சூடானில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரது மனைவி உட்பட 22 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானின் வாவ் நகரிலிருந்து தென்பகுதி தலைநகரான ஜூபாவிற்கு சூடான் நாட்டுக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானத்தில் தெற்கு சூடானின் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் டிம் டெங் அவரது மனைவி , ஜனாதிபதியின் ஆலோசகர் ஜஸ்ரின் யாக், ஒரு இராணுவ அதிகாரி உட்பட 22 பேர் பயணித்தனர்.
விமானம் ஜூபாவில் இருந்து 375 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரும்பெக்நகர் அருகே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் 2 இயந்திரங்களிலும் கோளாறு ஏற்பட்டது.
இதை உடனடியாகக் கண்டுபிடித்த விமானி ரும்பெக் நகரில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அதற்கு ரும்பெக் நகர விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார். அந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. விமானம் நடுவானிலேயே வெடித்துச் சிதறிவிட்டது. இதில் விமானத்தில் இருந்த 22 பேரும் பலியானார்கள்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக ஐ.நா. சபையின் மீட்பு ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சென்றுள்ள மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடலைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்துப் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துப் பற்றி தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கிர் கூறுகையில்;
விமானத்தின் 2 இயந்திரங்களிலும் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டதால் விமானியால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் பலியாகி இருப்பதையொட்டி தெற்கு சூடானில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.