* கட்சியின் பேச்சாளர் தெரிவிப்பு
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டதற்காக கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெலஉறுமய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளதாவது;
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பேராயர் ஒஸ்வோல்ட் கொமிஸ் பொறுப்பேற்க வேண்டும். அவர் மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தவறிவிட்டார்.
ஈழத்திற்கு தனியான கத்தோலிக்க திருச் சபையை அமைக்க வேண்டும் என்று மன்னார் ஆயர் தெரிவித்திருந்தார். ஏன் அவரின் மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை? மடுவை புனித பிரதேசமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேவாலய நிர்வாகம் அரசிற்கு விடுத்திருந்தது.
படையினர் மடுவைக் கைப்பற்ற முன்னர் அவர்கள் இந்த அறிக்கையை விடுத்திருந்தால் அது நியாயமானது. ஆனால் அவர்கள் தற்போதே இவ்வாறான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மடுவை புனித பிரதேசமாக்கும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் அதனை எமது கட்சி கடுமையாக எதிர்க்கும்.