|
கவீரன்
சிங்கள நீதிபதிகளிடையே கூட அவர்களின் நோக்கின் அடிப்படையில் மூன்று விதத்தவரை அடையாளம் காண முடியும் என்று சென்ற வாரம் கூறியிருந்தேன். அது பற்றி இனி ஆராய்வோம்.
ஒரு தமிழர் சார்பில் அடிப்படை மனித உரிமை வழக்கொன்று உச்ச நீதிமன்றுக்குப் பல வருடங்களுக்கு முன் வந்தது. தான் பொலிஸாரால் சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி நட்ட ஈடு கேட்டு வழக்குப்பதிந்திருந்தார் அந்தத் தமிழர். வழக்கு மன்றுக்கு வந்த முதல் நாளே ஒரு நீதியரசர் அந்தத் தமிழர் சார்பில் தெரிபட்ட இளம் சட்டத்தரணியிடம் "உங்கள் கட்சிக்காரருக்குப் பொலிஸார் அடித்திருந்தார்கள் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். சொல்லுங்கள். என்ன குற்றம் செய்தார் உங்கள் கட்சிக்காரர்?" என்று சட்டத்தரணியை மிரட்டினார். இந்த நீதியரசர் முன்னர் பல வருட காலம் சட்டத்துறைத் தலைமையதிபதியின் அலுவலகத்தில் வேலைபார்த்ததாலோ என்னவோ அவருக்குப் பொலிஸார் ஒரு போதும் பிழைசெய்யமாட்டார்கள் என்ற ஒரு எண்ணம் போலும். அதுவுந் தமிழர்களுக்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் கட்டாயமாகத் தமிழர்கள் தான் ஏதோ பிழை செய்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர் அவர். இவர் நீதிபதிகளிடையே ஒரு பிரிவினரைச் சேர்ந்தவர். துவேஷம் அவர்களின் இதயத்துடிப்புடன் கலந்தது.
இன்னொரு பிரிவினர் இருக்கின்றார்கள். மிகச் சிறிய அளவினர் அவர்கள். இந்த நாட்டில் தமிழர்களுக்கு அநியாயங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதை நாம் தட்டிக் கேட்காவிட்டால் யார் தான் அதைச் செய்வார்கள் என்று எண்ணுபவர்கள் அவர்கள். தமிழர்கள் என்றதும் அவர்கள் மனதில் ஒருவித பச்சாத்தாபம் எழுவதை நாங்கள் பார்க்கலாம்.
மூன்றாம் பிரிவினர் தான் பெரும்பான்மையான நீதிபதிகள் என்று நினைக்கின்றேன். அவர்களுக்கு உள்ளூரத் தமிழர்கள் மீது பொதுவாக அத்தனை சுமுக அபிப்பிராயம் இல்லாவிடினும், சூழல் காரணமாக ஒருவித வன்மம் உள்ளூர இருந்துவரினும், அடிப்படை மனித உரிமைகளுக்குத் தமிழர்களும் உரித்துடையவர்களே என்ற மேலார்ந்த சட்டஞ் சார் எண்ணம் அவர்களை வரம்பு மீறி இனரீதியாகத் தீர்ப்பு அளிக்க அவர்களுக்கு இடங்கொடுப்பதில்லை. தம்மைத் தாமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதால் துவேஷத் தீர்ப்புக்கள் என்று கூறக் கூடிய தீர்ப்புக்கள் சிலவாகவே இருந்து வருகின்றன. ஆனால் துவேஷம் இன்று எல்லா மட்டச் சிங்கள மக்களிடையேயும் பரவியிருக்கின்றது என்பது வருந்தத்தைத் தருகிறது. படித்தவர்கள் மத்தியில் அது சற்று அதிகமாகவே இருப்பதை அவதானிக்கலாம். தமிழர்களிடையேயும் அப்படித் தான். நாங்களும் துவேஷத்திற்கு அடிமைகள் ஆகிவிட்டோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற எங்கள் பெருநோக்கு எம்மை விட்டகன்று விட்டது. சூழல்தான் காரணம் என்றாலும் எங்கள் உள்ளார்ந்த மனித நேயம் எங்களை விட்டு அகன்று விடத்தேவையில்லை. ஆனால் அகல விட்டு விட்டோம்.
சிங்கள மக்களின் இந்தத் துவேஷ மனப்பான்மை தான் தமிழர்களுக்குச் சுயாட்சி வழங்குவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகின்றது. அன்று சமஷ்டி என்றால் பிரிவினை என்றார்கள். இன்று நாட்டைக் கூறாக்கப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்கின்றனர். அரசியல் யாப்பில் தரப்பட்டுள்ள தமிழ் மொழி சார்பான ஏற்பாடுகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எந்த அரசாங்கமாவது முழுமையாக எடுத்ததாகச் சரித்திரம் இல்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழர்களுக்கு நன்மை தரும் எந்த நடவடிக்கையையும் எதிர்ப்பதே இவர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் "இந்தா அந்தா" என்பவர்கள் சூழ்நிலை மாறியதும் "தந்தால்ப் பார்" என்பார்கள். இதுதான் சிங்கள அரசியல் வாதிகளின் குணவியல்பாக இருந்து வருகிறது.
எதிரும் புதிருமாக இருக்கும் ஜனாதிபதியும் பாராளுமன்ற மேலதிகப் பலத்தைப் பெற்ற கட்சியும் தொடர்ந்து அரசியல் வாழ்வை சுமுகமாக நடத்துவது 1978 ஆம் ஆண்டின் இன்றைய அரசியல் யாப்பின் கீழ் அவ்வளவு சுலபமன்று.
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதியன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
தேர்தல் ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு நியமிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து ஆறு வருடங்கள் ஆட்சியில் இருக்க வேண்டிய அரசு 2004 இல் கலைக்கப்பட்டது. குறை வருடக் கலைப்பு நடைபெற்றது.
கருணா 2004 மார்ச் மாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து பிறிதொரு இயக்கத்தை நடத்தத் தொடங்கினார். ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.போன்ற மக்கியவெலி நடவடிக்கையே பிரிவுக்கு அடிகோலியது எனப்பட்டது.
இயக்கங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள். வெளியுலகத் தொடர்புகள் இல்லாத வரையில் இலக்குகளும் இலட்சியங்களுமே அவர்களின் குறிக்கோள்களாக இருப்பன. ஆனால் வெளியுலகச் "சுகங்"களைச் சுகித்ததும் நிலைமை மாறி விடும். "நாம் மட்டும் ஏன் காடுகளில் இருந்து கடும் வாழ்க்கைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும். வெளியேறினால் மாதுண்டு, மதுவுண்டு, பொன்னுண்டு, பொருளுண்டு, பிரமாண்டமான இந்த உலகுண்டு" என்று மனம் பேதலிக்கத்தொடங்கி விடும். இவ்வாறு போராளிகளின் மனங்களைப் பேதலிக்க வைக்க ஒரு கும்பல் காத்துக் கொண்டிருக்கின்றது. அதுவும் அப்போதைக்கப்போதைய சிங்கள அரசாங்கங்களின் அனுசரணையுடன்.
ஆகவே குறிக்கோள்களுடன் இயக்கங்கள் தொடர்ந்து நிற்பது என்பது மிகப்பெரியதொரு விடயம். அரசாங்கங்களுடன் சேர்வதால் இலட்சம் இலட்சமாக அவற்றிடம் இருந்து பெற முடியுமென்றால், வீடுகள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ முடியுமென்றால், பாதுகாப்புக்கள் பெற்றுப் பல்தேசங்கள் சென்று வர முடியுமென்றால் குறிக்கோள்களில் நாங்கள் ஏன் காலத்தை வீணடிக்க வேண்டும் என்று எண்ணுவது சாதாரண மனித சுபாவமே. தமிழ் மக்களுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் - அதற்காக நாங்கள் எங்கள் சுயநலத்தேவைகளைச், சொகுசுகளை, சுகங்களை விட்டுக் கொடுத்து எத்தனை நாட்களுக்குத் தான் வனவாசம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதுமே, கபடத்துடன் இடை புகுவோர் பொறிகளில் விழுந்து விடுகிறோம். ஆனால் இது வரை காலமும் நாம் வாழ்ந்த வாழ்க்கையையும் எங்களைப் பற்றிய மற்றவர்களின் நல்ல அபிப்பிராயத்தையும் தொடர்ந்து காப்பாற்றிக் கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஏதோ ஒரு முக்கியமான கொள்கையின் நிமித்தமே இந்த வனவாசத்தில் இருந்து வெளிவந்துள்ளோம் என்று எங்களைப் பெரிய கொள்கைவாதிகளாக, ஜனநாயகவாதிகளாக, யார் யாரையோ காக்கப்போகும் ஆபத்பாண்டவர்களாக, அநாதஇரட்சகர்களாக நம்மை நாமே சித்திரித்துக் காட்டிக் கொள்கின்றோம். அங்கு கொள்கையும் இல்லை. குல உறவின் மேலான பாரிய பற்றும் இல்லை. புதிய குறிக்கோள்கள் எல்லாம் வெறுஞ் சுயநலத்தான்! ஆகவே தான் கூறுகின்றேன் குறிக்கோள்களுடன் குண்டு வீச்சுக்களுக்கு மத்தியில் குலம் வாழ வாழ்ந்து வருவது என்பது ஒரு மகத்தான காரியம் என்று.
அந்த விதத்தில் கொள்கை ரீதியில் வனவாசத்தில்த் தேங்கி நிற்பவர்களை நாங்கள் மதிக்க வேண்டும். "அவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்? வெளியே வந்தால் எங்களைப் போல் சுதந்திரமாக வாழலாமே" என்று சிலர் கேட்கலாம். ஆனால் கருணாவின் இன்றைய பிரித்தானிய சிறைவாழ்க்கை அவர்களுக்குப் பதில் தரும். கொள்கைகளில் இருந்து எம்மைப் பிரித்து வைத்து, பிரிந்து வரும் எம்மவர்களின் சுதந்திர உணர்வுகளைக் கொச்சைப்படுத்தவென்றே எம்மைத் தகர்க்குந் தத்தமது குறிக்கோள்களுடன் அதிகாரம் பெற்ற அனுசரணையாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களிடம் பிடிபட்டால் தமிழர்கள் வாழ்க்கை வித்தியாசமானதாக மிக விரைவில் மாறிவிடும்.
அது பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம். |