*டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாக நோக்கவில்லை. தமிழ் மக்களும் அவரை விரோதியாகப் பார்க்கவில்லையென மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் பாரியார் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
அமைச்சர் சகல சமூகங்களையும் சமனாகவே பார்த்தார். அவரின் அரசியல் சிந்தனை உயர்வானதாக இருந்தது. அதில் நிதானம் இருந்தது.
ஜெயராஜின் சிந்தனைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. எனவே, அவற்றை முன்கொண்டு செல்ல வேண்டுமென மக்கள் விரும்பினர். இதற்காக என்னை அரசியலில் குதிக்குமாறு மக்கள் வலியுறுத்தினர்.
கட்டான தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசியப் பட்டியல் எம்.பி.யான பேராசிரியர் விஸ்வ வர்ணபால ராஜிநாமா செய்து அந்த வெற்றிடத்திற்கு என்னை நியமிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
எனினும், இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.
ஜெயராஜ் பயணித்த பாதையில் நானும் பயணிக்க விரும்புகிறேன். எனது பயணம் மெதுவானதாக இருக்கலாம். ஆனால், அது உறுதியானது.
அவர் வருடாந்தம் 1,500 மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் வழங்கினார். இதன்மூலம் வறிய மாணவர்கள் கல்வியைத் தொடரவும் உயர்நிலையை அடையவும் வழிவகுத்தது. இத்திட்டத்தை நானும் முன்கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.
எனது கணவர் தமிழ் மக்களை எதிரியாக நோக்கவில்லை. தமிழ் மக்களும் அவரை விரோதியாகப் பார்க்கவில்லை. அவர் சமாதானப் பிரியராகவே செயற்பட்டார் என்றும் அவர் கூறினார்.