டாக்கா:பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவியுமான ஷேக் ஹசீனா யாருடைய மிரட்டலுக்கும் பயந்து அரசியலிலிருந்து ஓய்வுபெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் இராணுவ ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி அரசியல் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்துள்ளது.
முன்னாள் பிரதமர்கள் காலிதா ஸியா , ஷேக் ஹசீனா ஆகியோர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருவரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறும்படி தான் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் தன் வக்கீல்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அவர்களிடம் தெரிவித்துள்ளதாவது;
யாருடைய வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் பயந்து நான் அரசியலை விட்டு ஓய்வுபெற மாட்டேன். இடைக்கால அரசில் உள்ள எல்லோரும் என் மீது பொய் வழக்குகள் போட்டு என்னை அரசியலிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் யாருடைய விருப்பத்துக்காகவும் அரசியலை விட்டு விலக மாட்டேன்.
இடைக்கால அரசு இந்த ஆண்டு நடத்தப்போகும் தேர்தலில் என் கட்சியினரை கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் வக்கீல்களிடம் கூறினார். இந்தத் தகவலை அந்த வக்கீல் நிருபர்களிடம் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தபோது விமானப்படைக்கு போர் விமானங்கள் வாங்கிய போது இலஞ்சம் வாங்கியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்களிடம் இதைத் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.