Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
போதிய உணவு கிடைக்காததும் பாரிய மனித உரிமை மீறல்
[04 - May - 2008] [Font Size - A - A - A]
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் இலங்கை உட்பட உலக நாடுகளிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் இந்த மோசமான பிரச்சினையின் பாரதூரத்தன்மையை கவனத்தில் கொண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விஷேட அமர்வொன்றை நடத்துமாறு ஐ.நா.வின் உணவு விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் புதிதாக நியமனம் பெற்றுள்ளவருமான விஷேட அறிக்கையாளர் ஒலிவர் த சூட்டர் வலியுறுத்தல் விடுத்திருக்கின்றமை உண்மையிலேயே சிறிதளவாவது ஆறுதலளிக்கும் செய்தியாகும். மக்களுக்கு போதியளவு உணவு கிடைப்பதற்கான உரிமையை மீறுவது பாரதூரமான உரிமை மீறல் என்பதை மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதும் அவசரமானதும் என்பதை ஒலிவர் த சூட்டர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரிசி, கோதுமை மற்றும் தானியங்களின் விலைகள் உலக நாடுகளில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் இவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் தடைகளை அமுல் படுத்தியுள்ளன. இந்நிலையில், உணவு நெருக்கடியின் பாரதூரமான தன்மையையும் இதனால், ஏற்பட்டு வரும் மோசமான விளைவுகளையும் ஐ.நா. உறுப்பு நாடுகள் அணிதிரண்டு ஒரு குரலில் வலியுறுத்துவதற்கு இடமளிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விஷேட அமர்வு இடம்பெறுவது உடனடித் தேவையாக உள்ள விவகாரம் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். சர்வாதிகார அரசாங்கங்களினால் 10 கோடி பேர் கைது செய்யப்பட்டாலோ அல்லது 10 கோடி மக்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டாலோ நிச்சயமாக நாம் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுடன் மனித உரிமைப் பேரவையின் விஷேட அமர்வுகளை நடத்துவோம். இதனையொத்ததே இந்தப் 10 கோடி தொகையிலுள்ள ஒவ்வொருவருடைய உணவுப் பிரச்சினையுமாகும். கண்மூடித்தனமாக சர்வாதிகாரப் போக்கில் தத்தமது அரசியல் நோக்கங்களுக்கமைய நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டால் சர்வதேசம் செலுத்தும் கவனத்தின் அதே அளவுக்கு இந்த உணவு நெருக்கடியால் அதாவது விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதவர்களின் உரிமை மீறல் தொடர்பாகவும் உலகம் கவனத்திற்கெடுக்க வேண்டியது அவசியமென சூட்டர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தற்போதைய உணவு நெருக்கடி தொடர்பாக அரசாங்கங்கள் அமைதியாக இருக்க முடியாதெனவும் இந்த விடயத்தை சாதுர்யமாக கையாண்டு பரிகாரம் காண வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை உணவு நெருக்கடியைத் தீர்த்து வைக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இலங்கையின் பணவீக்கம் பழைய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் 29.9 சதவீதமாக உயர்ந்திருப்பதாக புள்ளி விபரவியல் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தனது பிந்திய அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் காலத்தையும் தற்போதைய அரசாங்கம் நழுவவிட்டிருப்பதாகவும் பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்து வரும் நிலையில் பொருளாதாரத்துக்கு கடும் சோதனைக் காலமாகவே எதிர்வரும் ஆண்டுகள் அமையுமெனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்போ, உணவு நெருக்கடியோ ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மோசமாகப் பாதிப்படைய வைக்கும் என்பது நிச்சயமான விடயம். ஆனால், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை புறக்கணித்து அரசியல் நோக்கங்களை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அது `வளை எறி' போன்று மீண்டும் வீசியவரையே தாக்கி விடும். யுத்தத்தில் வெற்றி கொண்டால் பொருட்களின் விலை அதிகரிப்பாலும் தட்டுப்பாட்டாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் விசனம் தணிந்து விடுமெனக் கருதியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தென்படுகின்றது.

`பசி வந்தால் பத்தும் பறந்து விடும்' என்பார்கள். போதிய உணவின்றி மக்கள் நலிவடைந்து செல்லும் நிலையில் மற்றைய தேவைகள் என்பன இரண்டாம் பட்சமேயாகும். ஆகவே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி மக்களின் போதிய உணவுக்கான உரிமையை நிலை நிறுத்துவது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். இதேவேளை, இலங்கையின் பிரதான உணவுப் பொருளான அரிசிக்கு உத்தரவாத விலையை அரசு அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் மிகவும் தரங் குறைந்த அரிசி வகைகளே கடையில் விற்பனை செய்வதை காணமுடிகின்றது. ஆகவே உத்தரவாத விலை அதிகரிப்பு மட்டும் போதாது. தரமான பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடப்பாடாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com