* பஷீர் சேகுதாவூத்
அரிசி, மா, சீனி போன்றவைகளுக்காகவும், சோற்றுப் பார்சலுக்காகவும் முஸ்லிம்கள் கடந்த 20 வருடங்களாக இரத்தம் சிந்தவில்லை. தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காவே அவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்தனர்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் யானைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூர் காயர் வீதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
ஐக்கிய தேசியக் கட்சி ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினைக் கைப்பற்றினால் முஸ்லிம்கள் "சொப்பிங்" பைகளுடன் இடம்பெயர வேண்டும் என ஹிஸ்புல்லாஹ் கூறிவருவது வீண் பிதற்றலே. கடந்த 20 வருடங்களாக வேறு வார்த்தைகளின்றி இதையே அவர் கூறி வருகின்றார்.
அன்றிருந்த நிலைமையைப் போல்லல்லாது இன்று முஸ்லிம் மக்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம் டட்லி- செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய ஒப்பந்தங்கள் போன்று கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நன்மைகளுக்காக வலுவான ஒப்பந்தமொன்று இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண நிலபுலன்களையும், உரிமைகளையும் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை இனமே ஆள்வதற்கு இத் தேர்தலை தமிழ், முஸ்லிம் மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழர், முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் உரிமை கிடையாது.அவர்கள் வெளிநாடுகளுக்குத் தான் செல்ல வேண்டும் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவிற்குத் தான் செல்ல வேண்டும் என ஹெல உறுமய கட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றது. இந்தச் கட்சியைத்தான் தற்போதைய அரசாங்கம் தன்னுடன் கூட்டுச் சேர்த்து வைத்துக் கொண்டு செயற்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் ஹெல உறுமய சொல்வது தான் சரி என்று ஆகிவிடும். எனவே இந்த வரலாற்றுத் தவறினை சிறுபான்மை மக்கள் ஒருபோதும் செய்துவிடக் கூடாது.
அநியாயங்களுக்கு உடன்படுகின்ற சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் இருந்து விடக்கூடாது.
முஸ்லிம் சமுதாயம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களுக்காக நமது தலைவிதியை விற்பது சரிதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு இந்த நாடு சொந்தமில்லை. அவர்கள் இந்தியா செல்ல வேண்டும் என ஹெல உறுமய கூறுகிறது. அதனை மகிந்த தலைமையிலான அரசு ஆதரிக்கின்றது.
தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு தமது தாயக மண்ணைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.
நமது மூதாதையர்கள் காடுவெட்டி துப்புரவு செய்து நாம் நிம்மதியுடன் வாழ்வதற்காக உருவாக்கித் தந்த வளம்மிக்க மண்ணை நாம் பாதுகாத்தே ஆக வேண்டும்.
சிறுபான்மை இன மக்களுக்கு எவ்வித அழிவுகள், ஆபத்துக்களும் ஏற்படாத வகையில் நம் கிழக்கு மண்ணை நாம் கைப்பற்றி ஆக வேண்டும்.
தமழ் - முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வுகளை வளர்க்கும் சதி இத்தேர்தலில் அரங்கேறியுள்ளது. இதற்கு நம் சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் மக்கள் பலியாகிவிடக் கூடாது.
அரசுக்கு கூஜா தூக்கும் சில அமைச்சர்களின் பேச்சுகளில் மக்கள் சிக்கிவிடாமல் நம்மை நாமே ஆளும் கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபடுவோம். முஸ்லிம்களின் மார்க்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் அதனைத் தட்டிக் கேட்பதற்கு அருகதை இல்லாத அரசாங்கத்தின் அடிவருடி முஸ்லிம் அமைச்சர்களே இன்று உள்ளனர் என்றார்.