* மே தினக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன்
மலையக மக்களினதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினதும் அரசியல் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மேதின வைபவம் நேற்று வியாழக்கிழமை பண்டாரவளை நகரில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட அமைச்சர் சந்திரசேகரன் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
"உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்" என்று அறைகூவிய சீன தத்துவஞானி மாவோவின் கருத்திலும் புரட்சிவாத கருத்துக்களை முன்வைத்த லெனின், சேகுவேரா, இன்னும் முகம்காட்டிக் கொண்டிருக்கிற ஃபிடரல் காஸ்ரோ போன்றவர்களின் அரசியல் தத்துவத்தை பாலர் பாடமாக படித்தவன் நான்.
இலங்கையில் இடதுசாரிகள் என்று எனக்கு விபரம் தெரிந்த காலகட்டத்தில் செயற்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா, கலாநிதி என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்றவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வரலாற்றையும் தெரிந்தவன் நான்.
மலையக மக்களின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் அனைத்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலும் இந்நாட்டிற்கு விமோசனமே ஏற்பட முடியாது.
வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வை உலக அரங்குக்குக் கொண்டு சென்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளே! அதேபோல, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எந்த அரசியல் ஆதரவும் இன்றி மலையக மக்களின் நலனுக்காக போராடியதுதான் அவர்களின் ஆரம்பகால வரலாறு என்பதை யாரும் மறுக்கமுடியாது.
மலையக மக்கள் முன்னணியும் அது உருவாகிய காலத்திலிருந்து யாருடைய தயவையும் தேடி நின்று செயல்பட்ட அமைப்பல்ல. எமது அமைப்பு வளர்வதற்குத் தடையாக அரசாங்கமும் மலையகத்தில் செல்வாக்கு பெற்ற அமைப்புகளும் செயல்பட்ட காலத்தில் கூட எதிர்நீச்சல் போட்டே மலையக மக்கள் முன்னணி இன்று தேசிய கட்சிகளுக்கு நிகராக வளர்ச்சியடைந்திருக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி, இன்று ஊவா மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும், தென்பகுதியிலும் தொழிற்சங்க பலத்தையும் அரசியல் பலத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்களுடன் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும் இணைத்தலைவராக செயற்படுவதற்கு அமரர் தொண்டமான் முன்வந்தார். ஆனால், இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினையை அந்நிய பிரச்சினையாக கருதுவதுபோல் தோன்றுகின்றது.
நாம் அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தாலும் மலையக மக்களுக்காக போராடவும் அனைத்து சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கவும் இன்றும் தயாராகவே இருக்கின்றோம். இதுதான் எங்களது அரசியல் நிலைப்பாடாகும்.
இன்று இ.தொ.கா.விலிருந்து சுயலாபத்திற்காக பிரிந்து போனவர்களுக்கு அமைச்சர்களுக்கும் கிடைக்காத அரசின் ஆசீர்வாதம் கிடைத்தது வருகின்றது. அதேபோல் மலையக மக்கள் முன்னணியிலிருந்து பேராசையுடன் பிரிந்து போனவர்களுக்குக்கூட அமைச்சர் பதவிகளும் வாகனங்களும் நிதி ஒதுக்கீடும் அரசின் அங்கீகாரமும் பெருமளவு கிடைத்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழர்களைக் கூறுபோட எவ்விதமான அரசியல் வியூகங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அதற்கு நிகராக மலையக மக்களையும் பிளவுபடுத்தும் விதமாக பல காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இந்நேரத்தில் மிகப்பெரும் அரசியல் சக்திகளாக மலையக மக்கள் முன்னணியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் சில விடயங்களில் புரிந்துணர்வோடு உடன்பாட்டிற்கு வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
நாம் கடந்த மூன்று அரசுகளில் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். ஆனால், எவருக்கும் கடமைப்பட்டவர்களாகவோ அல்லது தன்னலம் கருதி நடந்து கொண்டவர்களாகவோ எமது வரலாறு அமையவில்லை.
அடையாள அட்டை இல்லாமை போன்ற சில அற்ப காரணங்களால் மலையக இளைஞர்களும் யுவதிகளும் அன்றாடம் கைது செய்யப்படுகின்றார்கள். ஆனால், வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் போராட்டத்தை ஆதரித்து மலையக மக்களை வீதியில் இறக்கிவிட்டால் இலட்சக்கணக்கானவர்களை கைது செய்யவேண்டி வரும் என்பதை மலையக இளம் சந்ததியினர் சார்பாக எடுத்து கூற விரும்புகின்றேன்.
ஒருநாள் கால அவகாசத்தில் மலையகத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அத்தகைய நிலை இனியும் ஏற்படுமென்றால் அதனை செய்து காட்டக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை மலையக மக்களின் ஆதரவோடு நிரூபித்துக்காட்டுவோம்.
நமது ஊதிய உயர்வுக்காக தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்தபோதும் மலையக மக்கள் முன்னணியின் முடிவை எதிர்பார்த்து மக்கள் துன்பங்களை தாங்கிக்கொண்டு தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்த நேரத்தில் மலையகம் மாத்திரம் ஸ்தம்பிக்கவில்லை. முழு நாடுமே பொருளாதார ரீதியிலான நெருக்கடியில் திகைத்துப் போயிருந்தபோது ஜனாதிபதி எம்மை நேரடியான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
ஆகவேதான் சம்பள உயர்வுக்காக மட்டும் எமது முழு சக்தியையும் பயன்படுத்துவதைவிடவும் ஒட்டுமொத்தமான அரசியல் அந்தஸ்தினை பெறுவதற்காக மக்களின் ஆதரவைப் பயன்படுத்துவதே தேவையானதென தீர்மானித்து மலையக மக்கள் முன்னணி சில நிதானமான முடிவுகளை எடுத்தது.
தற்போது தமிழ் மக்களின் வெறுப்புக்கு உட்பட்ட ஒருவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தேகிப்பது போல சில சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
இந்த அவலத்துக்கு அவரை உள்ளாக்குவதற்குச் சில சக்திகள் முனைந்து செயற்படலாம். ஆனால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளைத் தெளிவுபடுத்துவதற்கு நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டிய அரசியல் கட்டாயம் மலையக மக்கள் முன்னணிக்கு உள்ளது.மலையக தமிழ் மக்களின் பிரதான அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியிடம் இதைப்பற்றி பேசவேண்டிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்வது ஜனநாயக ரீதியில் அத்தியாவசியமாகவும் உள்ளது.
மலையகத்திற்கு விடிவுகாலம் தேவை. அதற்காக எம்மோடு கரம் சேர்ப்போரை நாம் அரவணைப்போம். அதனை உதாசீனப்படுத்துபவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும் மக்களை தயார்படுத்துவோம்.
மலையக மக்களின் பிரச்சினைகளைப் போலவே வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் இன உணர்வோடும் உரிமையோடும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இந்தியாவின் பங்களிப்பினை யாருமே உதாசீனப்படுத்தவே முடியாது. இந்தியாவின் பங்களிப்போடு மாத்திரமே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என்பதனை நான் இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவில் வைத்தும்கூட எல்லா அமைப்புகளிடமும் வலியுறுத்தியுள்ளேன். எமது இந்த முயற்சி வெற்றியளிப்பதற்கு எம்மால் இயன்றவரை செயல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றோ, தடை செய்யப்பட்ட அமைப்பென்றோ எவராவது குரல் எழுப்பினால் அதற்கு எதிரான நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருப்போம் என்பதனை இந்த மேதினத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
நாளுக்கு நாள் பலபேர் மரணித்து மறையலாம். ஆனால், சரித்திரம் மறையாது. அது சரியான திசையை நோக்கி நித்தம் பயணித்துக் கொண்டே இருக்கும். அந்த வரலாற்றை முன்கொண்டு செல்லப்போவது மலையக மக்கள் முன்னணியேயாகும்.