* நானு ஓயா மே தின கூட்டத்தில் அமைச்சர் அருள்சாமி
மலையக சமூகம், கௌரவமான ஒரு சமூகமாக தன்னை வளர்த்துக் கொள்வதற்கு வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் எஸ்.அருள்சாமி தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைக்கின்ற ஒரு இனம் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைக்கும் மலையகத் தொழிலாளர்களே என்பதை அரசு மறந்து விடக்கூடாது என்றும் அவர்தனது மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் விடுதலை முன்னணியும் ஆசிரியர் விடுதலை முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்த மே தின ஊர்வலமும் கூட்டமும் நேற்று நானு ஓயா நகரில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் அருள்சாமி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; மலையக மக்களை பொறுத்த வரையிலே மே தினம் என்பது வெறும் வேடிக்கை நிகழ்வாக அமைந்து விடக் கூடாது என்பது தான் தொழிலாளர் விடுதலை முன்னணியினதும் ஆசிரியர் விடுதலை முன்னணியினதும் கொள்கையாகும்.
எனவே தான், மலையக வரலாற்றிலே முதன் முறையாக தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமல்லாமல் இந்த சமூகத்தை கட்டி எழுப்புகின்ற பணியிலே ஈடுபட்டிருக்கின்ற கல்விசார் சமூகமாகிய ஆசிரியர்களும் இணைந்து இந்த மே தின விழாவை சிறப்பாக நானுஓயா நகரிலே இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒன்று கூடலில் நாம் நடத்துகின்றோம்.
எமது சமூகம் இந்த நாட்டிலே குடியேறி இன்று 200 ஆண்டுகளை எட்டிப் பிடிக்கின்ற இக் கால கட்டத்திலும் பல மே தினங்களை நாம் சந்தித்திருந்தாலும் கூட எங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. அதனை வெற்றி கொள்வதற்கு நாம் வழிதேடிக் கொள்ளவில்லை. எனவே இதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாக இந்த சமூகத்தை வழி நடாத்தி வந்த தான்தோன்றித்தனமான தலைமைகளுடைய செயற்பாடு என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே, இந்த சமூகம் மேலோங்க வேண்டும் என்றால் அந்த சமூகத்தை வழி நடத்துகின்ற தலைமைகளின் கையிலே தான் இது தங்கி இருக்கின்றது என்பதையும் நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்ற மலையக சமூகம் தன்னுடைய உரிமைகளை இழந்த சமூகமாக தொடர்ந்து வாழ முடியாது. எம்மை வழி நடாத்திய தலைவர்களின் பிழையான தலைமைத்துவம் தான் இந்த நிலைமையை மலையகத்தில் தோற்றுவித்திருக்கின்றது.
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று கூறுகின்ற அதேநேரத்திலே மலையகத் தலைவர்களே மலையக மக்களின் விடிவுக்காக ஒன்றுபடுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுடைய சாக்கடை அரசியல் கொள்கைகளையும், அரசியல் சுயநலன்களையும் ஒதுக்கி வைத்து விட்டு உங்களை வாழவைக்கின்ற இந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக நீங்கள் எல்லோரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.