Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாதது ஏன்? (தொடர்ச்சி)
பொ.ஐங்கரநேசன்

* இந்தத் தேர்தலில் என்றும் இல்லாத விதத்தில் தமிழ் முதல மைச்சரா? முஸ்லிம் முதலமைச்சரா? என்ற வாதமும் எழுப்பப்பட்டு வருகிறது. இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் தமிழரும் அதற்குப் பிறகு முஸ்லிம் மக்களும் ஆவர். எனவே, தேர்தலில் வெல்ல வேண்டுமாக இருந்தால் தமிழ், முஸ்லிம் வாக்குகள் மிகவும் அவசியம். இதனாலேயே தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, அதனூடாக அம்மக்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என அரசு சிந்திக்கிறது. முதலமைச்சர் கனவில் இருக்கும் பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் ஒரே கட்சியின் வேட்பாளர்களாக இருந்தபோதும், சிங்களத்துக்கு சேவகம் செய்வது நீயா - நானா என்ற போட்டியில் ஈடுபட்டுள்ளனர். பிள்ளையான் தமிழன் எல்லோரும் அரசு சார்பாக கேட்கும் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா முஸ்லிம் எல்லோரும் அரசு சார்பாக கேட்கும் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். ஹிஸ்புல்லாவும், அதாவுல்லாவும் இன்னும் ஒருபடி மேலே சென்று தமிழீழக் கனவைத் தகர்க்கப்போவதாகப் பிரசாரமும் செய்கிறார்கள். அதாவது தமிழனுக்கு எதிராகப் பேசினால்தான் வாக்குகள் கிடைக்கும் என்ற சிங்கள இனவாதிகள் பேசும் இனவாதத்தையே இவர்களும் கக்கி வருகின்றார்கள். மாகாணசபை முறைமை என்பதே தமிழர் போராட்டத்தின் விளைவுதான் என்பதை மறந்து இவர்கள் வீரவசனங்கள் பேசலாம். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுதான் இறுதித் தீர்வல்ல. நாம் மிக அதிகபட்ச உரிமைகளுடன் வாழும் காலம் ஒன்று ஏற்படும். அப்போது இனவாதம் பேசியவர்கள் தமது தவறுகள் பற்றிச் சிந்திப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் வடக்கு - கிழக்கு என்பது தமிழ் - முஸ்லிம் மக்களின் தாயகம். நாங்கள் எல்லோரும் மொழியால் ஒன்றுபட்டவர்கள்.இங்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்தாலும் முஸ்லிம் முதலமைச்சராக வந்தாலும் அவர்கள் எமது முதலமைச்சர்கள்தான். ஆனால் அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கி தமிழர்கள் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் தமிழர்களுக்கும் வாக்களிக்கக் கூடாது என்பது பேரினவாத நலன்களுக்கே சாதகமாக அமையும். எனவே தேர்தலின் போது இப்படியானவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் சிங்கள அரசும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளும்.

* கிழக்கில் தேர்தல் நடாத்துவதற்கான சூழ்நிலை இல்லாதபோதும், கிழக்கிலுள்ள நிலங்களை இந்தியாவுக்குத் தாரைவார்ப்பதற்காகவே அங்கு மாகாண சபைத் தேர்தல் அவசரம் அவசரமாக நடாத்தப்படுவதாக ஜே.வி.பி. கூறிவருகிறது. இதுபற்றி...?

ஜே.வி. பி.ஆரம்பத்தில் இருந்தே இந்திய விரோத நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்ட 89-90களில் பம்பாய் வெங்காயம், மைசூர் பருப்பு போன்ற உணவுப் பொருள்களின் விற்பனைக்கு அவை இந்திய நகரங்களின் பெயர்களைத் தாங்கியிருக்கின்றன என்ற காரணத்தால் தடைவிதித்தது. காலனித்துவ காலத்தில் பிரித்தானியர்கள் மலைநாட்டுத் தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வந்ததையும் ஜே.வி.பி.இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. அவர்கள் சீன சார்பு கம்யூனிஸ்டுகளாக தங்களைக் கூறிக்கொள்வது இந்த இந்திய எதிர்ப்பு வாதத்துக்கான காரணமாக இருக்கலாம். ஜே.வி.பி.யினர் இன்றும் தங்களது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அதே இந்திய விரோத தமிழர் விரோத கருத்துகளையே நம்பியுள்ளது. இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமாக நடக்கிறதென்றும், நிலங்கள் பறிபோகிறது என்றும் கூக்கிரலிடுவதன் மூலம் சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடு சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றது. மற்றப்படி, கிழக்கிலுள்ள தமிழர்களுடைய நிலங்கள் இந்தியாவிடம் பறிபோகிறது என்று ஜே.வி.பி. கண்ணீர் வடிக்கிறது என்று சொன்னால், அது `ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கும்.

* வடக்கு - கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்ட போது வாழாவிருந்த இந்தியா, இப்போது திருகோணமலை அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவது தொடர்பாக உங்களின் பதில் என்ன?

வடக்கு, கிழக்கு தமிழரின் வரலாற்று பூர்வமான வாழ்விடம் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதாலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டது. தமிழ் மக்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி என்ற அடிப்படையில் வடகிழக்கு இணைப்பை பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக கடமை. டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய பொழுது அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் சிங்கள அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பிரித்தபின் அதனை மீண்டும் இணைப்பதற்கு இந்தியத் தரப்பில் முயற்சிகள் எடுக்காதது உண்மையாகவே வருந்தத்தக்கது. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு முழுமையான ஒரு தீர்வு எட்டப்படாமல், தமிழர்கள் விரட்டப்பட்ட பகுதியில் இந்திய அரசு தனது பொருளாதார திட்டங்களை நிறுவுமானால் அது தமிழர்களை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கும்.

* இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அண்மைக்காலங்களில் இந்தியாவின் அணுகுமுறை தமிழர்களுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு மிக மோசமான இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் போது அந்த அரசுக்கு விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்குவதும், புலனாய்வுத் தகவல்களை வழங்குவதும், பயிற்சிகள் அளிப்பதும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது என்ற தோற்றப்பாட்டையே கொடுத்துள்ளது. அது மாத்திரமல்லாமல் இலங்கை அரசு மிகமோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் இந்தியா அதனைக் கண்டிக்கவில்லை. மாறாக, ஜெனீவா போன்ற சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசைப் பாதுகாக்க முனைவது மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிப்பதாகவே உள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி வடக்கு - கிழக்கை பிரித்து இராணுவத் தீர்வுக்கு முனையும் ஒரு அரசுக்கு இராணுவ, பொருளாதார ரீதியில் தொடர்ந்தும் உதவுவதென்பது இலங்கை அரசின் சகல நடவடிக்கைகளையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தப்படுத்தப்படும். இதனை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் மக்கள் சீனாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ ஆதரவாளர்கள் அல்ல; அவர்கள் இந்தியாவின் நண்பர்கள், ஆனால், தமிழர்கள் எப்படி அழிந்து போனாலும் பரவாயில்லை, இந்தியாவின் பொருளாதார நலன்களும் பாதுகாப்பு நலன்களும்தான் முதன்மையானவை என நினைத்து டில்லி செயற்படுமானால், அயல்நாடொன்றில் தமது உண்மையான நண்பர்களை இழக்கின்றார்கள் என்றே நான் கருதுகின்றேன். அப்படியான பிழைகளைக் களைந்து தமிழ் மக்களை நண்பர்களாக கொண்டு செயற்படுவதே இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு உதவியாக இருக்கும்.

* கடைசிக் கேள்வியாக மீண்டும் கிழக்கு மாகாண தேர்தல் குறித்தே கேட்க விரும்புகிறேன். அரசாங்கத்தைத் தோற்கடியுங்கள் என்று சொன்னால் கிழக்கு மக்களின் தெரிவுதான் என்ன? இந்தத் தெரிவு மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வைத் தந்துவிடும் என்று நம்புகிறீர்களா?

கிழக்கின் சுயேச்சைக் குழுக்கள் ஒரு ஆசனத்தையேனும் எடுப்பார்களா என்ற கேள்வியே இன்று தொக்கி நிற்கிறது . இந்தச் சூழ்நிலையில் ஆளும் கட்சி நிராகரிக்கப்படவேண்டுமாக இருந்தால் அடுத்த தெரிவு ஐக்கிய தேசியக் கட்சிதானே. இவர்கள் இனவாதிகள் இல்லையா? இவர்களுக்கு வாக்களித்தால் மாத்திரம் இனப்பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றுதானே கேட்கிறீர்கள்? ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதன் மூலம் பேரினவாதத் தன்மைகள் மறைந்து விடுமென்றோ, இனப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றோ நாம் நம்பவில்லை. ஆனால், மகிந்த அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வரும் சிங்கள மயப்படுத்தலுக்கும், இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வுதான் வழி என்ற அதன் நிலைப்பாட்டுக்கும் தற்காலிகமான ஒரு தடை ஏற்படலாம். அத்துடன் சர்வதேச ரீதியாகத் தம்மை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் அரசாங்கத்துக்கு இது ஒரு படிப்பினையாகவும் அமையும்.

தொடர்பு முகவரி தொடர்பு முகவரி இ,33, பாராளுமன்ற குடியிருப்பு தொகுதி ஸ்ரீ மாதிவெல ஜெயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா, மின்னஞ்சல் : kandiah57@hotmail.com

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com