* அஸ்வர் தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர் மர்ஹும் அன்வர் இஸ்மாயில் ஆரம்பித்து வைத்த அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் நிச்சயமாகப் பூர்த்திசெய்து வைக்கும். இதனை ஜனாதிபதி மிகவும் வலியுறுத்தி வருகின்றார் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.ம.சுமுவின் ஆதரவாளர்களை ஆதரித்து சம்மாந்துறை, மூங்கிலடி வீதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அஸ்வர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
அன்வர் இஸ்மாயில் வெற்றிகரமான அரசியல் எதிர்காலத்துடன் வீறுநடைபோட்டு வந்தார். அவர் ஒரு செயல் வீரர், எடுத்ததை நடத்தி முடிக்கும் கர்ம வீரர், ஐ.ம.சு.மு. அரசின் செயற்றிறன்மிக்க ஒரு அரசியல்வாதியாக மிளிர்ந்தார். அவர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றிருந்தபோதிலும் இத்தொகுதியில் அவர் ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்தார். எனவே, அவரது இலட்சியங்களைப் பூர்த்திசெய்து தரவேண்டியது இவ்வரசின் கடனாகும்.
இப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் சேர்ந்து அதன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றபோதும் உண்மையான ஐ.தே.க.வினர் மீது அவர்கள் வசைபாடி வருகின்றனர். ஐ.தே.க.வின். வேட்பாளராக வருவது ஒர் அவமானம். அந்தளவுக்கு ஐ.தே.க.சென்றுள்ளது என ஒரு கல்விமான் கூறினார்.
நௌஷாட் மஜீட்டை கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முதன்மை வேட்பாளராக நிறுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கூறினார். அவ்வாறு நௌஷாட் வெற்றிபெற்றால் தன்னுடைய தலைமைப் பதவி பறிபோய்விடும் எனப் பயந்த ரவூப் ஹக்கீம் தனது பதவியை இராஜிநாமாச் செய்து நௌஷாட்டைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவிட்டு தானே தேர்தலில் குதித்துள்ளார். அவருடைய தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்காகவும் தனது அரசியல் நலனுக்காகவும் இந்த சமூகத்தைப் பலிக்கடாவாக்க அவர் தயங்கமாட்டார்.
எனவே, வெற்றிலையின் பக்கமே வெற்றிஇல்லை. சமீபத்தில் நம் நாட்டுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி அஹமத் நஜாதி இந்நாட்டு அரசுக்கும் சமயத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் புதுச்சிந்தனையை ஏற்படுத்திச் சென்றுள்ளார். நமது ஜனாதிபதி ஒரு செயல் வீரர். அருள் நெஞ்சம் கொண்டவர். அவருக்காக எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறிச் சென்றுள்ளார். எதிர்காலத்தில் சவூதி அரேபியா, குவைத், கட்டார், டுபாய் போன்ற அரபு நாடுகளினதும் உதவிகளைப் பெற்று நாம் கேட்டும் பார்த்துமிராத அளவுக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி திடசங்கற்பம் பூண்டுள்ளார் என்றார்.
இக் கூட்டத்தில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, சம்மாந்துறை ஷ்ரீ.ல.சு.க.அமைப்பாளர் சட்டத்தரணி அன்வர் சியாத், கோட்டே ஷ்ரீ.ல.சு.க.அமைப்பாளர் அஸ்லம் குறைஷ், மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தைச் சேர்ந்த முஹமத் ஜபல் தாரிக் உட்பட பலரும் உரையாற்றினர்.