சென்னை: தடை காரணமாக, தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததை இலங்கை மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டு இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருவது அதிகரித்து வருவதால் இனிமேல் தமிழக அரசின் தடையை மீறப்போவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீன்களின் இனப் பெருக்கத்துக்காக, கிழக்கு கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே இறுதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக் காலத்தில் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிவாரணத் தொகை பிரச்சினை ஒருபுறம் இருக்க, இலங்கை மீனவர்களோ வேறொரு ரூபத்தில் தொல்லை தருகின்றனர்.
தடைக் காலம் என்பதால் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். "தடைக் காலத்தில், கடலில் மீனவர்கள் இல்லாத காரணத்தால், இந்திய கடலோரப் பகுதிகளுக்குள் இலங்கை மீனவர்கள் எளிதில் நுழைகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை காசிமேடு மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் 15 இற்கும் மேற்பட்ட படகுகளில் இந்தியக் கடல் பகுதிக்குள் வந்து இந்திய கடலோர காவல் படையிடம் இலங்கை மீனவர்கள் பிடிபட்டுள்ளனர்" என்கிறார் தென்னிந்திய மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கு. பாரதி.
அத்துமீறி உள்ளே வரும் இலங்கை மீனவர்களை சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்திய கடலோர காவல் படை ஈடுபடுவது கிடையாது.
இது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர் தமிழக மீனவர்கள். இலங்கையில் தமிழக மீனவர்கள் பிடிபட்டால் அவர்களை சிறையில் அடைக்கின்றனர். இங்கு மட்டும் இலங்கை மீனவர்களிடம் கரிசனம் காட்டப்படுகிறது.
"அத்துமீறி நுழைந்தாலும், பல சமயங்களில் இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் `அன்போடு' வழியனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம், இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக கடலோர காவல் படையினர் செயல்படுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டுகின்றனர் தமிழக மீனவர்கள்.