பிறந்து 27 நாட்களேயான பச்சிளம் குழந்தை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயை கைது செய்து அவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொரளை லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையொன்று காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பொலிஸாரும் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் காணாமல் போன சிசுவை வைத்தியசாலை 2 ஆம் மாடியிலிருந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்.
இதையடுத்து பொலிஸார் சிசுவின் தாயாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணும் அவரது 27 நாள் நிரம்பிய அங்கவீனமுற்ற சிசுவும் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.