குளியாப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சாவை கட்டுநாயக்கா பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்கா 18ஆம் கட்டை பொலிஸ் சோதனைச் சாவடியில் இந்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டனர். பயணிகளும் அவர்களின் பொதிகளும் பயணப்பைகளும் சோதனை செய்யப்பட்டன.
அதன்போது அந்த பஸ்ஸில் கைவிடப்பட்ட நிலையில் கறுத்தநிற பயணப்பை ஒன்று காணப்பட்டது. அதனைத் திறந்து பொலிஸார் சோதனையிட்டபோது உடுபுடவைகளுடன் நான்கு கஞ்சா பொதிகளும் இருந்தன.
இந்தப் பயணப் பொதிக்கு எவரும் உரிமை கோராததால் பஸ்ஸின் சாரதியையும், நடத்துனரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் சகல பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள் குறித்தும் அவர்களின் பொதிகள், பயணப் பைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் கஞ்சா பயணப்பை குறித்து அவதானிக்கவில்லை என்பதால் இருவரையும் கைது செய்ததாக கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.