* நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தி என்ற ஸ்தானத்தை ஜே.வி.பி. மீளவும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பில்லை குமார் ரூபசிங்க பேட்டி
செ.சேந்தன்
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகளின் ஆட்சேபனைக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? இந்தத் தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக இருக்குமா?
பதில்: இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தத்தின் காரணமாக 1987 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையை இரண்டு தரப்பினரும் எதிர்த்தனர். இந்த உடன்படிக்கை காலம் தாழ்ந்த ஒன்று என்றும் அற்பமானது என்றும் விடுதலைப்புலிகள் வாதிட்டனர். மறுபுறத்தில் ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை இந்த உடன்படிக்கை அள்ளி வழங்குகின்றது என்றும் ஈற்றில் பிரிவினைக்கு வழி வகுக்கும் என்றும் வாதிட்டனர்.
இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து ஜே.வி.பி. தென்னிலங்கையில் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளும் பிரசாரங்களும் இறுதியில் கிளர்ச்சிக்கு வழிவகுத்ததுடன், 30 நாட்களுக்குள் 60 ஆயிரம் பேரை பலி கொண்டது.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் மாகாண சபைகள் தென்னிலங்கையில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கில் அமுல்படுத்தப்பட முடியாமல் போனது. தென்னிலங்கையில் மட்டும் தான் தேர்தல்களும் நடைபெற்றன. வடக்குகிழக்கில் அல்ல.
தற்போது பல்வேறு அரசியல், இராணுவப் பின்னணிகளில் கிழக்கு மாகாணத்தில் 15 ஆண்டுகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. வருத்தமளிக்கின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
15 ஆண்டுகளின் பின்னர் அங்கு தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் தமது பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான ஒரு பேரவா மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால், அதேசமயம் பிள்ளையான் குழு மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் துன்புறுத்தல்களும் வாக்காளர்கள் மீதான அவர்களின் அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். மறுபுறத்தில் இந்தத் தேர்தலில் பிள்ளையான் குழு கெட்டித்தனமான முறையில் கிழக்கின் பல முக்கியஸ்தர்கள், பிரமுகர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வாக்காளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் வாக்கு மோசடிகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
தேர்தலையொட்டி இன்று கிழக்கு மாகாணம், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிரம்பி வழிகின்றது. தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இத்தேர்தல் ஒரு கணிசமானளவு வேறுபாட்டை ஏற்படுத்தும். இருந்த போதிலும் இந்தத் தேர்தலானது வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதுடன், ஜனநாயக செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
இந்தத் தேர்தலானது வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஒரு பரந்த பின்னணியிலேயே பார்க்கப்பட வேண்டும். ஒரு விரிந்த இராணுவப் போராட்டத்திலிருந்து கிழக்கை தனியே பூரணப்படுத்தி விட முடியாது.
கேள்வி: வன்னியில் அண்மையில் இடம்பெற்ற கடும் சமர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இராணுவப் பேச்சாளர், இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் 2008 முடிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று கூறினர். தினம் ஒன்றுக்கு 10 விடுதலைப்புலிகள் வீதம் அந்த இயக்கத்தை அழிக்கப் போவதாக இராணுவத் தளபதி கூறினார். அதன்படி கடந்த வருடத்தில் ஏறத்தாழ 3600 புலிகள் கொல்லப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்னவென்றால் விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கான தமது காலக் கெடுக்களையே இராணுவத் தலைமை பின்தள்ள வேண்டியேற்பட்டிருக்கிறது.
காலக்கெடுக்களை கூறி யுத்தம் செய்வது என்பது யுத்த தந்திரத்தில் ஒரு பிழையான உபாயம். தற்போது அரசாங்கமோ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர 2 வருடங்கள் தேவை என்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பாது என்றே வாதிடுவேன். அதேநேரம் விடுதலைப் புலிகளும் யுத்தத்தை நீட்டிக் கொண்டு செல்லவே விரும்புவர். இந்தப் பின்னணியில் தான் நாம் வன்னியில் அண்மையில் நடைபெற்ற சமர்களை பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதில் இருந்து 7500 இற்கும் அதிகமானோர் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர். 30,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அண்மையில் முகமாலையில் நடைபெற்ற சமரை, நிபுணர்களும் ஆய்வாளர்களும் ஒரு பெரும் இராணுவ அழிவு என்று வர்ணித்துள்ளனர். இரு தரப்பிலுமே பெரும் எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கின்றனர். இது எதனைக் காட்டுகிறது என்றால் இந்த யுத்தம் வெல்லப்பட முடியாதது என்பதையே ஆகும். பல வருடங்களாக இதனை நான் வலியுறுத்தி வருகிறேன். கடந்த வருடம் பாதுகாப்புச் செலவீனம் 1.3 பில்லியன் டொலர்களாக இருந்தது. இவ்வாண்டு இது 2.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும். 2009 இல் இது 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும். இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அபிவிருத்தி அடைந்துவரும். ஒரு சிறிய நாடான இலங்கையால் இதனை தாங்க முடியாது. பாதுகாப்புச் செலவீன அதிகரிப்புக் காரணமாக பண வீக்கம் பெரிதும் அதிகரித்திருக்கிறது. இது 29 சதவீதத்தை அடைந்திருக்கிறது.தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் கூடுதலானதாகும். வாழ்க்கைச் செலவீனமும் பெரிதும் அதிகரித்திருக்கிறது. சகல விதமான உணவுப் பொருட்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, அநேகமான மக்கள் ஒருவேளை உணவை தவிர்த்து அல்லது உணவின் அளவைக் குறைத்து உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
எவ்வாறெனினும், அண்மையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தென்னிலங்கை மக்கள் இன்னமும் யுத்தத்திற்கு ஆதரவான மனோநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏன் இத்தனை கஷ்டங்கள் மத்தியிலும் யுத்தத்திற்கு சார்பான போக்கை மக்கள் கொண்டிருக்கின்றனர் என்று சிந்திப்பது முக்கியமானதாகும்.
தற்போதைய யுத்தத்திற்கு ஆதரவான போக்கை மக்கள் கொண்டிருப்பது, அவர்கள் பொதுவில் யுத்தத்தை விரும்புகின்றனர் என்பது பொருள் அல்ல. பஸ்களில் குண்டு வெடிப்பதும், அரசியல் படுகொலைகள் இடம்பெறுவதும் மற்றும் ஏனைய பயங்கரவாத செயல்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் இவற்றுக்கான காரணங்களை எந்த வழியிலேனும் இல்லாதொழிக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்க விழைவதே யுத்தத்திற்கு சார்பான போக்கை அவர்கள் கொண்டிருப்பது காரணமாகும். இதேபோல தமிழ் மக்களும் பல வருடங்களாக பல்வேறு புறக்கணிப்புகள், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை தென்னிலங்கை மக்கள் அதிகம் அறியாமல் இருப்பதும் இதற்குக் காரணமாகும். இது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.
ஆகவே, நான் பல வருடங்களாக வலியுறுத்தி வருவது போல், கொலை, அழிவு மற்றும் துன்ப துயரங்களை ஏற்படுத்துவதைத் தவிர, இந்த யுத்தம் எதனை சாதிக்கப் போகிறது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யுத்தத்திற்கெதிராக குரல் எழுப்புவதுடன், பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு தமது அரசியல் தலைவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஜே.வி.பி.க்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு அரசியலில் எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடும்?
பதில்: ஜே.வி.பி.க்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்பூசலும் பிளவும் தென்னிலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. ஜே.வி.பி.யின் வசம் உள்ள தோட்டங்களின் மூலம் சட்ட விரோதமான முறையில் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதேநேரம், ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து செயற்பட ஆரம்பித்தனர் . இது விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டிராத ஜே.வி.பி.யின் மத்தியபீடம் இந்த உறுப்பினர்களின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி கொண்டிருந்தது. தற்போது ஜே.வி.பி.யானது அரசாங்கத்திற்கெதிராக குறிப்பாக ஊழல் செயற்பாடுகளுக்கெதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. பாராளுமன்றத்திற்கு புறம்பாக அரசாங்கத்திற்கெதிராக பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
தற்போது விமல் வீரவன்ச தான் ஒரு புதிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, செயற்பட்டு வரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அடிப்படையிலேயே இந்த இயக்கமும் ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. இந்த இயக்கத்தில் முன்னணி உறுப்பினராக விமல் வீரவன்ச இருந்ததுடன், அதிதீவிர சிங்கள தேசியவாதிகள் இதில் அங்கம் வகித்தனர்.
ஜே.வி.பி.க்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பிளவானது இருதரப்பினரும் தமது அசிங்கங்களை மக்கள் முன்காட்டச்செய்துள்ளது.
இதுவரை ஜே.வி.பி. வகித்துவந்த மூன்றாவது அரசியல் சக்தி என்ற ஸ்தானம் பறிபோயிருப்பதுடன், இதனை மீளவும் ஜே.வி.பி. ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நாம் நம்பவில்லை.
ஜே.வி.யின் ஒரு பகுதி சுதந்திரக் கட்சியுடன் இணையும். மற்றொரு பகுதியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவர். ஏனையவர்கள் பாராளுமன்றத்திற்குப் புறம்பான குழுவாகத் தொடர்ந்தும் ஜே.வி.பி.யில் இருப்பர்.