* திருமலை மாவட்ட வேட்பாளர் பாயிஸ் தெரிவிப்பு
கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளைக் கண்டது இந்த ஆட்சியில் தான் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபைக்கான திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
கிண்ணியா, மாலிந்துறையிலுள்ள அவரது தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
"இன்று நமது பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில்பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது. அதனடிப்படையில் தான் எமது தலைவர் அமைச்சர் அதாவுல்லா புல்மோட்டை இல்மனைற் கூட்டுத்தாபனத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிலும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம்.
கடல்கோள் அனர்த்தத்துக்குப் பின்னர் கிணற்று நீரை குடி நீராகப் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. எனவே, கிண்ணியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குறைந்த கட்டணத்தில் குழாய் நீரிணைப்பு வழங்கியுள்ளோம்.
கிண்ணியாவில் நீரிணைப்பை மறுசீரமைக்கும் வகையில் பல மில்லியன் ரூபா செலவில் புதிய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை செயற்றிறன் மிக்க வகையில் மக்கள் பாவனைக்குத் தரவுள்ளோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கமநெகும திட்டத்தின் கீழ் தான் கிராமப்புறங்கள் கொங்கிறீட் வீதிகளைக் கண்டுள்ளன. இவ்வாண்டு இத்திட்டத்துக்காக 620 மில்லியன் ரூபா திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளும் இன்னும் பல அபிவிருத்தி வேலைகளும் தொடர அனைவரும் எமக்கு ஆதரவை வழங்க வேண்டும்".