பிரபல ஓட்ட வீரரான ரோகான் பிரதீப்குமாருக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் காரணமாகவே மருதானை மாளிகாகந்த நீதிமன்றம் ரோகான் பிரதீப்குமாருக்கு மேற்படி தண்டனையை வழங்கியுள்ளது.
வென்னப்புவையைப் பிறப்பிடமாகக் கொண்ட வீரர் ரோகான் பிரதீப்குமார 1999 ஆம் ஆண்டில் இருந்து சிறந்த ஓட்ட வீரராகத் திகழ்கின்றார். இவர் தெற்காசிய , ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர், 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டிகளில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்தவர்.
காலில் ஏற்பட்ட வலி காரணமாக அண்மைக்காலங்களில் எதுவித மெய்வல்லுநர் போட்டிகளிலும் பங்குபற்றாது இருந்தவர். 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களைப் பெறாவிட்டாலும் சிறப்பாக ஓடி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெற இருக்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ரோகான் பிரதீப்குமார பெரும்பாலும் பங்குபற்றக் கூடுமென்று இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் பின்னவல தெரிவித்துள்ளார்.