வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டனப் பேரணி கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ கீழ் நகரில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பாக இடம்பெற்றது. இலங்கை அரச பயங்கரவாதத்தினால் அருட்தந்தை ஜிம்பிறவுண் அடிகளார், அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார், அருட்தந்தை சம்சன் என்.எதிரிசிங்க அடிகளார் ஆகியோரின் படுகொலைகளுக்கும் இந்நிகழ்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடும் குளிர், மழை, வேலை நாள் ஆகியவற்றினையும் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டனத்தையும், எதிர்ப்பையும் உரத்த குரலில் வெளிப்படுத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் அதிகமான முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கறுப்புக் கொடிகளையும் தூக்கிப் பிடித்தவாறு மக்கள் உரத்த குரலில் ஆவேசகமாக ஒலிக்கவும் செய்தனர் கத்தோலிக்க மதகுருமாரைக் கொல்லாதே! தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொல்லாதே! அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லாதே! மகிந்தராஜபக்ஷ ஒரு பயங்கரவாதி! இலங்கை அரசு ஒரு பயங்கரவாத அரசு! இனவாதிகளை கனடாவுக்குத் தூதுவராக அனுப்புவதனை இலங்கை நிறுத்த வேண்டும்! மகிந்த ராஜபக்ஷவின் கைகள் அப்பாவி தமிழ்மக்களின் குருதி படிந்த கைகள்! தமிழ் மக்களுக்கு நீதி வழங்கு! நாங்கள் கேட்பது அமைதி! வேண்டுவது நீதி! எமக்கு வேண்டும் தமிழீழம்! எனப் பல்வேறுபட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அருட்தந்தை கருணாரட்ணம் மற்றும் மூன்று குருமார்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியையும் மடு மாதா கோயில் ஷெல் தாக்குதலில் சேதப்பட்படுத்தப்பட்ட படம், புனித ஆலயவளாகத்தில் சீருடையில் இராணுவம் நிற்கும் படம் மற்றும் மடு மாதா ஆலய வளாகத்தை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும். ஆலய வளாகத்தை அண்டிய நிலப்பரப்பு அமைதி வலயமாக அறிவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் என்பன கனடிய மக்களுக்கு வழங்கப்பட்டது.