கொழும்பில் நடைபெற்ற ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் துர்க்மெனிஸ்தான் நாட்டில் "அஸ்ஹாபட்" கழகம் அரை இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது.
இப்போட்டியில் இலங்கையின் சார்பில் ரட்ணம் கழகம், துர்க்மெனிஸ்தான் நாட்டின் சார்பில் அஸ்ஹாபட் கழகம், பூட்டான் நாட்டின் சார்பில் "ரான்ஸ்போர்ட் யுனைட்டெட் கழகமும்", மியன்மார் நாட்டின் சார்பில் " கன்பவ்ஸா" கழகம் ஆகியன பங்குபற்றின. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் பங்கு பற்றின.
பூட்டான் அணி பங்குபற்றிய 3 போட்டிகளிலும் படுதோல்விகளையே சந்தித்து, இவ்அணி 1 ஆவது போட்டியில் ரட்ணம் கழகத்திடம் 7-1 கோல்களினாலும், துர்க்மெனிஸ் தான் அணியிடம் 5-0 கோல்களினாலும், மியன்மார் அணியிடம் 11-0 கோல்களினாலும் தோல்வி அடைந்தது.
துர்க்மெனிஸ்தான் அணி 1 ஆவது போட்டியில், எதிர்பாராத விதமாக இறுதி நேரத்தில் மியன்மார் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல் மியன்மார் அணி, ரட்ணம் கழகத்திடம் 3-2 கோல்களினால் தோல்வி அடைந்தது. பூட்டான் அணியை வெற்றி பெற்றதன் மூலம், மியன்மார், ரட்ணம், துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள், கருத்தில் எடுக்கப்படமாட்டாது என்று ஆசிய உதைபந்தாட்ட வாரியத்தின் போட்டிக்குழு திடீரென அறிவித்ததனால் ரட்ணம் கழகமா, துர்க்மெனிஸ்தான் அணியா அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகப் போகின்றது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ரட்ணம், துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி கடந்த ஞாயிறு (27 ஆம் திததி) சுகததாச விளையாட்டு அரங்கில் கொட்டும் மழையின் மத்தியில் ஆரம்பமானது. போட்டி ஆரம்பமாகும் போது, மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்பதையே காணக்கூடியதாக இருந்தது.
இப்போட்டியின் இடைவேளைவரை, இரு அணிகளும் கோல்கள் போடும் ஓரிரு கட்டங்களை தவறவிட்டபோதிலும், இடைவேளைக்கு முன்பாகவே துர்க்மெனிஸ்தான் அணி 42 ஆவது நிமிடத்திலும், 45 ஆவது நிமிடத்திலும் இரு கோல்களை அடுத்தடுத்து போட்டு இடைவேளையின் போது 2-0 கோல்களினால் முன்னணி வகித்தது.
இடைவேளையின் பின்பு ரட்ணம் கழகம் கோல்கள் போட எடுத்த பல முயற்சிகளை, துர்க்மெனிஸ்தான் அணி வீரர்கள் பின்னணியில் நின்று தடுத்து விளையாடிய வண்ணமே நின்றனர். இதேநேரம், இடைவேளையின் பின்பு இரு அணியிலும் தலா ஒரு வீரர்கள் முறைதவறி விளையாடியதனால் மத்தியஸ்தரினால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இறுதியில் துர்க்மெனிஸ்தான் அணி 2-0 கோல்களினால் வெற்றி பெற்று, அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவானது.