Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
முஸ்லிம்களும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
-எம்.ஐ.எம்.முஹியத்தீன்-

2008 மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு (அம்பாறை) திகாமடுல்ல மாவட்டத்தில் பதியப்பட்ட வாக்களர்கள் 409,308. இன விகிதாசாரப்படி 42% முஸ்லிம்கள் 6 ஆசனங்கள், 39% சிங்களவர்கள் 5 ஆசனங்கள், 19% தமிழர் 3 ஆசனங்கள் மொத்தம் 14 ஆசனங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்பட்ட வாக்காளர்கள் 330,950 இனவிகிதாசாரப்படி 63% தமிழர்கள் 7 ஆசனங்கள், 36 % முஸ்லிம்கள் 4 ஆசனங்கள், 1% சிங்களவர்கள் ஆசனங்கள் எதுவும் இல்லை. மொத்தம் 11 ஆசனங்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் பதியப்பட்ட வாக்காளர்கள் 242,463 இனவிகிதாசாரப்படி 39% முஸ்லிம்கள் 4 ஆசனங்கள், 32% தமிழர் 3 ஆசனங்கள், 29% சிங்கள ஆசனங்கள். மொத்தம் 10 ஆசனங்கள்.

கிழக்கு மாகாணசபைக்கு இனவிகிதாசாரப்படி பெறக்கூடிய ஆசனங்கள் 39% முஸ்லிம்கள் 14,36% தமிழர் 13,25% சிங்களவர் 8ஆசனங்கள். மொத்த ஆசனங்கள் 35. கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு மாகாணசபை பட்டியலில் மேலதிகமாக 2 ஆசனங்களும் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணசபைக்குள்ள மொத்த ஆசனங்கள் 37.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தான் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்த மாவட்டத்திலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இல்லை என்பதும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் இன்று அதிகப் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களாகும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியையும் ஆட்சி அதிகாரத்தையும் பெறுவதற்கு குறைந்த பட்சம் 19 ஆசனங்களாவது பெறவேண்டும். இந்த நிலையில் இரு இனங்கள் அல்லது கட்சிகள் கூட்டுச் சேராமல் முதலமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சி அமைப்பது முடியாத காரியம்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு ஆட்சி அமைக்க உதவிய ஜே.வி.பி. மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதை எதிர்க்கிறது. ஹெலஉறுமைய கிழக்கு மாகாணத்தை எல்.ரீ.ரீ.யின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அரசாங்க இராணுவத்துக்கு உதவிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ரி.எம்.வி.பி.கட்சிக்கே முதலமைச்சர் பதவியையும் மாகாணசபை ஆட்சியையும் கொடுக்க வேண்டும். முஸ்லிம்கள் அரேபியாவுக்கு தான் போகவேண்டும் என்று பகிரங்கமாகப் பிரசாரம் செய்கின்றனர்.

இன்றைய அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஏழு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகத்தான் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்ததாக இவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர்.

உள்ளூராட்சி சபைகளின் நிரலையும் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்ட முறைகளையும் பார்க்கும் போது முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். முஸ்லிம்களாகிய எமக்கு எமது தேசிய இன விகிதாசாரப்படி அமைய வேண்டிய பிரதேச சபைகளோ, நகர சபைகளோ, மாநகர சபைகளோ இன்று இல்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேச சபைகளுக்கு பொருளாதார மூலவளங்கள் ஒதுக்கீட்டு விடயத்தில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதால் அவற்றுள் அநேகமானவை பொருளாதார ரீதியில் நிலைத்தகவு அற்றவையாக விளங்குகின்றன.

அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இன ரீதியாக முஸ்லிம்களுக்கு சொந்தமான இயற்கை மூலவளங்கள் பிரித்தெடுக்கப்பட்டு புதிய தமிழ்ப் பிரதேச சபையாகிய ஆலையடிவேம்போடு சேர்க்கப்பட்டுள்ளன. 13,000 தமிழர்களுக்குரிய ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு 37 சதுர மைல் நிலப்பரப்பும் அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவின் எஞ்சிய பகுதியில் உள்ள 23,000 முஸ்லிம்களுக்கு 20 சதுர மைல் நிலப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் 37 சதுர மைல் பிரதேசத்தில் 20 சதுர மைல்கள் இப்பொழுது முஸ்லிம் பிரதேச சபையின் கீழிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாய வயல் காணிகளாகும்.

அம்பாறை மாவட்டத்தில் சனத்தொகை அடிப்படையில் பார்க்கும் போது சிங்கள பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு முஸ்லிம் பிரதேச சபைகளுக்கு ஒதுக்கியளிக்கப்பட்ட நிலப்பரப்பைவிட 13 மடங்கு அதிகமானதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையிலும், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர் மற்றும் குச்சவெளியிலும் மிகவும் மோசமான பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2006 செப்டெம்பர் 16 சனிக்கிழமை பத்து முஸ்லிம் பொதுமக்கள் பொத்துவிலில் உள்ள றதல குளத்தருகே படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் அம்பாறைப் பிரதேச முஸ்லிம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ.மேல் இப்பழியைப் போட்டது. ஆனால் பொதுமக்கள் இது விஷேட அதிரடிப் படையினரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இலங்கைக்கரையோரத்தைக் காவுகொண்ட `சுனாமி' கடற்பேர்அலை ஏறக்குறைய 30,000 உயிர்களைப் பலிகொண்டது. இந்த அனர்த்தத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம்களே கூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்கள். படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் மரணித்தவர்களில் 50% சிறுபிள்ளைகள். சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் 2,633 சதுர.கி.மீ. விஸ்தீரணம் 14 பிரதேச செயலாளர் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்கள் காத்தான்குடி 3.89 சதுர.கி.மீ., ஏறாவூர் நகரம் 3.74 சதுர கி.மீ, கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) 6.84 சதுர.கி.மீ., கோறளைப்பற்று மத்தி 6.50 சதுர கி.மீ., பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு மொத்தம் கிட்டத்தட்ட 20 சதுர.கி.மீ.மட்டுமே. இது மொத்த மட்டக்களப்பு மாவட்ட விஸ்தீரணத்தின் 1.0% க்கு குறைவானதே. ஆனால் இன்றைய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சனத்தொகை 35% க்கு கூடுதலாக உள்ளது.

உள்நாட்டு விவகார ஆணைக்குழு 11 கிராம சேவகர் பிரிவைக் கொண்ட 240 சதுர கி.மீ. விஸ்தீரணமுள்ள முஸ்லிம்களின் வரலாற்று வாழ்விடப் பிரதேசத்தை கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர்பிரிவு எனப் பிரகடனம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தபோதும் இதன் எல்லைகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஏறாவூர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாய, கால்நடை வளர்ப்பு நிலங்கள் ஏறக்குறைய 12000 ஏக்கர் செங்கலடி - பதுளை ஏ5 வீதியை அண்மித்தே உள்ளது. இன்று இங்குள்ள அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அரச பாதுகாப்புப் படையினர் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை கிழக்கிலிருந்து வெளியேற்ற நடத்திய யுத்தத்தில் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் உள்ள ஐயன்கேணி, மீராகேணி, மிச்சநகர், ஹிதாயத்நர், தக்வாநகர் ஆகிய இடங்களில் மீள்குடியேற்றப்படுகின்றனர்.

குச்சவெளி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமம், மொத்த சனத்தொகை 29967, குடும்ப எண்ணிக்கை 8058, 65% முஸ்லிம்கள் 19443, 31% தமிழர்கள் 9282, 3% சிங்களவர் 337 பிரதேச சபையின் 9 அங்கத்தவர்கள். 6 முஸ்லிம்கள் 3 தமிழர்கள் முஸ்லிம் பெரும்பான்மையாகவுள்ள குச்சவெளிப் பிரதேசப் பிரிவுக்கு தமிழர் ஒருவர் பிரதேச செயலாளர். மொத்த கிராம சேவகர் 24. 65% முஸ்லிம்களுக்கு 7 கிராம நிலதாரிகள் மட்டும். 35% தமிழருக்கும் 17 கிராம நிலதாரி உத்தியோகத்தர்கள். ஒரு தமிழ் கிராம சேவகர் பிரிவின் சராசரிச் சனத்தொகை 250. ஆனால் முஸ்லிம் கிராமசேவகர் பிரிவின் சராசரி சனத்தொகை 1350.

உயர் நீதிமன்றத்தால் கிழக்கு மாகாணம் வடகிழக்கு ஒன்றிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அரச இராணுவத்தினரின் பூரணகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவுடன் யு.பி.எப்.ஏ.அரசாங்கம் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று கிழக்கில் வாழ்பவர்களில் ஆகக்கூடிய தொகையினர் முஸ்லிம்களாக இருக்கையில் புதிய கொடியில் முஸ்லிம்களை அடையாளப் படுத்தும் சின்னம் எதுவும் பொறிக்கப்படாதது கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பெரியதொரு புறக்கணிப்பாக இங்குள்ள முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

`நவபஞ்ச பலவேகய' கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் திட்டத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அதி உயர்பீடத்தின் பூரண ஆதரவும் பௌத்த குருமார், பாதுகாப்புப் படையினர், நிருவாக அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெருமளவு ஆதரவும் உண்டு. இவர்களின் குறிக்கோள் அதிவிரைவில் சிங்கள மக்களைக் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய இனத்தவராக்குவதுதான். இந்த மறைமுகமான திட்டம் அரச உதவியோடு கூடிய திட்டமிட்ட குடியேற்றம், உல்லாசப் பிரயாணம், பௌத்தமத மறுமலர்ச்சி ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும், தொப்பிகல (குடும்பிமலை) பிரதேசத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உடனடியாக ஆரம்பித்து சிங்களமக்கள் அதிகப்படியாக வரக்கூடிய குடிசன மாற்றத்தை ஏற்படுத்த மிக மும்முரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்று முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் தாங்கள் படுமோசமாகப் புறக்கணிக்கப் படுகின்றனர் என்னும் கருத்தும், தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களும் தவறிவிட்டனர் என்னும் கருத்தும் பரவலாக ஏற்பட்டுப் பெரும் விரக்தி மனப்பான்மையோடு வாழ்கின்றனர்.

இப்போதுள்ள இக்கட்டான நிலையில் எமக்குள் பிளவுகளை உண்டு பண்ணி ஒன்றிணைந்த முஸ்லிம் அரசியல் பலத்தை உடைப்பது மாபெரும் துரோகமாகும். கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான திட்டத்தோடு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நிதானமாகச் செயற்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

காணி, பொலிஸ் பாதுகாப்பு, உள்ளூராட்சி, பொது நிருவாகம் ஆகியன மாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்கப்படவிருக்கும் அதிகாரங்களில் முக்கியமானவை. 13 ஆவது திருத்தம் பூரணமாக அமுல் படுத்தப்படவிருப்பதால் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு மாகாண சபை அதிகாரமும் ஆட்சியும் முஸ்லிம்களுக்கு மிக மிக அவசியம். முஸ்லிம்களுக்கு இனரீதியாக உரித்தான 14 ஆசனங்களையும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வென்றெடுப்பதற்கு இச்சந்தர்பத்தை முஸ்லிம்கள் தவறவிடக் கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டு சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவுத் ஆகியோருக்கு கிழக்கு மாகாணசபை முதல் அமைச்சர் பதவி முக்கிய மற்றதாக இருக்கலாம். ஆனால் தேசிய முதலமைச்சர் பேரவையில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், இன்று தருக்கிழந்து நிற்கும் முஸ்லிம்கள் தலையெடுப்பதற்கும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அங்கீகாரத்தைக் கோரும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வழங்கவிருக்கும் அரசியல் அங்கீகாரத்தை அம்மக்களின் முக்கிய பிரச்சினை தீர்வுக்கான மிகப்பெரும் எதிர்பார்ப்பாக கொண்டு தீர்க்கமாகச் செயல்பட வேண்டும்.

Email this page Your Opinion Print this page
முஸ்லிம்களும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com