எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது சகல அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் அன்றைய தினம் நான்கு மணிநேரம் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க சகல அரச தனியார் தொழில் தருநர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை காலத்தை அந்த ஊழியர் தொழில்புரியும் இடத்தில் இருந்து அவரது வாக்களிப்பு நிலையத்துக்குப் போகவும், திரும்பி வரவும் உள்ள தூரத்தைக் கருத்திற் கொண்டு தொழில் தருநரால் தீர்மானிக்க வேண்டும்.
1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் இல. 2 இன் 123 ஆவது பிரிவின் கீழ் இந்த நான்கு மணிநேரம் விடுமுறை தொழிலாளர்களுக்கு தொழில் தருநரால் சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் உப பிரிவின்படி தொழிலாளர் ஒருவருக்கு தேர்தலில் வாக்களிக்க நான்கு மணிநேர விடுமுறை தொழில் தருநரால் வழங்கப்படாவிட்டால் அவர் மீது நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு 500 ரூபாவிற்கு மேற்படாத குற்றப்பணம் அல்லது ஒரு மாத காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதனால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரச தனியார் தொழிலாளர்களுக்கு நான்கு மணிநேர விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த விதியின்படி தற்காலிக ஊழியர்கள் உட்பட சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.