* அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் தெரிவிப்பு
தமிழர்களின் கலைப்பண்பாடுகள் உயரிய வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக தீர்க்கதரிசனமான சிந்தனையுடன் பல கட்டமைப்புகளை எமது தலைவர் பிரபாகரன் உருவாக்கியுள்ளாரென விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் கலைப்பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு சங்கநாதம் ஒளிப்பேழை-02 தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகளிர் கலைப் பண்பாட்டுக் கழகம் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது என்பது மகிழ்வுக்குரியது. எமது விடுதலைப்போராட்டத்துடன் மக்களை கருத்தியல் ரீதியாக அணி திரட்டுவதில் மகளிர் கலைப்பண்பாட்டுக் கழகம் செயற்பட்டு வந்திருக்கிறது.
கிராமம் கிராமமாகச் சென்று விடுதலை உணர்வுதேச உணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் மகளிர் கலைப் பண்பாட்டுக்கழகம் ஈடுபட்டு வந்திருக்கின்றது. எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய மக்கள் அணியை அணிதிரட்டுவதில் மகளிர் கலைப்பண்பாட்டுக் கழகத்தின் பங்கு அளப்பரியது. விடுதலைப் போராட்டத்தில் மக்களைப் போராட்டப் பங்காளியாக்குவது என்பது ஒரு நெருக்கடியான சூழலில் இலகுவான காரியமல்ல. பொருண்மிய நெருக்கடி, வளப்பற்றாக்குறைகள் போன்ற இடர்களுக்கு மத்தியில் கலைப்பயணம் மேற்கொள்வது என்பது இலகுவான விடயமல்ல.
எமது விடுதலைப் போராட்டத்தில் கலைஞர்களும் போராளிகளும் சமனான பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே போர்க்களங்களில் கலைஞர்களால் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் மக்களை அணி திரட்டுவதில் மகளிர் கலைப்பண்பாட்டுக் கழகம் ஈடுபட்டிருக்கின்றது. ஒரு தேசம் மொழி, கலை, பண்பாடுகளால் பல மடையும் போது விடுதலைப் போராட்டம் பலம் பெறுகின்றது. தமிழர்களின் கலைகளையும் பண்பாடுகளையும் சிதைக்க வேண்டும் என்பதற்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் முயன்று வருகின்றது.
அதில் ஒரு போதும் சிங்களப் பேரினவாதம் வெற்றிபெறப் போவதில்லை. கலைஞானம் இல்லாத ஒரு இனத்திடம் விடுதலையுணர்வு பிறக்காது. எமது தலைவர் இதன் காரணமாகவே தமிழர்களின் கலைப்பண்பாடுகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். இன்றைய மதிப்பளிப்பால் எமது தலைவர் மகிழ்வடைவார். எமது புலம் பெயர் மக்களின் உறவிணைப்புப் பாலமாக கலைகள் விளங்குகின்றன எனவும் நடேசன் தெரிவித்தார்.