கிழக்கில் மக்கள் விடுதலை முன்னணி தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இத்தேர்தல் பிரசாரத்துக்கென அம்பாறை பகுதிக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸ மற்றும் திருகோணமலைக்குப் பொறுப்பாக ஜயந்த விஜயசேகரவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அம்ஜான் உம்மாவும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இக்கட்சியினர் தமது தேர்தல் பிரசாரம் தொடர்பான அறிவிப்பில், கட்சியின் முதன்மை வேட்பாளர்களாக அம்பாறை மாவட்டத்துக்கு கிரிஷாந்த பியதிஸ்ஸவையும் திருகோணமலைக்கு விமல் பியதிஸ்ஸவையும் மட்டக்களப்புக்கென முகமட் இப்றாகிம்மையும் நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அம்பாறையில் 13 சிங்களவர்களும் 4 முஸ்லிம்களும் திருகோணமலையில் 8 சிங்களவர்களும் 4 முஸ்லிம்களும் ஒரு தமிழரும் மட்டக்களப்பில் இரு சிங்களவரும் 10 முஸ்லிம்களும் இரு தமிழர்களும் தமது கட்சியின் சார்பில் போட்டியிட நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.