|
எமக்கு வேண்டாதவர்கட்கு ஏதேன் கெடுதல் நடந்தால் நம்மிற் சிலருக்கேனும் அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. "தனக்கு மூக்கறுத்தாலும் எதிரிக்குச் சகுணப் பிழை" என்கிற மனநிலை இது. எதிரியே ஆனாலும் எதிரிக்கு ஏற்படுகிற எல்லாக் கெடுதலும் எங்களுக்கு நன்மையாகி விடாது.
எதிரிக்கு ஏற்படுகின்ற கெடுதல் யாரால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பன பற்றி நாம் யோசிக்க வேண்டும். எதிரிக்கு எதிரி எப்போதும் நண்பனல்ல. ஏனென்றால் மனித உறவுகளும், சமூக உறவுகளும் ஒரே நேர்கோட்டில் வைக்க கூடியவையும் அல்ல. நட்பும் பகையும் என்று வெட்டொன்று துண்டிரண்டாக வகுக்கக் கூடியவையும் அல்ல. எதிரிக்கு எதிரி எங்களுக்கு எல்லாரிலும் பெரிய எதிரியாகவும் இருக்க இயலும்.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போரால் தீர்க்க இயலாததது என்பது இப்போதைக்கேனும் எல்லாருக்கும் விளங்க வேண்டும். ஆனாலும் போர் தொடருகிறது. போரை யாரும் வெல்ல இயலாது என்றும் பல முறை சொல்லப்பட்டுப் பெரும்பாலானோரால் எப்போதாவது ஏற்கப்பட்டுள்ளது. போரில் தமது தரப்பு இழப்புக்களைச் சந்திக்கிற போது இந்த விதமான ஞானம் வருகிற சிலருக்கு நிலைமைகள் தமக்குச் சாதகமாக மாறுகிற போது போரை வெல்லலாம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. "போரில் யாரும் வெல்ல முடியாது" என்று சொல்லப்படுகிற போது பலர் எதிரியால் வெல்ல முடியாது என்ற கருத்திலேயே அதை விளங்கிக் கொள்கிறார்கள்.
கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தின் பாடங்களை எமது தலைமைகளும், ஊடகங்களும் பெருமளவு மறந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது. அது மட்டுமன்றித் தங்களைப் போரியல் நிபுணர்களாகவும் அரசியல் ஆய்வு நிபுணர்களாகவும் காட்டிக் கொள்ளுகிறவர்கள் தங்களது கட்டுரைகளிற் தமது முற்சாய்வுகட்கு வசதியான விதமாகவே தகவல்களைத் தெரிவு செய்கின்றனர். சிலர் தகவல்கள் என்ற பேரில் ஊகங்களையே முன் வைக்கின்றனர். இவ்வாறான திரிப்புக்கள் எந்த மக்களின் நலன் கருதிக் கட்டுரைகள் எழுதப்படுவதாகப் பாவனை செய்யப்படுகிறதோ அதே மக்களை ஏய்த்து முடிவில் அவர்களை விரக்திக்குள் தள்ளிவிடுகின்றன. இது அரசாங்கத்தரப்பிலும் நடக்கிறது. விடுதலைப் போரட்டத்தின் சார்பாகவும் நடக்கிறது
இருதரப்பிலும் மக்கள் அறிய வேண்டிய பல உண்மைகளில் ஒரு சிறு பகுதியேனும் மக்களுக்கு சொல்லப்பட்டிருந்தால் இன்று மக்கள் மத்தியிலிருந்து இன, மொழி, மத வேறுபாடு கடந்த அமைதிக்கான ஒரு வெகுசன இயக்கம் வலுவுடன் இயங்கிக் கொண்டிருக்கும். அல்லது இன்று அத்தகைய ஒரு இயக்கத்திற்கு தேவையில்லாமலே போயிருக்கலாம்.
எனினும் நமது செய்திகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? பழிக்குப் பழி, உயிருக்கு உயிர் என்கிற விதமாகவே போர்ச் செய்திகள் வழங்கப்படுகின்றன. லட்சக் கணக்கானோரை பட்டினிக்குட்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைத்துக் கொண்டிருக்கிற போரை எவ்வாறு தமது ஊடகங்கள் சித்திரிக்கின்றன? போரால் முழு நாடுஞ் சிதைவதுபற்றிய கவலையை விட எதிரிகளில் நாலு பேர் மோதலிற் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிற மகிழ்ச்சி பெரிது. நாட்டையும் போரையும் இப்படிப் பார்க்கிற விதமாக மக்களைப் இனவாத வெறுப்பில் அடிப்படையிலேயே பழக்கப்படுத்திய பிறகு அதற்கேற்ற விதமாக எழுதுவதும் பேசுவதும் காட்டுவதும் வணிக நோக்கில் நியாயப்படுத்தப்படுகின்றன.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, நிலையான அமைதி என்பன பற்றி முன்னுக்குப் பின் முரணான சிந்தனைகளே முன்வைக்கப்படுகின்றன. வரலாறு பற்றியோ சமகால உலக நிகழ்வுகள் பற்றியோ சரிசரியான புரிதல் கூட இல்லாமாலேயே எல்லாத் தரப்பிலும் ஆய்வுகள் பல நடக்கின்றன.
பலஸ்தீனம், இஸ்ரேல், கொ சோவோ, பங்களாதேஷ்,திபெத், தாய்வான், காஷ்மீர், நேபாளம், தென்னாபிரிக்கா என்று பல விடயங்களில் "ஞானி நிலவைச் சுட்டிக்காட்டினால் மூடன் சுட்டுவிரலைப்" பார்பான் என்கிற விதமாக அடிப்படை உண்மையைத் தவிர்த்து மேலோட்டமாகத் தெரிகிறவற்றை வைத்து குழப்பமான முடிவுகட்கு வருகிறது அறியாமையால் மட்டும் அல்ல. தற்செயலான ஞாபக மறதியால் முக்கியமான உண்மைகள் மறக்கபடுவதில்லை. தமது வசதி கருதியே அவற்றை அவர்கள் புறக்கணிக்கின்றனர். அது நித்திரை அல்ல, பாசாங்கு.
சோவியத் ஒன்றியத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாகப் பிரிந்து போதும் உரிமையுடன் கூடிய குடி அரசுகள் இணைந்து இருந்தன. ரஷ்யச் பேரரசின் கீழ்க் கடுமையாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அவ்வாறான குடி அரசுகளையோ சுயாட்சிகளையோ கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் சோஷலிஸம் விழுத்தப்பட்டதில் சோஷலிஸத் கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகட்குப் பெரும் பங்குண்டு. அதே வேளை, அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கூட்டணியின் குழிபறிப்பு வேலைகளும் முக்கியமான பங்காற்றின. அமெரிக்க ஏகாதிபத்தியம் வேண்டியது சோவியத் ஒன்றியத்தில் சோஷலிஸத்தின் முடிவு மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம் என்கிற வலுவான ஒரு அமைப்பை இல்லாதொழிப்பதும் அதன் தேவையாக இருந்தது. கொர்பச்சொவைவிட யெல்ற்ஸின் தலைமை அதற்கு வசதியாக இருந்தது. யெல்ற்ஸினுக்கு பின்பு ரஷ்யா மீளவும் எழுச்சிபெற்று வருகிறது. பொருளாதாரத்துறையில் முக்கியமான சில பகுதிளில் அரச கட்டுப்பாட்டை மறுபடி இறுக்கமாக்கி கொண்டதாலேயே ரஷ்யாவின் அரசு வலிமையுடன் அந்நிய ஊடுருவலை எதிர்த்துநிற்க முடிகிறது. சீனாவில் சோஷலிஸத்தால் உயிர் பெற்ற ஒரு உற்பத்தித்தளத்தின் மீது முதலாளித்துவம் கட்டியெழுப்பப்பட்டுவருகிறது. சீனாவில் அமெரிக்க அக்கறை ஜனநாயகமின்மையோ மனித உரிமை மீறல்களோ பற்றியதல்ல. சீனா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு, ஆசியாவில் மட்டுமின்றி, மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலும் சவாலாக உள்ளது.
அதனாலேயே தாய்வானை நிரந்தரமாகவே பிரிக்கவும், திபெத்தில் பிரிவினையை ஊக்குவிக்கவும், வங்கூர் இனத்தவர் உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே கிளர்ச்சிகளை மூட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பிரித்தானிய ஆட்சியால் சீனாவில் தனது இறுதித் தளமான ஹொங்கொங்கை இழந்ததை இன்னமும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறான விடயங்களைப் புறக்கணித்து, இவற்றைவிட முக்கியமாக ஏற்கனவே பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சோவியத் அரசுகளைப் பிரிந்து போகத்தூண்டியது போல பூரண சுயாட்சிகளையும், சுயாட்சிப் பிரதேசங்களையும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஏன் உடைத்தெடுத்தது என்று யோசியாமல், கொசோவோவை முன்னுதாரணமாக்கச் சிலர் முற்படுவது ஏன்? திபெத்தில் தலாய்லாமா மூலம் அமெரிக்கா செய்யவேண்டுவது என்ன என்று ஆராயாமல், திபெத் கலவரங்களைத் தூண்டிவிட்டோர் யார் என்று ஆராயாமல், தலாய்லாமாவை ஒரு மனிதாபிமான சமூக விடுதலைப்போராளியாகச் சிலர் சித்திரிப்பது ஏன்?
பலஸ்தீனம் பற்றி தலாய்லாமாவின் நிலைப்பாடென்ன? காஷ்மிர் பற்றிய அவரது நிலைப்பாடென்ன? அவையெல்லாம் போக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அவரது நிலைப்பாடென்ன? மூர்க்கத்தனமான இடதுசாரி எதிர்ப்பும் அதன் தொடர்ச்சியாகச் சீன எதிர்ப்பும் தமிழ்த் தேசியவாதத்தை இன்னமும் பீடித்துள்ளன. குறுட்டுத்தனமான சிந்திய விசுவாசம், நன்கு பட்டுத் தெளிந்தும் பார்த்துத் தெரிய வேண்டியும், கண்முன் உள்ள உண்மைகளை மறைக்கிறது. அமெரிக்கா மீதும் ஐரோப்பிய நாடுகள் மீதும் நம்பிக்கைக்கான ஒவ்வொரு நியாயமும் காற்றோடு போன பின்பும் சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தண்டிக்கும் என்ற ஆசையில் தமிழ் தேசியவாதிகள் பலரும் உள்ளனர். சோனியா காந்தியை இன்னொரு "மஹாத்மா காந்தி" என்று சொல்லக்கூடிய அளவுக்குச் சிலரது எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துள்ளன. அவரது மகள் பிரியங்கா ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகச் சிறையிலுள்ள நளினியைச் சந்தித்ததற்கு மனிதாபிமான விளக்கங்களை ஒருசாரார் அள்ளி வழங்குகையில், இன்னொரு சாரார் அதில் ஈழத் தமிழருக்கும் (இயலுமென்றால்) விடுதலைப் புலிகட்கும் சாதகமான காய் நகர்த்தல்களை துருவித்துருவி தேடுகிறார்கள். பிரியங்கா - நளினி சந்திப்புக்கு தமிழ்த் திரையுலகக் கோமாளிகள் சிலர் உட்பட யார்யாரோ எல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள்.
மேற்படி சந்திப்புக்கு மனிதாபிமானம் காரணமென்றால் அது பத்து ஆண்டுகள் முன்பே கூட நடந்திருக்கலாம். அது ஒரு சின்ன அரசியற் காய் நகர்த்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் வரவுள்ள மாநிலசபைத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதனுடன் தொடர்பு உண்டு. தமிழக காங்கிரஸ் தனது தீவிர விடுதலைப்புலி எதிர்ப்புக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் உள்ள அக்கறையீனத்துக்குமிடையே உள்ள உறவைக் கையாள முடியாமல் திணறுகிற சூழ்நிலையில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில சங்கடங்களைத் தீர்க்கவும் இச் சந்திப்பு உதவும்.
இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச காய் நகர்த்தல்களின் காரணங்களை அறியாமற் சில கனவுகள் வளர்க்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து மூட நம்பிக்கைகளைப் போல, கொசோவோ போல சில நிகழ்வுகள் நல்ல சகுனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை அரசிற்கு எதிரான இன்றைய நகர்வு எதுவும் இன்றைய ஆட்சிக்கு எதிரானதாய் இருக்குமே ஒழிய இன்னொரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிரானதாய் இராது. அது இனஒடுக்கலுக்கு முடிவுகட்டக்கூடியது என்றால், பலஸ்தீன மக்கள் எப்போதோ தமது விடுதலையை வென்றிருப்பர். ஏகாதிபத்திய நோக்கங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் மூட நம்பிக்கைகள் வழிநடத்த இயலாது.
இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப்பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்குமுறைக்கே இட்டுச்செல்லும். |