Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
அரச பங்காளியின் பாரதூரமான குற்றச்சாட்டு
[05 - May - 2008] [Font Size - A - A - A]
மலையக தோட்டப்பகுதிகளுக்குள்ளே தீவிரவாதத்தை புகுத்துவதற்கு சில தீய சக்திகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பும் துணை போய்க்கொண்டிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார். அட்டனில் நடைபெற்ற இ.தொ.கா. மே தினக் கூட்டத்தில் பேசுகையிலேயே பிரதியமைச்சர் இக்குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார். உண்மையிலேயே மலையக தோட்டப்புறங்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைப்பதும் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதும் புதிய விடயமல்ல. இனப்பிரச்சினை தலைதூக்கிய நாள் முதலே மலையக தமிழ்த் தோட்டத் தொழிலாள வர்க்கமும் அதன் கெடுபிடிகளுக்குள் சிக்குண்ட வண்ணமே காணப்படுகின்றது. தமிழ் பேசுகின்ற ஒரே காரணத்துக்காக தோட்டத் தொழிலாளர்களும் "புலிகள்" என்ற மனப்பாங்கிலேயே பேரினவாதமும், அரசும் கணிப்பீடு செய்து அந்த அப்பாவி மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்கின்றன. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. கடந்த காலங்களில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருசிலர் கிளிநொச்சியில் புலிகளின் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமையும் புலிகளுக்காக குரல் கொடுத்ததாலும் அப்பாவி மலையகத் தமிழ் மக்கள் மீதான சந்தேகம் பேரினவாதத்திடம் ஏற்பட்டதை மறுக்க முடியாதுள்ளது.

மலையக தோட்டத் தொழிலாளர் வர்க்கமானது ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்துவரும் சமூகமாகவே நோக்கப்படுகின்றது. அவர்களைப் பொறுத்தமட்டில் தொழிற்சங்கங்களுக்கு அப்பால் எதனையும் காணமுடியவில்லை. அவர்களது கோரிக்கைகள், உரிமைப் போராட்டம் என்பவையெல்லாம் தொழிற்சங்கங்களோடு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே காணப்படுகின்றன. தொழிற்சங்கத் தலைவர்களின் உத்தரவாதங்களும் பேச்சுக்களும் தான் அவர்களால் வேத வாக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில் தான் மலையகத் தோட்டங்களில் இளைஞர், யுவதிகள் போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சந்தேகத்தின் மீது கைது செய்யப்படுகின்றனர். அதிலிருந்து தப்புவதற்காக தோட்டப்புறங்களிலிருந்து வெளியேறி தலைநகருக்கும் ஏனைய நகர்ப்புறங்களுக்கும் வந்தவர்கள் கூட சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதாகக் கூட அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதையும், மலையக மக்கள் புலிகளுக்கு அபயமளிப்பதாகக்கூடத் தெரிவித்ததையும் கடந்தகாலங்களில் அவதானித்துள்ளோம். மலையக தோட்டத் தொழிலாளர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு புதியனவாகவோ, புதுமையாகவோ காண முடியாது.

இவற்றுக்கப்பால் இன்று மலையகத்துக்குள் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு அதனுள் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், இளைஞர் யுவதிகளையும் சிக்கவைப்பதற்கு தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத்தரப்பும் துணை போய்க்கொண்டிருப்பதாகவே பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலம் மலையகத்தில் அசாதாரண சூழ்நிலையை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார். இக்குற்றச்சாட்டு நியாயமானது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தமட்டில் அது அரசாங்கத்தில் இன்று அங்கம் வகிக்கின்ற ஒரு பங்காளிக் கட்சியாகவுள்ளது. அந்தளவு பலத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி இந்த விடயத்தை வெறுமனே மேடைப் பேச்சோடும் அறிக்கைகளோடும் மட்டுப்படுத்திக்கொள்ள முனையக்கூடாது. அதற்கும் அப்பால் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதை மறந்துவிடக்கூடாது. வடக்கு கிழக்குப் பிரச்சினையும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினையும் ஒன்றல்ல வெவ்வேறானது என்று கூறிவிட்டால் மட்டும் போதாது. இதனை ஆரம்பம் முதலே அதிகாரத்திலிருந்த அரசுகளுக்குச் சொல்லிக்கொண்டுதானிருக்கின்றோம். மீண்டுமொரு தடவை மலையக இளைஞர்கள், யுவதிகளின் பக்கம் பேரினவாதத்தின் பார்வை விழுந்திருப்பதாகவே இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது. கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யும் முயற்சியை விடுத்து வருமுன் காக்கும் முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் சொல்லி வைக்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com