குரு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்தின் இலங்கை விஜயம் திட்டமிட்ட படி நிகழ்ந்திருக்கின்றது. பாகிஸ்தான், இலங்கை, இந்திய விஜயங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக அவர் தாயகம் போய்ச் சேர்ந்திருக்கின்றார்.
அமெரிக்கா, ஈரான் தலைவருக்கு எந்தவொரு நாடும் உற்சாகமான வரவேற்பை வழங்குவதை விரும்புவதில்லை. எனவே, அவருக்கு இப்படித்தான் வரவேற்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த இந்த வேண்டுகோள்களை நாடுகள் அவரிடம் விடுக்க வேண்டும் என நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும், கட்டளைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுப்பது வழக்கம். இம்முறையும் அமெரிக்கா, நிஜாத் தெற்காசிய நாடுகளுக்குத் தனது பிரயாணத்தை தொடங்க ஆயத்தங்களை மேற்கொண்ட போது இதே பல்லவியைப் பாடத்தொடங்கியது.
அமெரிக்காவின் இந்த அணுகு முறைக்கு இந்தியா கன்னத்தில் அறைந்தது போல் பதிலளித்தமை அமெரிக்காவிற்குப் பெரும் அதிருப்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. "இது விடயத்தில் எவரும் எமக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியமில்லை" என இந்தியத் தரப்பில் சூடாகப் பதிலளிக்கப்பட்டிருக்கின்றது. முன்பு போல் இந்தியா ஒரு பலவீனப்பட்ட நாடல்ல. அது இன்று துரிதமாக வளர்ந்து வருகின்ற நாடு. அத்துடன் அந்த நாட்டிற்கு இன்று சொந்தக் கால்களில் எழுந்திருக்க முடியும். இதனைப் புரிந்தும் ஜீரணித்துக்கொள்ள முடியாத காரணத்தால் தான் அமெரிக்காவிற்கு இந்த அவமானம்.
உலக பொலிஸ்காரனாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு அதனை எவ்வளவு காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது இன்று கேள்விக் குறி. அங்கு மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் வறுமை நிலையை எய்தியிருக்கின்றனர். வேலை வாய்ப்பின்மையும் பணவீக்கமும் அங்கு அதிகரித்து வருகின்றது. நாடு அந்நிய நாடுகளிடம் கைநீட்ட ஆரம்பித்திருக்கின்றது.
ஈரான் தலைவர் சொல்வது போல் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாடுகள் அபிவிருத்தியடைவதை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும்? ஈரான் தலைவர் இலங்கை விஜயத்தின் போது இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குமப்பால் உமா ஓயா அபிவிருத்தித் திட்டம், சபுஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் என்பவற்றில் கலந்துகொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக உமா ஓயாத்திட்டத்தில் கலந்து கொள்ளும் ஏற்பாடு கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரயாண ஆரம்பத்திலேயே ஈரான் தலைவர் உமா ஓயா திட்டத்தில் கலந்து கொள்வதைப் பாதுகாப்புக் காரணங்களினால் தவிர்த்துக் கொள்ளுமாறு ஈரானிய உளவுத்துறை அறிவுரை வழங்கியிருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பு இவ்வைபவத்தில் ஈரான் தலைவர் கலந்து கொள்வதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் உள்ளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி கிழக்குத் தேர்தலில் இலாபங்களை பெறலாம் என நம்பியது. ஈரான் தலைவர் சபுகஸ்கந்தை விழாவில் கலந்து கொண்டு உமா ஓயாத்திட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார்.
பொது வைபவத்தில் உரையாற்றிய ஈரானிய அதிபர் பயங்கரவாதம் தொடர்பாக அரசுக்கு உற்சாக மூட்டுகின்ற வகையில் கருத்துகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ அமெரிக்கப் பயங்கரவாதம் தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களை வெளியிட்டு தனது பிரசாரத்தைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டார். எனவேதான் அஹமட் நிஜாதின் வருகைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவரின் உரைக்குக் கொடுத்துக் கொள்ள இனவாத ஊடகங்களால் முடியாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகும்.
சர்வதேச உறவுகள் தொடர்பாக இந்தியா மிக நேர்த்தியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றது. உலகில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்குமளவுக்கு சக்தி வாய்ந்த ஈரானிய அதிபருக்கு இலங்கை விடயத்திலுள்ள யதார்த்தத்தை புரிந்துகொள்வதில் பெரிதாக சிரமங்கள் இருந்திருக்காது. எனவேதான் மக்கள் அனைவரும் சம உரிமைகளுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்தியா, பாகிஸ்தானுடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருக்காத சூழ்நிலையிலும் ஒரு இஸ்லாமிய நாடாகவிருந்தும் அவற்றைக் கருத்திற்கொள்ளாது இந்திய- ஈரான் உறவுகள் மிக உயர் மட்டத்தில் அமைந்து காணப்படுகின்றது. ஈரான் அணுச் செறிவூட்டல் விடயத்தில் இந்தியா ஒரு போதும் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டது கிடையாது. ஆனால், இலங்கை வெளியுறவுக் கொள்கை அரசுக்கரசு மாறுபடும் தன்மையுடையவையாகக் காணப்படுகின்றது. அத்துடன் ஈரான், பாலஸ்தீன விவகாரங்களில் இலங்கை பச்சோந்திப் போக்கைக் கடைப்பிடித்து வந்திருப்பதை ஈரான் அறிந்துதான் வைத்திருக்கின்றது.
அண்மையில் இலங்கைப் பிரதமர் இஸ்ரேலில் வைத்து பலஸ்தீனப் போராளிகளை வன்மையாகச் சாடியிருந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஐ.நா. சபையில் இலங்கை, ஈரான், பலஸ்தீன விவகாரங்களின் போது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைத் திருப்திப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதையும் பின்னர் தகவல் சரியாகப் போய்ச் சேராததனால் இவ்வாறு நடந்து விட்டது எனச் சொன்னதையும் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகவிருக்கும்.
இலங்கை இனப்பிரச்சினையில் அரசை திருப்திப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது இந்தியா உணர்வுகளுக்கு ஏற்புடையதாக அமையாது என ஈரானியத் தலைவர் அறிவார். மேலும், அமெரிக்க விருப்புகளுக்கு சவால் விடுக்கின்ற வகையில் ஈரான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த `கேஷ்' குழாய்த் திட்டத்தில் இந்தியா ஈரானுக்குச் சாதகமாக முடிவெடுத்திருப்பது அமெரிக்காவிற்குத் தெற்காசியாவில் கிடைத்துள்ள பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இத்திட்டத்திற்கு செலவிடப்படுகின்ற தொகை பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை.
இலங்கைக்கு ஈரான் தலைவர் வருகை தந்தபோது இலங்கை ஜனாதிபதி நேரடியாகவே விமான நிலையம் சென்று வரவேற்றமை இலங்கை அதிபர் இந்த நிகழ்விற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் வழங்குகின்றார் என்பதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அபிவிருத்தித் திட்டங்களுக்குப் புறம்பாக இலங்கையில் நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரில் ஈரான் அதிபர் எப்படி தனக்கு உதவப் போகின்றார் என்பதே இலங்கை ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது விடயத்தில் ஈரான் அதிபர் மூச்சுக்காட்டவில்லை.
இன்று ஈரான் நவீன ஆயுதங்களைத் துரிதமாகவும் தரமாகவும் உற்பத்தி செய்து குவித்து வருவதை முழு உலகமும் அறியும். எனவே, அதில் இலாபம் பெற்றுக் கொள்வதும் இந்த உற்சாகமான வரவேற்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் இலங்கை அதிபர் எந்தளவு சாதித்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. இது விடயத்தில் ஈரான் அதிபர் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமல் பிராந்தியத்தில் இந்தியாவிற்குள்ள உரிமையை மதித்து முடிவுகளை மேற்கொண்டிருப்பார் என்பதனை உறுதியாக எதிர்பார்க்கலாம்.
சர்வதேச மட்டத்திலான தலைமைத்துவமொன்றை நடாத்திச் செல்கின்ற அஹமத் நிஜாத் இலங்கை- இந்தியா உறவுகளைப் பேணுவதில் சர்வதேச மட்டத்தில் இவ்விரு நாடுகளினதும் செயற்பாடுகள் நம்பகத்தன்மை மற்றும் சமபலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டே முடிவுகளை எடுத்திருப்பார். அமெரிக்க சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற போது இது விடயத்தில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என்பதனை அவர் தெரிந்தே வைத்திருப்பார். இன்று சர்வதேச மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்கின்றபோது அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தீர்மானங்கள் மட்டுமல்லாது இந்தியாவின் தீர்மானமும் முக்கியமானதாகும் என்பது யதார்த்த நிலைமை.
இலங்கைக்கு ஈரான் அதிபர் விஜயம் மேற்கொள்கின்ற போது அதற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் அழுத்தங்களைக் கொடுத்தது. அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியது. அமெரிக்கா விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி இவ்விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட இன்னும் பல பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இப்பேச்சுவார்த்தைக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தில் பல வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய வில்லியம் கெம்ப் என்ற அனுபவசாலியை அமெரிக்கா தெரிவு செய்திருந்தது. இவர் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை நிகழ்வுகளை அவதானிப்பவராகவும் உளவு பார்ப்பவராகவும் இந்த நாட்களில் வேலை பார்த்து வந்தார்.
மேற்கத்திய நாடுகளினால் நிராகரிக்கப்படுகின்ற ஒரு நாட்டுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வது இலங்கைக்கு ஆரோக்கியமாக அமையாது என மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈரானுடன் இலங்கை அரசு மேற்கொள்ளும் நட்புறவு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிடும் வகையில் விமான உதிரிப்பாகங்களை இலங்கைக்கு வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும், மேற்கு நாடுகள் இது விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ள முற்படுமேயானால் இலங்கை அதில் எந்தளவிற்குத் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்வியாகும். சீனா, இந்தியா, ஈரான் பாணியில் இலங்கைக்கு மேற்கு நாடுகளுடன் முரண்டு பிடிக்க முடியாது என்றாலும் மேற்கு நாடுகளை நம்பிச் செயலாற்றுகின்ற போக்கிலிருந்து இலங்கை வித்தியாசமாக நடந்து கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றது என்பது புரிகின்றது.