-விதுரன் -
அரசும் படைத்தரப்பும் நினைத்ததற்கும் மாறாகவே வடக்கே களநிலையுள்ளது. விடுதலைப்புலிகள் பலமாகவேயுள்ளனர். புலிகளின் திட்டமிடலும் பதில் தாக்குதல்களும் படையினரின் தாக்குதல் திட்டங்களை தவிடுபொடியாக்குகின்றன. இதனால், புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் படைத்தரப்புள்ளது.
வடக்கே புலிகளுக்கெதிரான படைநடவடிக்கை வெற்றிகரமாக நடப்பது போன்றும் அங்கு தினமும் புலிகள் பெருமளவில் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் படையினருக்கு மிகமிகக் குறைந்தளவு இழப்புக்களே ஏற்படுவது போல் தென்பகுதி மக்களை நம்பவைக்க அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. எனினும், அங்கு களநிலை வேறாகவே உள்ளதை தென்பகுதி மக்கள் நன்குணரத் தொடங்கிவிட்டனர்.
ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின் நடைபெற்ற போரில் 9,000 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 700 படையினர் கொல்லப்பட்டும் 2,400 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவ தரப்பை ஆதாரம் காட்டி ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது வட பகுதி களமுனையில் என்ன நடக்கிறதென்பதை தென்பகுதிக்கு ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கும்.
யாழ். குடாநாட்டில், கிளாலி மற்றும் முகமாலையில் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவு பாரதூரமானது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் நிலையில் யாழ். குடாவிலிருந்து பளை மற்றும் ஆனையிறவு நோக்கிய பாரிய முன்நகர்வு முயற்சி மீண்டுமொருமுறை படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. படையினரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக புலிகளின் பதில் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்துள்ளது. புலிகள், ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் படையினர் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களது ஆயுதக் கையிருப்பு மிக மோசமாக இருப்பதாக கூறிவந்த படையினர், வன்னிக் களமுனை எதிர்பார்த்ததற்கும் மாறாயிருப்பதால் பாகிஸ்தானிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் அவசர அவசரமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதேநேரம், புலிகளும் தாராளமாக ஆயுதங்களை தருவிப்பது படைத்தரப்புக்கு வன்னிக் களமுனையில் மிக மோசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.
மடு தேவாலயம் ஒரு இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இல்லாத போதும் அரசியல் நோக்கங்களுக்காக அது கைப்பற்றப்பட்டது. எனினும், மடுமாதாவின் திருச்சொரூபமில்லாத ஆலயத்தை கைப்பற்றிவிட்டு அடுத்த என்ன செய்வதெனத் தெரியாது படையினர் தடுமாறுகின்றனர்.
வன்னிக் களமுனையிலும் யாழ். குடா முன்னரங்க நிலைகளிலும் புலிகளின் பதில் நடவடிக்கைகள் மிகவும் பலமாகவேயுள்ளது. அவர்களது ஆயுத பலம் அங்கு படைத் தரப்புக்கு தினமும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வடபகுதி போர்முனையில் வெற்றிபெறுவதாயின் விடுதலைப்புலிகளின் விநியோகப் பாதைகளை தடை செய்ய வேண்டுமென்றதொரு நிலை படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மேற்கே மன்னார் முதல் கிளாலி வரையான சிறு கடல் பகுதியையும் கிழக்கே கொக்குத்தொடுவாய் முதல் நாயாறு வரையான பெருங்கடல் பகுதியையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரவேண்டிய கட்டாய தேவையுள்ளது. இவ்விரு கடல் பரப்பையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதாயின் அதனோடிருக்கும் தரைப் பகுதிகளை முதலில் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.
இதன்மூலமே அந்தக் கடற்பரப்புகளையும் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விடுதலைப்புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.
மேற்கே மன்னார் கடற்பரப்பை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக கடந்த வருட பிற்பகுதியில் மன்னாருக்கு தெற்கே மன்னார் முதல் சிலாவத்துறை வரையான கரையோரப் பகுதியை கைப்பற்றிய படையினர் அப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை நிறுத்தினர். தெற்கிலிருந்து புத்தளம் கடற்பரப்பினூடாக புலிகள் சிலாவத்துறை கரையிலிருந்தே செயற்பட்டு வந்தனர். முதலில் இதனைத் தடுத்து நிறுத்தி தென்பகுதியுடனான புலிகளின் கடல்வழி விநியோகத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்காகவே, மன்னாரிலிருந்து சிலாவத்துறை ஊடாக கொண்டச்சி வரையான கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
இந்தப் பகுதிகளைக் கைப்பற்றமுன்னர் வன்னியிலிருந்து புலிகள் சிலாவத்துறை, கொண்டச்சி ஊடாகவே அநுராதபுரம் மாவட்டத்தின் வில்பத்து காட்டினுள் நுழைந்து அங்கிருந்து செயற்பட்டு வந்ததுடன் அங்கிருந்து தென்பகுதிக்குள்ளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வந்ததாக படைத்தரப்பு கருதியது. இதனால், மன்னாருக்கு தெற்கே சிலாவத்துறை, கொண்டச்சி பகுதிகளை கைப்பற்றியதன் மூலம் தென்பகுதியூடான புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுத்து நிறுத்தியதாகக் கருதிய படைத்தரப்பு, மன்னாருக்கு வடக்கே கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவுக்கும் வன்னிக்குமிடையிலான கடல்வழி விநியோகப் பாதையை தடுத்துநிறுத்த முயல்கிறது.
இதேநேரம், கிழக்கு கடல் பரப்பூடாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வருவதால் முல்லைத்தீவு கடல் பரப்பை முழுமையாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்திவிடலாமென படையினர் கருதுகின்றனர். இதனால் தான், முகமாலையில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து படையினரின் கவனம் தற்போது மணலாறு பகுதிக்கு திரும்பியுள்ளது. மணலாறிலிருந்து கரையோரமாக முல்லைத்தீவு நோக்கிய நகர்வானது, புலிகளின் கோட்டைக்குள் நுழைவதென்பதுடன் புலிகளின் கடலாதிக்கத்தையும் இல்லாது செய்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.
படையினரின் இந்த நோக்கங்களை புலிகளும் அறிவர். இதனால்தான், மன்னாருக்கு வடக்கே கரையோரப் பகுதி நோக்கிய பாரிய படைநகர்வுக்கெதிராக கடும் தாக்குதலைத் தொடுப்பது போல் மணலாறு பகுதியிலும் படையினரின் பாரிய படை நகர்வு முயற்சியை தடுத்து நிறுத்துவதில் புலிகள் மிகத் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக மணலாறு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே மிகக் கடும் சமர் நடைபெற்று வருகிறது. இந்தக் களமுனையில் படையினரின் ஆட்லறித் தளங்களையும் மோட்டார் நிலைகளையும் அழிப்பதில் புலிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
கடந்த 30 ஆம் திகதி இங்கு கடும் சமர் நடைபெற்றுள்ளது. பல மணிநேரம் நடைபெற்ற இந்தக் கடும் சமரில் 40 படையினர் வரை கொல்லப்பட்டும் 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் புலிகள் இரு மோட்டார் தளங்கள் எரிந்தும் ஆட்லறித் தளமொன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வன்னியில் மன்னார் களமுனை போலன்றி மணலாறும் வவுனியாவும் அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் இந்தக் களமுனைகள், தாக்குதல் சமரில் ஈடுபடுபவர்களை விட தற்காப்புச் சமரில் ஈடுபடுவோருக்கே வாய்ப்பாக உள்ளது.
மணலாறு பகுதியில் பிரிகேடியர் நந்தன உடவத்தவை கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது படையணி முன்நகர்வு முயற்சியில் ஈடுபடுகிறது. இவர்களுக்குப் பின்னால் விஷேட அதிரடிப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து வாபஸ் பெறப்பட்ட அதிரடிப் படையினர், மணலாறில் இராணுவத்தினருக்கு வலுச் சேர்க்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் களமுனையை தற்போது படையினர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர்.
தரையில் முன்நகர்வு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் கடற்பரப்பை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயலும் படைத்தரப்புக்கு இங்கு கடற்புலிகளும் சிம்மசொப்பனமாயுள்ளனர். இதனால், கடற்பரப்பில் கடற் புலிகளை எதிர்கொள்வதில் பேராபத்துள்ளதை உணர்ந்த படையினர் கடற்புலிகளின் தாக்குதல் படகுகளை கரையோரத்திலேயே அழித்துவிட வேண்டுமென்பதற்காக தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல மீன்பிடிப் படகுகள் அழிந்து போனதுடன் கரையோரப் பகுதியில் மீனவர் குடியிருப்புக்களும் அழிந்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி நாயாறு கடற் பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று கடற்புலிகளால் அழிக்கப்பட்டது. வழமையான தற்கொலைப் படகுத் தாக்குதல் மூலமே இந்தப் படகு அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் கூறினாலும் கடற்படையினர் இதனை முற்றாக மறுக்கின்றனர். இது கடல் மட்டத்திற்கு மேலான தாக்குதலல்ல எனக் கூறும் கடற்படையினர் கடலடித் தாக்குதல் மூலமே இந்த டோரா மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். எனினும், இத்தாக்குதல் எப்படி நடத்தப்பட்டதென இன்று வரை கடற்படையினரால் உறுதியாகக் கூறமுடியாத நிலையுள்ளது.
இந்தத் தாக்குதலையடுத்து அந்தக் கடற்பரப்பில் சிதைந்த நிலையில் பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டதால், இது கடலுக்கடியிலான தற்கொலைத் தாக்குதலாயிருக்க வேண்டுமெனப் படையினர் கருதினாலும் அது எவ்வகையான தாக்குதலென அறிய முடியாது தடுமாறுகின்றனர்.
அத்துடன், தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையினர் நீண்ட தூரத்திலிருந்தே கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். கரையை நெருங்கிச் செல்வதில்லை. மீண்டுமொரு தாக்குதலுக்கிலக்காகலாமென்ற அச்சம் கடற்படையினருக்குள்ளது.
முல்லைத்தீவு நோக்கிய படையினரின் நகர்வையும் முல்லைத்தீவு கடலில் ஆதிக்கம் செலுத்த முயலும் கடற்படையினரின் நடவடிக்கையையும் விடுதலைப்புலிகள் மிகவும் பாரதூரமாகவே கருதுகின்றனர். கடற்படையினருக்கெதிராக கடலடித் தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகள், மணலாறு பகுதியில் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்ளும் படையினருக்கெதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதனொரு நடவடிக்கையாகவே அவர்கள் கடந்த 27 ஆம் திகதி அதிகாலை மணலாறில் படைநிலைகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
(தொடர்ச்சி Sunday Thinakkural பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)