* நவாஸ் ஷெரீப் அறிவிப்பு
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பினால் கடந்த வருடம் பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் பணிக்கமர்த்தப்படுவார்களென அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளை பணிக்கமர்த்தும் விவகாரம் தொடர்பில் புதிய கூட்டணி அரசில் அங்கம்வகிக்கும் பெரிய கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) ஆகியவற்றுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி சர்தாரியும் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த வாரம் டுபாயில் பேச்சுக்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்தே இவ் அறிவிப்பை வெளியிட்ட நவாஸ்;
பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் 12 ஆம் திகதி மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறேன். அதே தினத்தில் இதற்கான தீர்மானத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கும். நீதிபதிகள் அனைவரும் அவர்களுக்குரிய கௌரவத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ் அறிவிப்புத் தொடர்பில் உடனடியாக கருத்து எதனையும் முஷாரப் வெளியிடவில்லை.
ஆனால், அரசியல் சீர்திருத்தங்களினூடாகவே இந்நீதிபதிகளை பணிக்கமர்த்தும் விவகாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்தாரி விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரத்தை முஷாரப் எவ்வாறு கையாளப் போகின்றார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியென அங்குள்ள நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
முஷாரப்பை கடுமையாக விமர்சித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி இப்திகார் சௌத்திரி உட்பட 60 நீதிபதிகளை கடந்த நவம்பரில் அவசரகால சட்டத்தின் கீழ் முஷாரப் பதவி நீக்கியமை குறிப்பிடத்தக்கது.