* ஐ.தே.க. வேட்பாளர் மாஹிர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளையும், நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி கொள்வது உறுதியாகிவிட்டதென, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் சுய கௌரவத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். இத்தேர்தலில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை, அம்பாறை ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெருமளவில் ஆதரவு உண்டு என்று தெரிந்த அரசாங்கம் கிழக்கு மாகாணப் பக்கமே தலைவைத்தும் படுக்காத, வாழ்க்கையிலே கேள்விப்படாத அமைச்சர்களெல்லாம் கடந்த பல தினங்களாக படை எடுக்க வைத்துள்ளனர். எப்படியாவது இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியினை எவராலும் தடுக்க முடியாது.
சில அமைச்சர்கள் இப்போதுதான் கிழக்கு மாகாணத்திலும் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்து அவர்களின் வாக்கைப் பிடுங்க வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒவ்வொரு மூலை முடுக்குகளாக சுற்றித் திரிகின்றார்கள். பழைய கட்டிடங்கள் புதிய கட்டிடங்களாக மாறி திறப்பு விழாக்கள் நடக்கின்றன. கடல்கோள் அனர்த்தத்தின் போது அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய சேவையாக காட்ட முற்படுகின்றார்கள். ஆனால், என்ன நடைபெறுகின்றது. என்ன நடக்கப்போகின்றது என்றெல்லாம் மக்களுக்குத் தெரியும். கிழக்கு மாகாண மக்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள் அல்ல. நடைபெறப்போகின்ற மாகாண சபைத் தேர்தலில் இதற்கெல்லாம் சேர்த்துத்தான் மக்கள் அரசுக்குப் பதிலடி கொடுக்க காத்திருக்கின்றார்கள்.
சுய இலாபத்திற்காகவும் தங்களின் வசதிகளையும் ஆடம்பர வாழ்க்கையையும் மேலும் விரிவாக்கிக் கொள்ளும் நோக்கில் சிலர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்சித் தாவல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் யாராவது கிழக்கு மாகாண முஸ்லிம், தமிழ் மக்கள் யுத்த மேகத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் என்ன உதவிகளை செய்திருக்கின்றார்கள்.
இப்போது அரச வாகனங்களில் அழுக்குப்படாமல் மாலையுடன் வந்து வாக்குக் கேட்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டுமானால் நடைபெற இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு மக்கள் சிறந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்றார்.