தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக உட்புகுந்து மீன் பிடித்தார்களென குற்றம் சாட்டப்பட்டு தமிழகக் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 60 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் விடுதலை தொடர்பாக அங்குள்ள இலங்கைக்கான துணைத் தூதுவர் ஹம்ஸா இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவும் உரிய தரப்புகளினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டிய வெளிவிவகார அமைச்சு அடுத்து வரும் சில தினங்களில் இம்மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களளெனவும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டுள்ள 60 மீனவர்களும் சென்னை மற்றும் ராமேஸ்வரப் பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.