*ரவி கருணாநாயக்க எம்.பி.தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்களினால் அங்கு நடைபெறவுள்ள தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் துணிவுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஐ.தே.க.ரவி கருணாநாயக்க எம்.பி.தெரிவித்ததாவது;
கிழக்கு தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகையில் அங்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைவரம் தொடர்பில் நாம் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். இது நீதி, நியாயமான தேர்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏனைய கட்சிகளினால் சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாதுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பில் எங்கு பிள்ளையான் குழுவினர் நடமாடுகின்றனர் எப் பகுதியில் முகாமிட்டுள்ளனர் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் உரிய ஆதாரங்களுடன் ஆணையாளரின் கவனத்தை ஈர்த்தோம்.
இவ்வாறான சூழ்நிலையில் ஆணையாளர் துணிவுடன் செயற்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினோம் என்றார்.