வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் செனட்டர் பராக் ஒபாமா தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கின்ற போதும் அவருக்கான ஆதரவு சற்று குறைவடைந்துள்ளதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த போட்டியில் ஒபாமாவைவிட ஹிலாரி கிளின்டனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இது ஒபாமாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல மாநிலங்களில் ஒபாமா பெற்ற வெற்றியால் அவர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தாலும் அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது. வேட்பாளர் போட்டியில் ஒபாமாவுக்கு ஒரு மாதத்துக்கு முன் 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இது 51 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்னை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர் ஒபாமாதான் என்று கடந்த ஒரு மாதத்துக்கு முன் 56 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தற்போது 48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் மற்றொரு போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடந்த சில வாரங்களாக ஆண் வாக்காளர்களிடம் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கே கடும் போட்டி ஏற்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலில் அதன் செல்வாக்கு சரியக் காரணமாகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தற்போது அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குடியரசுக் கட்சிக்கும் பாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் செல்வாக்கு சரிந்துள்ளதை இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 21 சதவீதம் பேர்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈராக்குடனான போரை புதிய ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க இன்னும் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலைவரப்படி 1,705 பேராளர் வாக்கு ஒபாமாவுக்கும் 1,575 பேராளர்களின் வாக்கு ஹிலாரிக்கும் கிடைத்துள்ளது. யார் வேட்பாளர் எனத் தீர்மானிக்க மொத்தம் 2,025 வாக்குகள் தேவை. இந்த இரண்டு பேரில் யாருக்கும் இந்த வாக்குகள் கிடைக்கப்போவதில்லை.
எனவே கட்சியின் உயர் நிலைக்குழு ஆகஸ்ட் மாதம் கூடி அதில் உயர்நிலை பேராளர்கள் அளிக்கும் வாக்கு மூலம் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.?