* பொகவந்தலாவை மேதினக் கூட்டத்தில் மனோகணேசன்
நாட்டின் ஏனைய இனங்களுக்கு சமனாக எமது மக்கள் வளர்ந்துவிட வில்லையென்றால் அதற்கு காரணம் மாறி, மாறி ஆட்சியமைக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் ஆட்சியாளர்களே என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜ.தொ.கா. மேதினப் பேரணியிலும் ஊர்வலத்திலும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மனோகணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது; ஜ.தொ.கா. தலைவர் அப்துல் அஸீஸ், இ.தொ.கா. தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகிய இருவரும் இந்தியவம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நியமன எம்.பி.க்களாக இருந்தார்கள் ஏனென்றால் அன்று மலையக மக்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் இருக்கவில்லை.
எமக்கு தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. இன்று நிலைமை மாறிவிட்டது. மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் நூற்றுக்கணக்கான மலையகப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். இன்று எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. அமைச்சுக்கள் இல்லை. அதனால் அபிவிருத்தி இல்லை என்று எவரும் ஒப்பாரிவைக்கமுடியாது.
எமக்கு அரசியல் அதிகாரம் இல்லாததால் மலையகத்தை அபிவிருத்தி செய்யமுடியவில்லை என்று எவரும் காரணம் காட்ட முடியாது.
மலையகத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தும் நாட்டின் ஏனைய இனங்களுக்கு சமமாக எமது மக்கள் வளர்ந்துவிடவில்லையென்றால் வாக்குகளையும் சந்தாவையும் வாங்கிக்கொண்டு மாறி மாறி வரும் அரசாங்கங்களில் அங்கம் வகித்துவரும் ஆட்சியாளர்களிடம் தான் இருக்கின்றது.
ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலேயே முதன் முறையாக அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டது போலவும், இன்றைய அரசாங்கத்தின் பாரிய நிதி நெருக்கடி காரணமாக அடிக்கல் நாட்டுவதை தவிர உருப்படியாக எதுவுமே செய்யமுடியவில்லை என்றும் மலையகத்தில் இன்று சிலர் வாக்குமூலம் கொடுக்கின்றார்கள்.
எங்கள் வாக்குளை பெற்றீர்கள். எங்கள் சந்தாவை வாங்குகின்றீர்கள். எங்கே மலையக அபிவிருத்தி? எங்கே நியாயமான சம்பளம் ? என்று தோட்டத் தொழிலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தப் பொய்யான வாக்குமூலங்கள் பதில்களாக அமைய முடியாது.
இன்று உலக உலா வரும் மலையக அமைச்சர்களின் வரலாறு நேற்று ஆரம்பிக்கவில்லை. 1978 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 வருடங்களாக இந்த அமைச்சு அதிகார வரலாறு தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, விஜயதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரது மாறிமாறிவரும் அனைத்து அரசாங்கங்களிலும் இவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
கிராமிய அபிவிருத்தியிலிருந்து, கால்நடைவளர்ப்பு, சுற்றுலா, புடவைக் கைத்தொழில், பெருந்தோட்ட வீடமைப்பு, தேசிய வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு என்று பாரிய பொறுப்புகளைக் கொண்ட அமைச்சுக்கள் மலையக மந்திரிகளிடம் இருந்துள்ளன. இன்னமும் இருக்கின்றன.
ஆனால் மலையகத்தில் எமது மக்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் வரவில்லை. புதிய காற்று வீசவில்லை. ஆகவே பெரும்பான்மை அரசியல்வாதிகளையும் அரசாங்கங்களையும் குறை கூறிக்கொண்டு தொடர்ந்தும் மலையகத்தில் அரசியல் நடத்த முடியாது. தேர்தல்காலங்களிலும் மேதின விழாக்களிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்ற முடியாது.
அடிக்கல்களை மாத்திரம் நாட்டி வைத்துக்கொண்டு அபிவிருத்தி அதோவருகிறது என்று கட்டியம் கூறும் அரசியல் நடத்தமுடியாது. இவற்றிற்கு முடிவுகாண மலையகப் பெரியோர்களும் தாய்மார்களும் குறிப்பாக இளைஞர்களும் முன்வரவேண்டும்.
இன்றைய எமது மேதின விழாவிலே எதிர்கால மலையகத்தை பற்றிய எமது கனவை நாம் அறிவித்திருக்கின்றோம். தோட்டத்தொழிலாளர்களுக்கு புதிய சம்பளத் திட்டத்தை கோருகின்றோம். துன்புறும் நமது மக்களுக்கு மாவும், மண்ணெண்ணையும், மானியமாக கேட்கின்றோம். அரசியல் தொழிற்சங்க செல்வாக்குடன் நடைபெறும் கள்ளச்சாரய காலசாரத்திற்கு முடிவைக் கோருகின்றோம்.
டிக்கோயாவில் அமையும் மருத்துவமனை 500 படுக்கைகள் கொண்ட பாரிய மருத்துவமனையாக அமைக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தை கோருகின்றோம். மலையகக் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்த மலையக பல்கலைக்கழக கல்லூரியை உருவாக்கிடவும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை கோருகின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் மேலும் மூன்று தமிழ் பிரதேச செயலக பிரிவுகளை கோருகின்றோம்.
இந்த தமிழ் பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் ஊழியர்களையும், தமிழ் மொழி மூல நிர்வாகத்தையும் கோருகின்றோம். மலையகத்திலிருந்து சிறுவர்கள் கொத்தடிமைகளாக கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய ஒதுக்குப்புற மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் இனவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர கோருகின்றோம். இவையே மலையகம் தொடர்பிலான மேலக மக்கள் முன்னணியின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தூரநோக்குத் திட்டமாகும்.
இவற்றுடன் எமது மலையகம் தொடர்பிலான தூரப்பார்வையும் இருக்கின்றது. இத்தகைய தகைமைகளுடன் மலையகத்திலே முழுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய காற்றை வீசச் செய்வதற்கும் மேலக மக்கள் முன்னணியின் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் முழு மூச்சுடன் செயற்படவேண்டும் என்பது காலத்தின் கட்டளையாகும் என்றார்.