* நௌஷாத் எம்.பி. குற்றச்சாட்டு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வெற்றி பெறுவது எவ்வாறு அவசியமோ அதேபோன்று சரியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்ளுக்கு வாக்களிப்பதும் நமது கடமை. பிழையானவர்களை தெரிவு செய்து அனுப்பிவிட்டு பின்னர் கவலைப்படுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌஷாத் தெரிவித்தார்.
அண்மையில் சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
அம்பாறை மாவட்டத்தில் எவ்வளவு கூடுதலான உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்றார்களோ அதுவே மாகாண சபைக்கான வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றது. ஐ.தே.கட்சிக்கு 9 இற்கு மேற்பட்ட ஆசனம் கிடைக்க நமது முஸ்லிம் சமூகமும் தமிழ்ச் சமூகமும் கூடுதலாக உழைக்க வேண்டும். அதேநேரம், இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக எந்தவொரு முஸ்லிம் உறுப்பினர்களும் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து செல்லமாட்டார்கள் என்பதும் உறுதி.
சம்மாந்துறையிலே இரண்டு பேர் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் இருவரையும் மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்ய வேண்டுமானால், நாம் ஒற்றுமைப்பட்டு செயல்படவேண்டும். அவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இருவரையும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்ய முடியும். தேர்தல் தினத்தன்று அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் பாரிய வாக்குமோசடிக்குத் தயாராவதாக நமக்கு செய்திகள் கிடைத்து வருகின்றன.
அரசாங்கம் தனது இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த முயலலாம். இவை எல்லாவற்றையும் கடந்து நாம் தேர்தலை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். கிழக்கு யாரிடமிருந்து ஏன் விடுவிக்கப்பட்டது என்ற கேள்வி எம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. எமது பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை பார்க்கின்றபொழுது இப்பொழுதுதான் இங்கு பயங்கரமான நிலை தோன்றியுள்ளது என்றார்.