* ஈழவேந்தன் தெரிவிப்பு
எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலை கிழக்கின் விடியல் என்றும் கிழக்கின் உதயம் என்றும் மயக்கும் சொற்களை மகிந்த அரசு கையாண்டு தமிழ் மக்களையும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் திசை திருப்ப முயல்கிறது.
அரசு விரிக்கும் மாய வலையில் நாம் சிக்குவோமாயின் நாம் சின்னாபின்னமாகி சீரழிந்து போவது உறுதி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
1987 ஜூலை 29 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் குற்றம்- குறைகள், முரண்பாடுகள் நிறைய உண்டு. எனினும் இவ்வொப்பந்தத்தில் தெம்பு தருகின்ற ஒரு பகுதி அதன் முன்னுரை ஆகும். இந்த முன்னுரையில் வடக்கும் கிழக்கும் ஈழம் வாழ் தமிழ் மக்களின் தாயகம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளது.
19 ஆண்டுகள் உருண்டு ஓடிய நிலையில் முழுச் சிங்கள நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில், பெயரில் வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு எமது தாயகம் துண்டாடப்பட்டுள்ளது. இக் கசப்பான நிலையை உணராத நிலையில் நாம் இத்தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிப்பது நாம் செய்யும் அரசியற் தற்கொலை ஆகும். பிரித்து ஆள்வது அல்லது பிரித்து அழிப்பது எந்த எதிரியும் கையாளும் வழிமுறை ஆகும்.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கிழக்கில் இணைந்து பிணைந்து வாழ்கிறார்கள். இவர்கள் எப்பிரிவினர்க்கும் ஊறு செய்யும் வகையில் கூறு போடப்படின் எம்மினம் வேரோடும் வேரின் மண்ணோடும் சாய்க்கப்படும்.
ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால், தன் மண்ணை இழந்துவிட்டால் அந்த இனத்தின் வாழ்வு முற்றுப்பெறும். மொழியை இழந்த நிலையில் கூட இனங்கள் வாழ்ந்ததற்கு வரலாறு உண்டு.
ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்குத் தன்னைப் பாதுகாப்பதற்கும் நிலம் தான் தேவை. நிலம் தான் நிலைத்த வாழ்வுகொடுக்கும் . பாலஸ்தீன மக்கள் இழந்த நாட்டை மீட்கப் போராடுகிறார்கள். நாமோ நமது பறிக்கப்படும் மண்ணை பாதுகாக்கப் போராடுகிறோம்.
எமது போராட்டத்திற்கு சட்டவலு உண்டு. வரலாறும் எமக்கு வாய்ப்பாக உண்டு. எனவே தான் எதிர்வரும் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்.
சில இடங்களில் புறக்கணிப்பதில் சிக்கல் இருப்பின் தீமைகள் குறைந்த தீதாத எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து அரசின் ஆதரவோடு இயங்குகின்ற பிள்ளையான் குழு தலை தூக்காதிருக்க கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க சதி செய்யும் அரசை மண்கவ்வச் செய்வோம் என்றும் ஈழவேந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.