Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பாதுகாப்பு நிலைவரம்
 
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி- (தொடர்ச்சி)
-விதுரன் -

படையினரின் ஆட்லறி நிலைகளையும் பல்குழல் ரொக்கட் நிலைகளையும் இலக்குவைத்தே புலிகளின் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு கூறுகின்றது. புலிகளின் விமானிகள் இரவுநேரப் பார்வைக் கண்ணாடிகளை அணிந்திருந்ததாகவும் எனினும் ஆட்லறி நிலைகளும் பல்குழல் ரொக்கட் நிலைகளும் நன்றாக மறைக்கப்பட்டிருந்ததாலும் எங்கும் இருள்மயமாயிருந்ததாலும் புலிகளின் விமானத்தாக்குதல் இலக்குகளை அழிக்கவில்லையெனத் படைத்தரப்பு கூறுகின்றது.

அதேநேரம், தாக்குதலை நடத்திய புலிகளின் விமானங்களை படையினரால் தாக்க முடியாது போனதுடன் விமானப் படையினரின் `வழி மறிப்பு' விமானங்களாலும் புலிகளின் விமானங்களை வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியவில்லை. இது, படையினரின் வான் பாதுகாப்புத் திட்டமானது தொடர்ந்தும் செயற்திறனற்றே இருக்கின்றதென்பதைக் காட்டுகிறது.

வான்புலிகள் இதுவரை ஐந்து தடவைகள் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்தவொரு தடவையும் வான்புலிகளை விமானப்படை விமானங்களால் வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியவில்லை. ஏனைய தாக்குதல்களை விட இந்தத் தாக்குதலுக்காக வான்புலிகள் எடுத்துக்கொண்ட தூரம் குறைவு. இதுவே, தங்களால் வான்புலிகளைத் தாக்க முடியாது போனமைக்கான காரணமென விமானப் படையினர் கூறுகின்றனர்.

புலிகளின் இரு விமானங்களும் மணலாறில் இலக்கை நெருங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வான்புலிகள் வருவது பற்றித் தெரிந்து விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டதாக விமானப் படையினர் கூறுகின்றனர். அநுராதபுரம் விமானப்படைத் தளத்திலிருந்து வை-7 ரக விமானம் வான்புலிகளை வழிமறிக்கச் சென்றபோதும் அவை மூன்று குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு வன்னிக்கு பாதுகாப்பாகத் திரும்பிச் சென்று தரையிறங்கிவிட்டன. எனினும், விமானப் படை விமானங்களால் அவற்றை வழிமறிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியாது போனதுடன் வான்புலிகள் தரையிறங்கும் நேரத்திலாவது குண்டுவீச்சு விமானங்களால் அவற்றைத் தாக்கி அழிக்க முடியாது போனதுடன் அவை தரையிறங்கிய இடத்தைக் கூட அடையாளம் காண முடியாது போய்விட்டது.

மணலாறு களமுனையில் புலிகள் வான் தாக்குதலை நடத்துகின்றார்களென்றால் அந்தக் களமுனையின் தீவிரத் தன்மையை உணரமுடியும். அத்துடன், மணலாறில் மோதல்கள் உச்சநிலையை அடையப்போவதும் உறுதியாகியுள்ளது. வன்னியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறும் போரில் புலிகள் தொடர்ந்தும் தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருகின்றனர். படையினரே தாக்குதல் சமரில் ஈடுபடுகின்றனர். களநிலைமைக்கேற்ப புலிகள் தாக்குதல் சமரை நடத்த முனையலாமெனவும் படைத்தரப்பு எதிர்பார்க்கின்றது.

முகமாலையில் ஏற்பட்ட பாரிய பின்னடைவால் குடாநாட்டு கள முனையில் படையினர் உடனடியாக மீண்டுமொரு தாக்குதல் சமருக்குத் தயாராகமாட்டார்களென்றே கருதப்படுகிறது. இதனால், வன்னியில் மன்னார், மணலாறு களமுனைகளிலேயே கடும் மோதல்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மன்னாரில் கூட மடு தேவாலயப் பகுதிக்கு படையினர் சென்றுவிட்டதால் இனி அவர்களது படைநகர்வு முயற்சி கரையோரப் பிரதேசங்களை நோக்கியதாகவே அமையக்கூடும். மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் தேவாலயத்திற்கு கொண்டு வர படையினர் மேற்கொண்ட முயற்சிகள், மறைமாவட்ட குருமார்களின் நிபந்தனைகளால் உடனடியாகச் சாத்தியமாகும் வாய்ப்பில்லையென்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகப் பாதைகளை தடை செய்வதே படையினரின் பிரதான இலக்காயுள்ளது. கடற்படையினர் பலம் குன்றியிருப்பதாலேயே விடுதலைப்புலிகள் கடல்வழியாக தங்கள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கரையோரப் பகுதிகளை தரைப்படையினர் கைப்பற்றி கடற்புலிகளின் கடல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலையுள்ளது. இதன் காரணமாகவே மன்னார்- பூநகரி வீதியை கைப்பற்றும் முயற்சியில் 58 ஆவது படையணி தீவிரமாக ஈடுபடவுள்ள அதேநேரம், கொக்குத்தொடுவாய் முதல் நாயாறு வரையான கரையோரத்தை கைப்பற்ற 59 ஆவது படையணி பாரிய தாக்குதல்களைத் தொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மணலாறு பகுதியில் முன்னேறிய படையினர் சுமார் இரு கிலோ மீற்றர் அகலத்திற்கு சுமார் 300 மீற்றர் தூரம் முன்னேறி நிலப் பகுதிகளை பிடித்து வைத்திருந்தனர். எனினும், கடந்த மாதம் 26 ஆம் திகதி இப்பகுதியில் இடம்பெற்ற கடும் சமர் மற்றும் 27 ஆம் திகதி நடைபெற்ற வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்கள் மூலம் அந்தப் பகுதிகள் மீண்டும் புலிகள் வசமாகிவிட்டதாகக் கூறப்படுவதுடன் இங்கு புலிகளும் தங்கள் தாக்குதல் அணிகளைக் களமிறக்கியுள்ளதுடன் புலிகளின் பீரங்கிப் படையணிகள் படையினரின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை இலக்கு வைத்து துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தி வருவதால் படையினர் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன்னார் கடற் பரப்பினூடானதும் முல்லைத்தீவு கடற்பரப்பினூடானதுமான புலிகளின் விநியோகப் பாதைகளை தடுத்து நிறுத்துவதினூடாகவே வன்னிப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனப் படைத்தரப்பு கருதுவதால் இவ்விரு பகுதிகளிலும் அடுத்துவரும் வாரங்களில் கடும் யுத்தம் வெடிக்கப்போகிறது. விடுதலைப்புலிகள் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com