கனடாவில் வதியும் இலங்கை தமிழரான சுரேஷ் யோக்கிம் (39 வயது) 12 நாட்களில் முழு நீள திரைப்படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைப்பதற்காக அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளார்.
ஏற்கனவே 53 சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர் தற்போது ரொரண்டோவில் பொலிவூட்டுக்கான காட்சிகளை திட்டமிட்டு வருகின்றார். தமிழ் படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் இடம்பெறவுள்ள நிலையில் இம்முழு நீள திரைப்படத்துக்கான வசனம் முதல் படப்பிடிப்பு மற்றும் தணிக்கை முதல் வடிவமைத்தல் உட்பட வெளியீடும் 12 நாட்களில முடிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே 13 நாட்களில் அதிகூடிய விரைவான திரைப்படத்தை வெளியிட்டு ரூஸ் மெல்கின் மற்றும் ஜோன் கோர் சாதனை நிகழ்த்தியுள்ளனர் இந்நிலையில் ஜோக்கிமினால் வெளியிடப்படவுள்ள 2 மணி நேரத் திரைப்படத்தையடுத்து அவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படவுள்ளனர்.
அவர் செய்த சாதனைகளில் நீண்ட நேர மரதன் ஓட்டம் (25 மணி 49 நிமிடம்) வானொலி ஒலிபரப்பு (12 மணி) ஒரு காலில் நிற்றல் (76 மணி 40 நிமிடம்) தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தல் (69 மணி) மற்றும் மின் அழுத்தியைப் பயன்படுத்தல் (55 மணி 5 நிமிடம்) அடங்குகின்றன.
படத்தின் கதாநாயகன் என்ற வகையில் இது குறித்து யோக்கிம் தெரிவித்ததுடன் படப்பிடிப்பு மற்றும் வெளியீடும் டிசம்பரில் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் நான் அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளேன். அங்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து அவர்களது ஒத்துழைப்பைப் பெறவுள்ளேன்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக எனக்கு உதவுவதற்கு அனுசரணையாளர்களும் ஊக்குவிப்போரும் உள்ளனர் என்றார்.
நான் கதாநாயகனாக நடிக்கவுள்ள நிலையில் 5 முதல் 7 நாள்வரை தினமும் 5 மணித்தியாலம் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் மிகுதியாகவுள்ள 7 நாளில் சாதனை படைக்கும் படத்தினை எல்லோரும் பார்வையிடும் மட்டும் தூங்க மாட்டேன் என்று யோக்கிம் தெரிவித்தார்.
மேலும், தணிக்கையாளர்களின் அனுமதி மின்னஞ்சல் மூலம் வரவுள்ளதாகவும் இதனை தயாரித்தவுடன் உடனடியாக வெளியிடவுள்ளதுடன் அது ஒரு கிழமைக்குள் ஏனைய நாடுகளில் வெளியிடப் படுமெனவும் கூறினார்.
இதனை நான் ஒஸ்காருக்கு எடுத்துச் செல்லவுள்ளேன். இப்படத்துக்கு பின்னர் அடுத்த 20 வருடங்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதமும் கின்னஸ் சாதனையை முறியடிக்கும் படங்களை நான் ஒழுங்கு முறையில் வழங்கவுள்ளேன். எனது அடுத்த படத்தில் "இலிட்ட" என்ற படத்திலுள்ள 65 ஆடைகளின் சாதனையை முறியடிக்கவுள்ளேன்.
ஹிந்தி படத்தை 21 தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரித்து சாதனையை பதிவு செய்யவுள்ளதுடன் நான் ஏற்கனவே, 35 வித்தியாசமான பாங்குகளை கொண்ட ஹொலிவூட்டுக்கான தயார்ப்படுத்தலை ஏற்படுத்தியுள்ளேன். நான் வீட்டிலிருந்து கொண்டு வருடத்துக்கு 400 படங்களை பார்பதனால் இதற்கான யோசனைகளை வைத்துள்ளேன் என்றும் யோக்கிம் தெரிவித்தார்.