* அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற செயல்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என தெரிவித்துள்ள கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் இதனை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது மக்கள் அரசாங்கக் கட்சிப் பிரதிநிதிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மகிந்த சிந்தனை, கமநெகும மகநெகும ஆகிய செயல்திட்டங்களின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் 200 அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் இவ்வாறு கூறினார்.
கிண்ணியா-சூரங்கல் கிராமத்திற்கான புதிய மின் விநியோக திட்டம், இலங்கை போக்குவரத்துச் சபையின் கிண்ணியா சாலைக்கு பஸ்வண்டிகள் கையளிப்பு, தபால் அத்தியட்சகர் அலுவலகம் திறப்பு, பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள், மீள்குடியேற்ற கிராமங்களுக்கான மின் விநியோகம் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இங்கு அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் மேலும் பேசுகையில்; கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்க கட்சியை ஆதரித்து பிரதிநிதிகளை மாகாண சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் பிராந்திய ரீதியாக முரண்பாடற்ற நிர்வாகத்தை அமைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுகளில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதியமைச்சர்களான ஹுஸைன் பைலா, கே.ஏ.பாயிஸ், திருகோணமலை மாவட்ட வேட்பாளர் டாக்டர் லாபீர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.