன.

இராணுவத்தின் இத்திட்டமானது புலிகளின் போராட்ட வளர்ச்சியில் பெரும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய தடைக்கல்லாக இருந்தது. எனவே, இதனை எதிர்கொள்ளக்கூடிய வகையில் `பயிற்சி' தந்திரம், நவீன ஆயுதங்களைக் கையாளக்கூடிய திறமை, அணிகளை வழி நடத்தும் புலமை என்பன நிரம்பப் பெற்ற ஓர் இராணுவமாக மாற்றிக் கொண்டு விடுதலைப் போரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு விடுதலைப் படையை தயார்படுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றார்.

அன்றைய காலப்பகுதியில் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டிருந்த யாழ். கோட்டை மற்றும் தாக்கியழிக்கப்பட்ட கொண்டச்சி, கொக்காவில், மாங்குளம், அத்தோடு பல முகாம்கள் என எல்லாமே பிராந்திய மட்டத்திற்குட்பட்ட புலிகளின் அணிகளாலேயே பெரும்பாலும் வெற்றி கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும், சில முகாம்களின் வெற்றியானது பல பிராந்தியப் படைகளின் கூட்டுத் தாக்குதல்களின் மூலமே கிடைத்தன. அவ்வாறான வெற்றிகள் எதிர்காலத்தில் ஒரு மரபுவழிப் படையின் தோற்றத்தையும் அது தரப்போகும் வெற்றிகளையும் கட்டியம் கூறி நின்றன.

இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய போது சொற்ப காலத்தில் ஒரு மரபு வழிப் படையணியின் தேவை தேசியத்தலைவர் அவர்களால் உணரப்பட்டு, அவரின் எண்ணப்படி உருவாக்கம் பெற்ற, முதலாவதும் முன்னோடியானதுமான படையணி தான் "சாஸ்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி".

"சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" என்ற பெயர் தலைவர் அவர்களாலேயே சூட்டப்பெற்றது. லெப்.சாள்ஸ் அன்ரனி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு மூத்த உறுப்பினர், விடுதலைப் போரில் சிங்கள இராணுவத்தின் மீதான புலிகளின் முதலாவது தாக்குதலை தலைமையேற்று நடத்திய முதலாவது தாக்குதல் தளபதி. ஒரு சிறந்த வழிகாட்டி, இந்த உன்னத வழிகாட்டியின் ஞாபகமாகவே விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுப் போர்ப் படையணி"சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" என்று அழைக்கப்பட்டது.

விடுதலைப் போரில் பெரிய இலக்குகளைத் தாக்கி அழிப்பதுடன் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயற்படும் அணியாகவும் விளங்க வேண்டும். "பயிற்சி, தந்திரம், துணிவு" இவையே ஒரு படையணியின் வெற்றியை தீர்மானிக்கும் எனத் தலைவர் அவர்களால் கூறப்பட்டு பல சாதனைகளை நிகழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட இப் படையணி "இயலாத ஒன்று இருக்காது எமக்கு" என்பதையே தனது தாரக மந்திரமாக கொண்டுள்ளது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் சிங்களப் படைகளின் உடனடி இலக்காக வன்னிப் பகுதியே இருந்தது. மணலாறு உட்பட வன்னியின் பகுதிகளைக் கைப்பற்றி வடக்கு, கிழக்கை பிரித்தெடுக்க வேண்டிய அவசர இராணுவத்தேவை அரச படையினருக்கு இருந்தது. இந்திய இராணுவத்தினருடனான போரை வெற்றிகரமாக நடாத்தி வென்ற தேசியத்தலைவர், தங்கி இருந்ததாக கூறப்பட்ட மணலாற்றுப் பகுதியின் இராணுவ முக்கியத்துவம் இராணுவத்திற்கு நன்கு தெரிந்திருந்தது. இதனால் வன்னியையே முதலில் கைப்பற்ற இராணுவம் எண்ணியது. எனவே மரபுவழி இராணுவ நடவடிக்கையை எதிர்நோக்கி விடுதலைப் புலிகளின் "சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" வன்னியிலேயே தன் ஆரம்ப செயற்பாடுகளைத் தொடக்கியது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலப்பகுதி, சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகளை இலகுவில் தோற்கடித்து விடலாம் என நம்பி இருந்த நேரம். எனவே தான் விடுதலைப் புலிகளை முற்றுகைக்கு உள்ளாக்கி இராணுவம் தமிழரின் நிலப் பரப்பை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்க முயன்றது. புலிகளின் கட்டுப்பாட்டு தளப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் புலிகளை தோற்கடிக்க இராணுவம் திட்டமிட்டது. அதற்காகவே அன்றைய பெரும்பாலான படையெடுப்புக்கைள மேற்கொண்டது. இராணுவத்தின் இந்த முற்றுகைச் சமரை உடைப்பதிலும், அதனது இராணுவ நடவடிக்கைகளை கேள்விக்குறி ஆக்குவதிலும், அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இராணுவத்தின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான முறியடிப்புச் சமர்கள் என்றாலும் சரி, எம்மவரால் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வலிந்த தாக்குதலானாலும் சரி அவற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பங்கு முக்கியத்துவமானது.

இவ்வாறாக கடந்த 17 வருடங்களாக விடுதலைப் புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, இராணுவத்தின் வன்னியைக் கைப்பற்றுவதற்கான பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் வெற்றிகரமாக முறியடித்திருந்தது. இன்றும் கூட இவ்வாறான ஒரு சூழலையே வன்னிப் பிரதேசம் மீது இராணுவம் மேற்கொண்டுள்ளது. இத்தருணத்தில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியானது தனது 18 ஆவது வயதை எட்டியிருப்பது போர் முனையில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாகவே இருக்கின்றது.

Email this page Your Opinion Print this page
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி
கிழக்கு தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்குமா?
இலங்கை விவகாரத்தில் டில்லியை பகைத்துக் கொள்ள விரும்பாத ஈரான்
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு
மகிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் குடும்ப நலனும்
மலையகத்திலும் போர் மேகங்கள்: கட்டளையிடும் அதிகாரி நியமனம்
கிழக்கு முஸ்லிம் - தமிழர்களிடையே இடைவெளியை உருவாக்க சதி!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்?
தமிழ் பேசும் சமூகங்களுக்கு அரசு செய்து வரும் பாதகச் செயலுக்கு பதிலளிக்கும் கடப்பாடு எமக்குண்டு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
உலக சமாதானத்துக்கு குரல் கொடுக்க மதத் தலைவர்களிடையேயான அமைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com