கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர் குழு புதிய அரசியல் கட்சியை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்தே இப்பதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளனர். கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் அரசியல் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இக்கட்சி கிழக்குத் தேர்தலின் பின்னர் உதயமாகவுள்ளது.
புதிய கட்சியின் தலைவராக விமல் வீரவன்சவும் செயலாளராக நந்தன குணதிலகவும் தேசிய அமைப்பாளராக கமல் தேசப்பிரியவும் செயற்படவுள்ளதாக அறியவருகிறது.
இவ்விடயங்கள் குறித்து நந்தன குணதிலக்க எம்.பி. தெரிவித்திருப்பதாவது;
எமது கட்சி கடும் போக்குடையதாக அமையாது. தற்போதைய ஜே.வி.பி.யின் நகலாகவும் செயற்படாது எமது தலைவர் ரோஹன விஜேவீரவின் சிந்தனைகளை முன்னெடுக்கும் முற்போக்கு கொள்கையுடைய கட்சியாக செயற்படும்.
தேசப்பற்று, முற்போக்கு கொள்கையுடைய சகலரும் எமது கட்சியில் இணையலாம். எமது கட்சியின் வகுப்பு பேதங்களுக்கு இடம்கிடையாது.
தற்போதைய ஜே.வி.பி.யில் காணப்படும் அடிப்படைவாத கொள்கைகளைப் போன்றல்லாது ஜனநாயக ரீதியாக மக்கள் நலன்மிக்க கொள்கைகளையுடைய கட்சியாக இது விளங்கும்.
விமல் வீரவன்சவை கட்சியில் மீண்டும் இணையுமாறு ஜே.வி.பி.யால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.