* முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச ஊடகங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், அரசும் தவறாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து வருவதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அரச சொத்துக்களையும், வசதிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் ஆணையாளரின் சுற்று நிருபத்திற்கு முரணாக இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையின் "சதுரங்கம்" இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "தென்றல்" சேவை, பிறை எப்.எம்.மற்றும் லேக்ஹவுஸ் நிறுவன பத்திரிகைகளை அரசு பயன்படுத்தி வருகின்றது. இவ் அரசு ஊடகங்களின் ஊடக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் மிக மோசமான முறையில் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். சதுரங்கம் நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மாத்திரம் இடம் வழங்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அக்கட்சியைச் சார்ந்தவர்கள் உரையாடி வருகின்றனர். பக்கச்சார்பான இந்த செயற்பாடு முன்னொருபோதும் அரசு ஊடகங்களில் இடம்பெறவில்லை.
இந்நிகழ்ச்சிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களுக்கும், அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவர்களது சகாக்களுக்கும் மாத்திரமே நேரங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்படுவதோடு, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, அபகீர்த்திகளுக்கான பதில்களை அளிப்பதற்கான சந்தர்ப்பங்கள் முஸ்லீம் காங்கிரஸுக்கு வழங்கப்படுவதில்லை. அரசின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை மூலம், ஊடக ஜனநாயகம் கேள்விக்குரியதாக்கப்பட்டுள்ளது.
பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பிரபலமான ஒரு அரசியல் கட்சி என்ற வகையிலும், கிழக்குத் தேர்தலில் போட்டியிடும் பிரதானமான ஜனநாயகக் கட்சி என்ற வகையிலும் அரச ஊடகங்களில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடம் தரப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் செய்திகள் ஒலி, ஒளிப்பரப்பப்படாமலும், அரச பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படாமலும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிவிடும் என்ற பயத்தின் அடிப்படையில் இவ்வாறு செயற்படுவதாகத் தோன்றுகின்ற அதேநேரம், அரச ஊடகங்களின் இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.