பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் விட்டுக் கொடுப்பதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் தயாராகவுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது;
முஷாரப்பின் நம்பிக்கைக்குரியவர்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும், பிரதமரை நீக்கும் அதிகாரத்தையும் விட்டுத் தர முஷாரப் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களிடம் உறுதி கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு இரண்டு நிபந்தனைகளை முஷாரப் விதித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி நெருக்கடி நிலையை அமுல்படுத்திய பிறகு இராணுவத் தலைவராக தான் எடுத்த நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தேசிய பாதுகாப்பு சபையைக் கலைக்கக் கூடாது என்ற மற்றொரு நிபந்தனையையும் விதித்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியாக தனது பதவிக் காலம் முழுவதும் இருக்க அனுமதித்தால், நெருக்கடி நிலையின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மறுபடியும் பதவியில் அமர்த்த தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப்புடன் தொழில் ரீதியான உறவை வைத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி தயாராக உள்ளது. ஆனால், ஜனாதிபதி பதவியிலிருந்து முஷாரப் விலக வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் ஷெரீப் கடந்த வெள்ளிக்கிழமையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என முஷாரப்பின் நம்பிக்கைக்குரியவரான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அசிம் உறுதிப்படுத்தியுள்ளார். பி.எம்.எல். (க்யூ) தலைவர் சௌத்ரி ஷுஜாத் ஹுஸைன், முன்னாள் ஜனாதிபதி சர்தார் பாரூக் அகமது கான் லெகாரி, முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லா கான் ஜமாலி ஆகியோரை முஷாரப் சந்தித்துள்ளார்.
இவர்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர்களான லெகாரி, ஜமாலி ஆகியோர்தான் அக்கட்சியுடன் முஷாரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்துள்ளார்.