*சுட்டிக்காட்டுகிறது சர்வதேச மன்னிப்புசபை
நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை இலங்கையில் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்குவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
2008 ஜனவரி 16 இல் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து வட, கிழக்கில் மோதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றத்தையடுத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான அறிக்கையிடுதலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்திருப்பதாவது;
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கையிடுதல் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் வெற்றிடமானது தேவையற்ற கட்டுப்பாடுகளின்றி பத்திரிகையாளர்கள் செய்திகளை எழுதுவதற்கும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப்படுத்துவதற்குமான அவசியத்தை வலியுறுத்துகின்றது.
சிறுபான்மை தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த 25 பத்திரிகையாளர்கள் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஊடகத்துறை பணியாளர்களுக்கு மதிப்பளிப்பதுடன், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் ஏனைய தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை எனவும் தாக்குதல்கள் , காணாமற்போதல், ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமெனவும் இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
அதேசமயம் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் , கொலைகளை நிறுத்துமாறு விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஊடகவியலாளரை இலக்குவைப்பதை நிறுத்திக் கொள்வது அவசியம் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.