* பதுளை மே தின விழாவில் வடிவேல் சுரேஷ்
தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நவீன அணுகுமுறை மூலம் தீர்வினை ஏற்படுத்துவதே தொழிலாளர்கள் காங்கிரஸின் பிரதான நோக்கமென அதன் பொதுச் செயலாளரும் பிரதி சுகாதார அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தனது மே தின உரையில் குறிப்பிட்டார்.
பதுளை சேனநாயக்க அரங்கில் நேற்று நடைபெற்ற மே தின விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் இக் கன்னி மே தின காங்கிரஸின் தலைவர் வி.தினேஸ் தலைமையில் நரை பெற்றது. ஆரம்ப நிகழ்வாக தோட்டத் தொழிலாளர்களின் மா பெரும் எழுச்சி ஊர்வலம் பதுளை மா நகர் ஊடாகச் சென்று சேனநாயக்க மைதானத்தை அடைந்ததும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்வூர்வலத்திலும் விழாவின் போதும் மலையக பாரம்பரிய கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான வடிவேல் சுரேஸ் தொடர்ந்து தமது சிறப்புரையில்;
"பதுளை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்தே கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் ஒவ்வொரு இரு வருடங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த சம்பள விவகாரத்தில் திருப்பமொன்று ஏற்பட்டது. தொழிலாளர்களின் சம்பளத்தினைக் கட்டுப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே தொழிலாளர்களின் அடிப்படை தினச் சம்பளத்தில் முப்பது ரூபா என்ற அடிப்படையில் உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் மானிய விலையில் அரிசி பெற்றுக் கொடுக்கப்பட்டமையும் புதிய திருப்பங்களாகும்.
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா மாவட்டத்தின் தோட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பதுளை மே தின விழாவில் கூடி சிறப்பித்திருப்பது கண்டு உள்ளம் பூரிப்படைகின்றேன். மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மே தின கூட்டங்களை விட பதுளையிலேயே மிகப் பெரியளவில் தோட்டத் தொழிலாளர்கள் அணிதிரண்டுள்ளனர். இது போன்ற பாரிய மக்கள் சக்தி பெருந் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸிற்கு கிடைத்திருப்பது கண்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன்.
தொழிலாளர்களுக்குரிய இன்றைய தினத்தில் முல்லோயா கோவிந்தன், பத்தனை இலட்சுமணன், கீனக்கலை இராமையா, பூனாகலை சரோஜினி போன்ற உயிர் துறந்த தியாகிகள் அனைவரையும் இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டியதும் எமது கடமையாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பது அவசியமில்லை. போராட்டங்களை நடாத்தத் தூண்டுவதென்பது தொழிற்சங்கங்களின் இயலாத் தன்மையையே காட்டுகின்றது. இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு பெற்றது, தொழிற்சங்கங்களின் தூண்டுதல்களினால் வேலைநிறுத்தமென்ற போராட்டங்களின் மூலமேயாகும். இது தான் வரலாறு. அவ்வரலாற்றினையே, பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மாற்றியமைத்துள்ளது.
பதுளை மாவட்ட தோட்டங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்த போதிலும், வெவ்வேறு இடங்களிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கொடியுடன் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கதும், ஆரோக்கியமானதோர் சூழலைத் தோற்றுவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறைப் பகுதியில் நமுனுகலை பிளான்டேசன் நிறுவன பொறுப்பிலிருந்த ஏழு பெருந்தோட்டங்கள் டஸ்கர் பொட்லில் கம்பனிக்கு உபகுத்தகைக்கு விடப்பட்டது. இதனால், ஏழுதோட்டங்களின் தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. இவ்விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், நான் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளின் பேரில் அடுத்த மாதத்திற்குள் உபகுத்தகை இரத்து செய்யப்பட்டு, நமுனுகலை பிளான்டேசன் நிறுவனமே குறிப்பிட்ட தோட்டங்களைப் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன், ஏழுதோட்டத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சட்டபூர்வ கொடுப்பனவுகளையும் அந்நிறுவனமே செலுத்த வேண்டுமென்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் பல்வேறு நன்மைகள் கிடைக்கவுள்ளன" என்றார்.